இறுதி ஆட்டம்
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அக்ஷர் பட்டேலும், மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பாலுக்கு பதிலாக ஜோசன் ஹோல்டரும் சேர்க்கப்பட்டனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் வெய்ன் பிராவோ முதலில் இந்தியாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதையடுத்து ஷிகர் தவானும், ரஹானேவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவிய போதிலும், துடுப்பாட்டத்துக்கும் உகந்ததாகவே காணப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஹோல்டரின் பந்து வீச்சில் சிக்சரை பறக்க விட்ட தவான், ஜெரோம் டெய்லரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதே போல் ரஸ்செலின் ஓவரில் ரஹானே 3 பவுண்டரி ஓட விட்டு உற்சாகப்படுத்தினார்.
முதல் விக்கெட்டுக்கு 70 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தவான் (35 ஓட்டங்கள், 35 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஸ்செல் வீசிய பந்தை தூக்கியடித்த போது பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் புகுந்தார். களத்தில் இருந்த ரஹானே தனது 7-வது அரைசதத்தை கடந்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 142 ஓட்டங்களை தொட்ட போது, ரஹானே 68 ஓட்டங்களுடன் (79 பந்து, 7 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார்.
இதன் பின்னர் கோலியுடன் சுரேஷ் ரெய்னா கைகோர்த்தார். இருவரும் மேற்கிந்திய பந்து வீச்சை நொறுக்கினார்கள். ஆரம்பத்தில் இருந்தே பந்து வீச்சாளர்கள் அதிகமான ‘பவுன்சர்’களை போட்டனர். ஆனால் அவர்களின் ‘பவுன்சர்’ யுக்திக்கு பலன் கிடைக்கவில்லை. இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பவுன்சர்களை நெருக்கடியின்றி சமாளித்து அசத்தினர். இதனால் இந்தியாவின் ஓட்ட குவிப்பை எதிரணியால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கோலி சதம்
ரெய்னா, கோலியின் அதிரடியில் ஓட்ட எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்ததுடன், மைதானமும் ரசிகர்களின் குதூகலத்தால் ஆர்ப்பரித்தது. வெய்ன் பிராவோவின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 19 ஓட்டங்களை சேகரித்தனர். அபாரமாக ஆடிய ரெய்னா 71 ஓட்டங்களுடன் (58 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து டோனி ஆட வந்தார்.
மறுமுனையில் விராட் கோலி தனது 20-வது சதத்தை பூர்த்தி செய்தார். மேற்கிந்திய தீவுக்கு எதிராக அவரது 3-வது சதமாகும். இதற்கிடையே டோனி 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆனாலும் கோலியின் பிரமாதமான ஆட்டம் இந்தியா வலுவான ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவியது. கடைசி பந்தில் ரன்-அவுட் ஆன கோலி 127 ஓட்டங்களுடன் (114 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களை குவித்தது. கடைசி 13 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 132 ஓட்டங்களை திரட்டியது குறிப்பிடத்தக்கது.
சாமுவேல்ஸ் சதம் வீண்
அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர் வெய்ன் சுமித் எவ்வித ஓட்டமும் பெறாது ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. மர்லன் சாமுவேல்ஸ் மட்டும் தனது 7-வது சதத்தை அடித்து மிரட்டினாலும், அது அந்த அணியை கரைசேர்க்க போதுமானதாக இல்லை. சாமுவேல்ஸ் (112 ஓட்டங்கள், 106 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) கடைசி விக்கெட்டாக போல்டு ஆனார். முடிவில் மேற்கிந்திய அணி 48.1 ஓவர்களில் 271 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்திய அணியும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. விசாகப்பட்டினத்தில் நடக்க இருந்த 3-வது ஆட்டம் புயல் மழையால் ரத்தானது. இத்துடன் எதிர்பாராதவிதமாக மேற்கிந்திய பயணம் நிறைவுக்கு வந்தது.

0 Comments