புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் 2006 க.பொ.த. சா/த 2009 உ/த பயின்ற பழைய மாணவர்களின் அமைப்பு HiTYP (Hidumath Inthifala Tamassuk Yakeen of Puttalam) முன்னெடுக்கப்படும் ‘Green Zahira’ செயற்றிட்டம் இன்று (2014.1017) காலை 8.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில், சாஹிரா தே.பா.-யின் விளையாட்டு மைதானத்தின் வேலியோரமாக 70 மரக் கன்றுகள் நடப்பட்டன.
கல்லூரியின் அதிபர் எஸ்.ஏ.சீ. யாகுப் தலைமையில் புத்தளம் நகரபிதா கௌரவ கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந் நிகழ்வுக்கு, புத்தளம் பெரியபள்ளி நிருவாக தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில், புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஜே.எம். ஜவுஸி, பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் நிருவாக உறுப்பினர்கள் உட்பட இன்னும் பல பிரமுகர்கள் சமுகமளித்தனர்.
புத்தளத்தின் காலநிலைக்குப் பொருத்தமான பாலை, வாகை, முந்திரி, வேப்பை, புங்கை ஆகிய மரக் கன்றுகள் இன்று நடப்பட்டன.
“இந்த மைதானத்திற்கு ஒரு வரலாறு உண்டு. இதனை பாடசாலைக்காகப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் வழக்குகளுக்கு முகங் கொடுத்துள்ளோம். இரண்டு ஆசிரியர்கள் சிறைக்கும் சென்றி-ருக்கின்றார்கள்” என தலைமையுரையில் கூறிய கல்லூரியின் அதிபர், “இனி இந்த மைதானத்தை ‘கருப்புத் தரவை/ கரித்தரவை’ என்று கூற வேண்டாம், ‘சாஹிரா மைதானம்’ என்று அழையுங்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
புத்தளம் நகர சபையினால் மண், உரம் ஆகியன வழங்கியதாகவும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச் சங்கத்தினால் 3 மாத காலங்களுக்கு தண்ணீர் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர் என்றும் இவை தவிர இச் செயற்றிட்டத்திற்கு இன்னும் பல கொடையாளர்கள் உதவி ஒத்துழைப்பு நல்கியதாகவும் HiTYP செயலாளர் எம்.ஆர்.எம். வசீம் தெரிவித்தார்.
விவசாய போதனாசிரியர் ஆர்.எம். ரிஷாபி, சாஹிரா தே.பா. ஆசிரியர் ஆர்.எம். ஹதீத் ஆகியோர் தாவரவியல் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குகின்றனர். சாஹிரா தே.க.வின் ‘சுற்றாடல் முன்னோடி’ பிரிவினரும் இச் செயற்றிட்டத்தை நடைமறைப்படுத்துவதில் பங்குவகிக்கின்றனர்.
“2015-ம் ஆண்டு சாஹிராவின் 70-ம் வருட நிறைவை நினைவுகூறும் முகமாக 70 வகை மரங்களை வளர்ப்பதற்கு தீர்மானித்தோம். இது இன்னுமொரு ‘மர நடுகை’ நிகழ்வு அல்ல. இன்று நடப்பட்ட மரங்களை வளர்த்து சாஹிரா மைதானத்தை பசுமையாக்கும் வரை எமது பணி தொடரும், இன்ஷாஅல்லாஹ் என உறுதிமொழி கூறினார் HiTYP தலைவர் எஸ்.எம். ரிழாஹ்.
HiTYP சார்பாக அதன் ஊடக பேச்சாளர் மொஹமத் இப்ழால் நன்றியுரை-யாற்றினார்.
நன்றி: The Puttalam Times
/Az







0 Comments