சிலாபம் திண்ணனூரான்
புராதன காலத்தில் இருந்தே மனிதர்களின் அணிகலன்கள், தங்கம், வெள்ளிகளால் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. காலச்சூழல், ஆட்சிநிலை, மக்களின் போக்கு ஆகிய நிலைகளுக்கு ஏற்ப அணிகலன்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. மன்னர்கள் காலத்தில் தங்க, வெள்ளி அணிகலன்கள் பிரசித்தி பெற்று இருந்தன.
இந்த அற்புத அணிகலன்களை தயாரிப்பவர்களையே ஆசாரி என்கிறோம். அவ்வாறான ஒரு நகை உற்பத்தி தொழிலில் ஈடுபடும் ஒருவரையே இன்று உங்கள் முன் அழைத்து வந்துள்ளோம்.
அறுபத்தெட்டு வயதை தொட்டுவிட்ட அனுபவசாலியான பாலா எனும் எம். பாலசுப்பிரமணியம் தான் இவர். இந்திய வம்சாவளித் தமிழர் இவர். பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர். கொழும்பு கொம்பனித்தெரு தமிழ் பாடசாலையில் அக்காலத்தில் ஏழாம் வகுப்பு வரை கல்வி கற்றுள்ளார்.
இவரின் தந்தையும் தங்களின் குலத்தொழிலான தங்க நகைகளை தயாரிக்கும் ஆசாரி தொழிலையே மேற்கொண்டுள்ளார். பாடசாலையை விட்டு விலகிய பாலா, முதலில் பல பட்டறைகளில் சிறுவர் தொழிலாளியாக இணைந்துள்ளார். இத்தகைய தொழிலாளிகளை தொழிலை அக்காலத்தில் 'எடு பிடி ஆள்' என்பார்கள். சிறு பணிகளை என சொல்லி பலர் இத்தொழில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறான சிறு பணியாளர்களுக்கே தினமும் வேலை அதிகம். பலரும் வேலை வாங்குவார்கள். இவ்வாறு பட்டறைகளில் சிறுவயதிலேயே இணைந்து இத்தொழிலின் நுட்பங்களை தெரிந்துக கொண்டார் பாலா.
1966 இல் கொழும்பின் பிரபல நகை வர்த்தக ஸ்தாபனமொன்றில் தனது இருபது வயதில் இவரின் சித்தப்பாவே சேர்த்து விட்டாராம். அங்கு தொழிலின் நுட்பத்தை அறிந்து இவரின் திறமைகளை வெளிக்காட்டியுள்ளார். அன்று ஒரு 'டயமன்ட்' செயின் செய்வதற்கு கூலியாக இவருக்கு பத்து ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. செயின் ஒன்றை தயாரிக்க அக்காலத்தில் இவருக்கு இரண்டு நாட்கள் செல்லுமாம். அன்று தங்கம் ஒரு பவுணின் விலை 70 ரூபாவுக்கும் 60 ரூபாவுக்கும் மத்தியிலேயே இருந்துள்ளது. அந்நிலையில் பத்து ரூபாய் எனப்படுவது அன்று பெரும் பணமாகும்.
சிறிது சிறிதாக தங்க வேலைகளையும் அதன் நுட்பங்களையும் அறிந்துக் கொண்டேன். பெண்களுக்கான் காப்பு, தாலிக் கொடி, செயின் வகைகள், அச்சுக்காப்பு என முக்கியமான நகை வேலைகளைக் கற்றுக் கொண்டேன். இன்றும் இந்த நகைகளை நிர்மணிப்பதில் முன்னிலை வகிக்கின்றேன் எனக்கு முதலில் தங்க கட்டியை உருக்குவதிலிருந்து அனைத்து நுட்பங்களையும் கற்றுக் கொடுத்தவர் என் அப்பா முத்தையா ஆசாரியே. அவரே எனது குரு இத்தொழில் மிகவும் புனிதமானது எனத் தெரிவித்தார் பாலசுப்பிரமணியம்.
தங்க நகைகளின் குறைகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றன எனக் கேட்டோம்.
'இலாபம் நோக்கம் கொண்டு செம்பு அதிகமாக சேர்க்கப்படுவதால் தங்கத்தின் தரம் குறைவாகும். தங்கத்தின் இக்குறையத் தவிர ஏனைய குறைகள் தரத்தை குறைக்கமாட்டா. எந்நிலையில் இருந்தாலும் தங்கம் தங்கம் தான் ஆனால் தங்கத்தில் வேறுபொருட்கள் சேர்க்கையிலேயே அதன் தரம் குறைவடைகின்றது. அக்காலத்தில் தங்கத்தை, கல்லில் உரசி தேங்கி நிற்கும் தங்கத்தின் மீது நெருப்பு தண்ணீர் எனப்படும் அசிட் திரவத்தையும் பின்னர் உப்பத் தண்ணீரையும் தடவி விட அதன் மூலமாக தங்கத்தின் தரத்தை அறிய முடிந்தது.
