Subscribe Us

header ads

புத்தளம் பிரதேசத்திற்கு வெற்றியாக அமைந்த ஹஜ் பெருநாள் இரத்த தான முகாம்


இந்த வருடம் (இன்றுவரை) நடத்தப்பட்ட இரத்த தான முகாம்களில், மிக அதிக எண்ணிக்கை இரத்தம் பெறப்பட்ட முகாம் இதுதான். இது இந்த வாலிபர்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்” என சிலாபம் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் சுசந்த விதானகே PHD (Puttalam Human Development) அமைப்பினரால் ஏற்பாடு செய்த இரத்த தான முகாமின்போது தெரிவித்தார். 



PHD அமைப்பினால், புனித ஹஜ் பெருநாளுடன் இனைந்ததாக மூன்றாவது முறையும் ஏற்பாடுசெய்த இரத்த தான முகாம் 2014.10.07-ம் திகதி நுஹுமான் மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் ஆரம்பித்து மாலை 4.00 வரை நடைபெற்ற இம் முகாமில் 180 ஆண்களும் 20 பெண்களும் இரத்தம் தானம் செய்தனர். இரத்தம் எடுப்பதற்கு முன்னரான வைத்திய பரிசோதனையின் போது 30 பேர்களும் நேரம் போதாமையினால் மேலதிகமாக 15 பேர்களும் திருப்பியனுப்ப வேண்டியேற்பட்டது. வருகை தந்தவர்களில் ஓரிருவரைத் தவிர, பெரும்பான்மை வயது 20 – 45 இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“முஸ்லிம்கள் இரத்தம் தானம் செய்வதில்லை, முன்வருவதில்லை என்ற கருத்து எனக்குள் இருந்தது. இன்று வருகைதந்த ஒவ்வொருவருடனும் பேசியபோது, அவர்கள் தாமாக விரும்பி முன்வந்திருப்பதாக சொன்னார்கள். இரத்தம் தானம் செய்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்பாடு செய்தால் இன்னும் அதிகமானவர்கள் இரத்தம் தானம்செய்வார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்” எனக் கூறிய வைத்தியர் சுசந்த, சிலாபம் இரத்த வங்கி சார்பாக PHD அமைப்பினருக்கும் இரத்தம் தானம்செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார். 
||**தமிழ் சகோதரி ஒருவர் இரத்தம் தானம் செய்தார் என பெண்கள் பகுதியினர் தெரிவித்தனர். 

சிலாபம் இரத்த வங்கியின் வைத்தியர் திருமதி கௌஷல்யா ரூபசிங்க, தாதி அதிகாரி மனோஜ், பொது சுகாதார பரிசோதகர்களான ஜயசிங்க, விஜேசிங்க, லக்மால் உட்பட ஆண் பெண் தாதிமார் கடமையில் ஈடுபட்டனர்.

PHD அமைப்பின் பொருளாளர் என்.எம். நிப்ராஸ் தனவந்தர்களிடம் வேண்டுகோளொன்றை முன்வைக்கின்றார், “இரத்தம் தானம் செய்ய முடியாதவர்கள் நிதி தானம் அல்லது பொருள் தானம் செய்யுமாறு வேண்டிக்கொள்வேன். இரத்த தான முகாமொன்றை ஏற்பாடு செய்யும்போது ஏற்படும் பல்வேறு செலவுகளை ஈடுசெய்வதற்கு இந்த நிதி தானம் பெரும் உதவியாக இருக்கும்”.

PHD-யின் வேண்டுகோளுக்கு இனங்க, நன்றியுரையை ஹிஷாம் ஹுஸைன் சிங்கள மொழியில் நிகழ்த்தினார். 

2012-ம் வருடம் முதல் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபடும் PHD (Puttalam Human Development) அமைப்பானது, புத்தளம் நகரில் இயங்கும் சமூக நல அமைப்புக்களில் ஒன்றாகும். சிலவற்றை சுயமாகவும் இன்னும் பலவற்றை சகோதர அமைப்புக்களுடன் இனைந்தும் முன்னெடுக்கின்றனர்.

நன்றி: The Puttalam Times






Post a Comment

0 Comments