Subscribe Us

header ads

வருமுன் காப்போம்! இது ஒவ்வொருவர் மீதும் உள்ள கடமையாகும்

(கலாநிதி இனாமுல்லாஹ் மஸிஹுதீன்)

எல்லோரும் தனித்தனியாக கேள்விக் குறிகளோடுதான் இருக்கின்றார்கள். ஒன்றுபடும் பொழுது தங்களுக்குள்ளேயே தீர்வுகளும் விடைகளும் இருப்பதனை புரிந்துகொள்ள மறுக்கின்றார்கள் !

வருமுன் காத்தல் நடவடிக்கைகள் எவை, வந்த பின் அவசரகால நிலைமைகளை கையாள்தல் எப்படி, எங்கள் நண்பர்கள் யார் யார் ? பகைவர்கள் யார் யார் ? வேளியே பயிரை மேயும் நிலைகளில் எவ்வாறு நடந்து கொள்ளுதல் ?

வேற்றுமைகள் களைந்து ஒற்றுமைப்படுதல், அக்கம்பக்கத்தாரோடு நல்லுறவைப் பேணுதல் இவ்வாறு எந்தவொரு விடயம் குறித்தும் முஸ்லிம் சமூகம் இன்னும் சிந்திப்பதாக தெரியவில்லை.

ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள உலமாக்கள், புத்திஜீவிகள், பாடசாலை பலகலை சமூகத்தினர், வர்த்தக விவசாய சமூகத்தினர், ஜமாத்துக்களை சேர்ந்தவர்கள் அல்லாஹ்வுக்காக ஒன்று சேர்ந்து பேசுங்கள் மஷூரா செய்யுங்கள் !

வரட்டுப் பிடிவாதங்களை, கௌரவங்களை, சொந்த பெருமைகளை, இயக்க ஜமாஅத் வெறிகளை மூட்டை கட்டி வையுங்கள்.

பள்ளிவாயல் பரிபாலன சபைகளை அல்லது எங்கோ இருக்கும் பிரபலங்களை, அரசியல் வாதிகளை, சிவில் சன்மார்க்கத் தலைமைகளை மாத்திரம் நம்பி காலம் கடந்து கைசேதப் படாதீர்கள் ! அவர்களை அணுகி வழி கட்டளைகளை பெறுவதில் தவறில்லை.

ஒருவரை ஒருவர் அங்கீகரிக்கவும் மதிக்கவும் பழகிக்கொள்ளுங்கள். கருத்து வேறுபாடுகளை வைத்து பகைமை பாராட்டாதீர்கள். ஒற்றுமைப்படுவதற்கு ஆயிரம் ஆதாரங்களும் நியாயங்களும் இருக்க வேறுபடுவதற்கு ஒரு சில நியாயங்களை தேடி அலையாதீர்கள் !

ஐவேளை தொழுகையிலும் மாத்திரமன்றி ஏனைய நற்கிரிகைகளின் பொழுதும் உம்மத்தின் இருப்புக்காகவும் பாதுகாப்பிற்காகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சுங்கள் !

இளைஞர்களை, சிறார்களை மாத்திரமன்றி எமது பெண் குழந்தைகளையும் யுவதிகளையும் மாதர்களையும் கூட விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குங்கள் !

ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு தராதாரம் வாய்ந்தவர்கள், கற்றவர்கள், பலதுறைகளையும் சார்ந்தவர்கள் இருக்கின்றார்கள். எல்லோரும் கேள்விக் குறிகளோடு மாத்திரமே இருக்கின்றார்கள். தீர்வுகள் விடைகள் தங்களுக்குள் இருப்பதனை அறியாமலே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள் !

வெளிநாடுகளில் வசிப்போர் மற்றும் தொழில்புரிவோர் தங்களை பொறுப்புக்களில் இருந்து தூரமாகி அல்லது விலகி நிற்பதாக எண்ணி விடாதீர்கள் !

தேசிய ஷூரா சபை, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் போன்ற சன்மார்க்க சிவில் தலைமைகள் வழங்குகின்ற அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மக்கள் மயப்படுத்துவதும் அவர்களது பணிகளில் பங்குகொள்வதும் சமூகத்தின் சகல தரப்பினர் மீதும் காட்டாய கடமையாகும், அவர்கள் உங்களிடம் வரும் வரை காத்திருக்காது நீங்கள் அவர்களை அணுகுவதில் ஆர்வம் காட்டுங்கள்.


Post a Comment

0 Comments