Subscribe Us

header ads

இஸ்லாஹிய்யாவின் அரபு எழுத்தணிக் கலை கண்காட்சி

TPT Media
புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் நுண்கலை பிரிவு பொறுப்பாசிரியர் ஹாஜா சஹாப்தீனின் வழிகாட்டலில் நுண்கலைப் பிரிவு மாணவியர் ஏற்பாடு செய்த அரபு எழுத்தணிக் கலை கண்காட்சியும் கற்கைநெறிப் போதனாசிரியர் கலாபூஷணம் எஸ்.எஸ்.எம். ரபீக் கௌரவிப்பும் மாணவியருக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். முனீர் தலைமையில் நடைபெற்றது.
இஸ்லாமிய நாகரிகத்தின் பாரம்பரியங்களில் ஒன்றான அரபு எழுத்தணிக் கலை பல காரணங்களினால் மழுங்கடிக்கப்பட்டு வருவதினால் அவற்றை உயிர்ப்பித்தல்; மாணவிகளின் ஆற்றல்களை வெளிப்படுத்துதல்; இதன்பால் ஏனைய முஸ்லிம்களைத் தூண்டுதல்; இஸ்லாஹியாவின் அரபு எழுத்தணிக் கலை பாடநெறியின் பூர்த்தியை முன்னிட்டு போதனாசிரியரை கௌரவித்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக வைத்து இக் கண்காட்சி நடைபெற்றது.
2014.09.27-ம் திகதி கல்லூரி ஷாமில் மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஏ.எம். மிஹ்லார் (பணிப்பாளர் – முஸ்லிம் ஹேன்ட்) கலந்துகொண்டார். அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (தலைவர் – அ.இ.ஜ.உ. புத்தளம் மாவட்ட கிளை), எஸ்.ஆர்.எம். முஸம்மில் (தலைவர் – புத்தளம் பெரியபள்ளி நிருவாக சபை) ஆகியோர் உட்பட அழைக்கப்பட்ட பிரமுகர்கள் சமுகமளித்திருந்தனர்.
கற்கைநெறி போதனாசிரியர் கலாபூஷணம் எஸ்.எஸ்.எம். ரபீக் ஆற்றிய உரையின் சுருக்கம்:
“இறைவன் மனிதருக்கு பல ஆற்றல்களை வழங்கியுள்ளான். அதில் நுண்கலை சம்பந்தமான ஆற்றலும் ஒன்றாகும். ஒவ்வொரு சமயத்தவரும் நுண்கலைகளைப் பிரயோகித்து தமது பாரம்பரிய அழகியற் கலைகளை உயிர்ப்பிப்பவர்களாக உள்ளனர். அவ்வாறே, முஸ்லிம்களின் கலைகளில் அழகியற்கலை இவ் அரபு எழுத்தணிக் கலையாகும்.

முஸ்லிம்களின் கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றிருந்தாலும் பெரும்பான்மையான கலைகளில் இஸ்லாம் பல வரையறைகளை விதித்துள்ளதால் இஸ்லாத்தில் கலைகள் இல்லை என்றாகிவிட்டது. இக் குறையை நிவர்த்தி செய்து இஸ்லாத்தின் தனித்துவத்தை பேணுவதாகவும் பிற சமூகங்களை கவர்ந்து இழுப்பதாகவும் அரபு எழுத்தணிக் கலை அமைந்துள்ளது.
பாரம்பரிய மரபு முறைகள் நவீன தொழிநுட்ப சாதனங்கள் மூலம் மழுங்கடிக்கப்படுவது கவலையைத் தரும் விடயமாகும். எனவே, முஸ்லிம்கள் மத்தியில் உரியவர்களிடம் இக் கலையைக்கொண்டு சேர்ப்பது கடமை எனக் கருதி ஆசிரியர் ஹாஜா சஹாப்தீனின் கோரிக்கைக்கு இணங்கி இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு அரபு எழுத்தணிக் கலையை பயிற்றுவிக்க சம்மதித்தேன்.
ஆசிரியர் ஹாஜா சஹாப்தீனின் மாணவியரின் ஆற்றல்களைக் கண்டுகொண்டு, அவற்றை வெளிப்படுத்தும் விதமாக இக் கற்கைநெறியை வடிவமைத்தேன். நான் மாணவிகளுக்கு அரபு எழுத்தணிக் கலையை கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக வழிகாட்டல்களை மாத்திரம் வழங்கினேன். அவர்களுக்குள் பொதிந்திருக்கும் திறமைகளை நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கண்டுகொண்டேன். இவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கும் அதே வேளையில் நான் மென்மேலும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இதன் பிறகு பல விடயங்களை நானும் கற்றுக்கொண்டேன்.
கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு இம் மாணவிகளிடம் நான் கூறவில்லை. பிறருக்கும் இப் பாரம்பரிய கலையையும் இவ்வாற்றல்களையும் வெளிப்படுத்துமாறு கூறினேன். இதனை கண்காட்சி வடிவில் மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டனர். அல்லாஹ்வின் அருளினால், பலவகை ஊடகங்களிலும் பலவித முறைமைகளிலும் கண்காட்சிக்கான எழுத்தணிகளை இம் மாணவியர் உருவாக்கியுள்ளனர்.
இதன் பிரகாரம் இக் கலைக்கு மிகவும் உரித்துடையவர்கள் இஸ்லாமிய கற்கையை கற்கும் மாணவிகள் என்பதனால், இவர்களை இத்துறையில் பயிற்றுவிக்க இஸ்லாஹிய்யா நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்”.
இக் கற்கைநெறி தொடர்பாக மாணவியொருவர் கூறும்போது, ‘அரபு எழுத்தணிக் கலையின் தோற்றம் முதல் இன்றுவரை விடயங்களை அறிய முடிந்தது. மறைந்திருந்த ஆற்றல்கள் வெளிப்படும் சந்தர்ப்பமாக அமைந்ததுடன் புத்தாக்க சிந்தனைகள் வெளிப்பட்டன. கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த எமக்கு ஆறுதலாகவும் இருந்தது. ஆர்வமற்றவர்கள் கூட தூண்டப்பட்டனர்’ எனக் கூறினாள்.










தொகுப்பு: இஸ்லாஹிய்யா நுண்கலைப் பிரிவு
படங்கள்: Ansaf Zaky

Post a Comment

0 Comments