இவ்வாறு பரிசோதிக்கையில் கல்லில் தேங்கி நிற்கும் தங்கம் பரிபூரணமாக நல்ல முறையில் மஞ்சள் நிறத்தை காட்டினால் அத்தங்கம் 24 கரட் பெறுமதியை கொண்டது எனக் கண்டறியப்படும். மஞ்சள் நிறம் குறைவாக தென்பட்டால் 22 கரட் எனத் தீர்மானிக்கப்படும். இந்த இரண்டு பிரிவுகளுக்கும் மேலாக பச்சை நிறம் தென்பட்டால் 18 கரட்டுக்கும் கீழான தன்மையைக் கொண்டது. இவ்வாறான நிலை 1977 களுக்கு முன்னர் கிராமப் புறங்களின் புழக்கத்தில் இருந்தது. இதை தம்பாக்கு என அழைப்பர். இன்று தம்பாக்கை எவருமே பாவிப்பதில்லை. இவ்வாறு வெள்ளியையும் உரசி தரம் பார்க்கலாம். உரைத்துப் பார்க்கும் கல் உரைகல் எனப்படும். தங்கத்தின் தகுதியை எடுத்துக் காட்டும் கல்லும் இந்தியாவிலிருந்தே இறக்குமதியாகின்றது என்றார் பாலா.
இன்று இவ்வாறு உரசி நேரத்தையும் வீணாக்கத் தேவை இல்லை. இன்று இயந்திரம் மூலம் பரிசோதனையை மேற்கொள்ளலாம். இதனால் இன்று தங்கத்தில் தரத்தை குறைக்க முடியாதுள்ளது. மனிதன் தவறு செய்தாலும் இயந்திரம் அடையாளம் காட்டிவிடும் என பாலா தங்கத்தின் தரத்தை எமக்கு முழுமையாக அடையாளம் காட்டினார்.
நல்ல தங்கத்தை 22 கரட் என்றும் புடைத் தங்கத்தை 24 கரட் என்றும் தரம் பிரிக்கப்படும். 24 கரட் தங்கத்திலும் நகைகளை தயாரிக்கலாம். ஆனால், 24 கரட் தங்கத்தில் தயாரிக்கப்படும் நகைகள் பித்தளைப் போன்றே காட்சிக் கொடுக்கும். இதன் காரணமாகவே ஒரு பவுண் தங்கத்திற்கு இரண்டு மஞ்சாடி செம்பு சேர்வை சேர்க்கப்படுகின்றது. இவ்வாறு செம்பு தங்கத்திற்குள் இணைக்கப்படுவதால். அது 22 கரட்டாக அடையாளம் பெறுகின்றது. 22 கரட் தங்கத்திற்கும் குறைவானதிற்கு வர்த்தக சந்தையிலும் பொதுமக்களிடமும் மவுசு குறைவு எனவும் தெரிவித்தார்.
'இருபது வயது முதல் தங்கத்தோடு வாழ்ந்து வருகின்றீர்கள். அன்றும் இன்றும் இத்துறையில் என்ன வித்தியாசத்தைக் கண்டுள்ளீர்கள்?' எனக் கேட்டோம்.
இன்று நிறைய வித்தியாசங்களை இத்துறையில் காணலாம். முன்னர் தங்கத்தின் விலை மிகக் குறைவாக இருந்தது. 1968களில் ஒரு பவுண் தங்கத்தின் விலையானது 70 ரூபாவுக்குள் இருந்தது. அன்றைய பொருளாதார விலைக்கு அன்றைய தங்கத்தின் விலை அதிகரிப்பாக இருக்கலாம். இன்று ஒரு பவுணின் விலை 45 ஆயிரத்தை எட்டிவிட்டது. இது பெரியதோர் வித்தியாசமாகும். 1968இல் இன்றைய ஒரு பவுண் விலைக்கு செட்டியார் தெருவில் அன்று பெரும் வர்த்தக கட்டிடங்கள் இரண்டை வாங்கக்கூடிய நிலை இருந்தது.
தங்கத்தின் விலை கூடிவிட்டது என்பதற்காக தங்க ஆபரணங்களை மக்கள் வெறுக்கவில்லை. மக்களின் அன்றாட வாழ்வோடு அன்றும் வாழ்வோடு அன்றும் இன்றும் தங்க ஆபரணங்கள் இணைந்து விட்டன. மக்களின் அவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. அனைத்து இனத்தவர்களினதும் திருமண ஆரம்ப பேச்சு வார்த்தைகளில் தங்கமே பிரதான இடத்தை பெற்று வாழ்கின்றது. திருமண வீட்டுக்கு வருகைத் தரும் சொந்தபந்தங்;கள் கூட மணமகளின் முகத்தைப்பார்த்து கதைக்கமாட்டார்கள். மணமகளின் கழுத்தில் கிடப்பது அசல்தங்கமா, போலி தங்க நகைகளை என்பதையே உற்றுப்பார்ப்பார்கள். உண்மையிலேயே இது ஒரு சடங்காகவே இன்று மாறிவிட்டது. இது வருந்ததத் தக்கவிடயமாகும். இச்சடங்கு சமுதாயத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது என்கிறார் பாலா.
தங்கத்திற்குள்ளும், தங்கத்திற்கு வெளியேயும் எந்தளவில் மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது என்பதையும் அவர் விளக்கினார். அவரின் வார்த்தைகளில் நிதர்சனமான உண்மைத் தெரிந்தது. தங்கமானது உலகின் அனைத்து இனத்தினரினதும் கலாசாரத்தோடு இணைந்து விட்ட ஒரு உலோகம் என்பதை மறுக்க இயலாது.
'இன்று உங்களின் நகை உற்பத்தி தொழிலில் பெரும் மாற்றம் நிகழ்ந்து வருவதாக நகை தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் எந்தளவில் உண்மையுள்ளது?'
'ஆம். எங்களது தொழிலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. மனிதனின் கைகளால் வடிவமைக்கப்பட்ட டிசைன்கள் இன்று இயந்திரங்கள் மூலமாக வடிவமைக்கப்படுகின்றன. மனிதனின் கைகளால் செய்யப்பட்ட தங்க நகை உற்பத்தி வேலைகள் இன்று இயந்திரங்கள் மூலமாக குறுகிய நேரத்தில் நிர்மாணிக்கப்படுகின்றன. உதாரணமாக முன்பெல்லாம் தங்க கட்டியை மெல்லிய அளவில் கம்பியாக இரும்பின் மீது வைத்து தட்டு இரும்பு பட்டியில் காணப்படும் துவாரம் வழியாக அளவுக்கேற்ற வகையில் மெல்லிய கம்பியாக இழுத்தெடுப்போம். இதற்கு பெரும் நேரம் செலவாகும். அதே போன்று தங்கத்தை தூள்களாக மாற்ற பெரும் சிரமப்படுவோம்.
இன்று இந்நிலை முற்றும் முழுவதுமாக மாறிவிட்டது. இது போன்ற கஷ்டமாக உடலை வருத்தி செய்யும் வேலைகளை இன்று இயந்திரங்கள் இன்று செய்கின்றன. வகை வகையான இயந்திரங்கள் வந்தவண்ணமே உள்ளன. அதிகமாக இந்தியாவிலேயே. தங்க தொழிலுக்கான இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
என்னதான் இயந்திரங்கள் வருகைத் தந்து புதுப்புது டிசைன்களில் நகைகளின் வருகை இருந்தாலும் டயமன்ட் டிசைன் செயினில் எந்தவித மாற்றமும் இல்லை. பல வருடங்களாக இந்த டிசைகள் மாற்றமுடியாது உள்ளது. தங்க செயின் ரகத்தில் டயமன்ட் டிசைன் தனிரகமாகும். இந்த ரக செயினுக்கு இயந்திரமும் இல்லை. இன்றும் வாடிக்கையாளர்களிடம் நல்ல கேள்வி உள்ளது. எட்டு, பத்து பவுண் எடையில் இன்றும் தயாரிக்கிறோம். ஆண்களுக்கு ஒரு பெரும் கம்பீரத்தை வழங்குவது 'டயமன்ட் செயின்' என்றார் பாலா. 48 வருட அவரின் தங்கத்தொழில் உழைப்பின் பலாபலனையும் சக்தியையும் கண்டு வியந்தோம்.
தாலி கொடி நிர்மாணிப்பதில் நான் பெரும் திறமையைக் காட்டியுள்ளேன். அன்று இக் கொடியை ஒன்றோடு ஒன்று பின்னி இணைப்பதற்கு வெள்ளி செம்பு இணைந்த கலவையை (இதை பொடி என்பார்கள்) பாவித்தோம். இன்று இக்கலவையை எவரும் பாவிப்பதில்லை. இன்று இயந்திரத்தால் பின்னப்படுவதால் பொடி எனப்படும். கலவையை பாவிப்பதில்லை. இதற்கான இன்று வெளிநாடுகளிலிருந்து வருகைத் தரும் கே.டி.எம் என்ற கலவையை பாவிக்கிறோம். இதனால் தங்கத்தின் தரம் மாற்றமடையாது' எனவும் அவர். தெரிவித்தார்.
உங்கள் வாழ்க்கையில் மறக்க இயலாத சம்பவங்கள் எதும் உண்டா எனக் கேட்டோம்.
'அது ஒரு பயங்கரமான நாள். முழு நாடும் அதிர்ந்துப் போய் இருந்த நேரம் அது. அதுதான் 1971 ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி. சேகுவேரா குழப்பம் எனக் குறிப்பிடப்படும் ஜே.வி. நாடே பயந்து முடங்கிக் கிடந்த நாள். முழு நாடும் ஊரடங்கு சட்டத்தால் ஊரே அடங்கி இருந்தது. மறுநாள் 7ஆம் திகதி விடியற் காலை 5 மணி முதல் 6 மணி வரை தாலிக்கு தங்கம் உருக்க சுபநேரம். ஏப்ரல் முதலாம் திகதியே கல்கிஸையில் ஒரு வாடிக்கையாளரிடம் நான் தாலிக்கான தங்கத்தை உருக்க வருவதாக ஒப்புதல் வழங்கியும் இருந்தேன். கொட்டாஞ்சேனையிலிருந்து கல்கிஸை செல்லவும் வேண்டும். எனதுகருவிகளை கொண்டு செல்லவும் வேண்டும். அதுதான் என் வாழ்க்கையில் முதன் முதலாக தாலிக்கு தங்கம் உருக்க போகும் சந்தர்ப்பமாகும்.
ஊரடங்குச் சட்டம் அமுலாகும் ஆறு மணிக்கு முன்னர் அங்கு சென்றடைய முற்பட்டோம். எனது நண்பர் சுப்பிரமணியம் சகிதம் பஸ் வண்டியின் மூலமாகவும் நடந்தும் கல்கிஸை சென்று, குறிப்பிட்ட வாடிக்கையாளரின் வீட்டை எங்களின் கால்கள் தொடும்போது, மாலை ஆறு மணியாகி, ஊரடங்குச் சட்டமும் அமுலாகியது. அங்கே இரவைக்கழித்தோம். அவ்வீட்டாரின் சந்தோசம் எங்களை வியக்கவைத்தது.
மறுநாள் அதிகாலையில் பூசைகளை நடத்தி தாலிக்கான பொன்னை உரக்கி முடித்து வைத்தேன். அன்று அவர்கள் கொடுத்த வெகுமதிகளை விட முழுக்குடும்பத்தின் சந்தோசம், அன்பு, ஆதரவு, இரக்கக் குணம் எனக்கு பெரும் வெகுமதியாக அப்போது தென்பட்டது. முதன் முதலாக ஆசாரியான எனக்கு என் குல தொழிலின் முக்கிய கட்டமே தாலிக்கு பொன் உருக்குதல். அந்த முதல் கட்டமே எனக்கு ஒரு சம்பவமாகியது' என்றார் அன்றைய அதே வெற்றிப் புன்னகையுடன்.
'பொன் உருக்கும் விடயத்தில் பெரிய சம்பிரதாயங்கள் உண்டா?'
தாலிக்கு பெண் உருக்கும் போது பொன்னை உருக்கும் ஆசாரியே அவ்வேளையில் கதாநாயகன். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் கூடியிருப்பார்கள். தாலிக்காக பொன் உருக்கும் போது பயபக்தியோடு குற்றம் குறைவு இல்லாது உருக்கவேண்டும். தேங்காய் உடைத்து. பூஜை செய்தே வேலையை ஆரம்பிக்க வேண்டும். தேங்காய் உடைக்கும் போது தேங்காயின் இரு பிரிவும் சமனாக, நேர் கோட்டைப் போன்று உடைபட வேண்டும். குற்றம் குறைகள் இல்லாது தேங்காயை சரிசமனாக உடைக்க வேண்டும். கடவுள் பயபக்தியோடு இக்காரியத்தை செய்ய வேண்டும். அப்போது ஒரு வித பயம் எனக்கு ஏற்படும். அது தவறு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் எல்லா மணமக்களும் நல்லாக வாழ வேண்டும். என்பதே எனது பிரார்த்தனையாகும்.
பொன் உருக்கும் போது பொன்னானது உருண்டையைப் போன்ற வடிவமைப்பில் உருக்க வேண்டும். ஏனைய வடிவங்களில் உருக்கக் கூடாது. உருக்கியதும் அனைவரும் வாங்கி பார்த்து சந்தோசப்படுவார்கள். அவர்களின் சந்தோசத்தால் எனது பயம் முழுவதும் தொலைந்துப் போய்விடும். என்னை பாராட்டுவார்கள். அப்பாராட்டுதல்களே எனக்கு விற்றமின்களாகும் என்றார் பாலா.
(படங்கள் கே.பி.பி.புஷ்பராஜா)


0 Comments