புத்தளம் அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடத்தின் கலை விழா
2014 சனிக்கிழமை 2014.10.11 பி.ப. 2.30 மணி முதல் சாஹிரா தே.க. அஸ்வர் மண்டபத்தில்
நடைபெற்றது. புத்தளம் அஹதிய்யாவின் அதிபர் எம்.எச்.எம். சலீம் மரிக்கார் தலைமையில்
நடைபெற்ற இக் கலை விழாவின் பிரதம அதிதியாக பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரியின்
அதிபர் திருமதி சுமையா ரிஸ்வானும் கௌரவ அதிதியாக வைத்தியர் திருமதி லதீபா ஹில்மியும்
கலந்துகொண்டனர்.
“ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக (டியுஷன்) வகுப்புக்கள்
நடைபெறுவதினால் அஹதிய்யாவுக்கு மாணவர்களின் வருகையில் பாரிய வீழ்ச்சி
ஏற்பட்டுள்ளது” என தலைமையுரையில் குறிப்பிட்ட அதிபர் சலீம் மரிக்கார், ‘தரம் 5
புலமைப் பரிசில் பரீட்சைக்காக அஹதிய்யாவில் பயிலும் மாணவர்களை ஒரு வருடத்திற்கு
இடைவிலக்கிக்கொள்வதும் அஹதிய்யா பாடசாலைக் கல்வியை சீராகப் பெருவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது’
எனச் சுட்டிக் காட்டினார்.
பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 – 11.00 மணி வரை
நடைபெறும் புத்தளம் அஹதிய்யாவில் 860 மாணவர்கள் ஆங்கிலம் (15), சிங்களம் (25), தமிழ் (820)
மொழிமூலம் சன்மார்க்க கல்வியைப் பெறுகின்றனர். ஆசிரியர்கள் 48 (ஆண் 02 உட்பட)
சேவையாற்றுகின்றனர்.
இன்றைய கலை விழாவில் மாணவர்களின் தனி மற்றும் குழு நிகழ்ச்சிகளுடன்,
அகில இலங்கை இடைநிலை சான்றிதழ் பரீட்சையில் 3 பாடங்களுக்கும் A சித்தி பெற்ற மாணவருக்கும் புத்தளம் அஹதிய்யாவில் 10 வருட சன்மார்க்க கற்கையை
நிறைவுசெய்த மாணவருக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அஹதிய்யா மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணருதல்;
அஹதிய்யாவுக்கு இனையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல்; அஹதிய்யா சார்பாக
வெளியிடங்களில் போட்டிகளில் கலந்துகொண்ட; வெற்றிபெற்ற
மாணவர்களின் திறமைகளை புத்தளம் மக்களுக்குத் தெரியப்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு
இக் கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக புத்தளம் அஹதிய்யாவின் நிருவாக தலைவர்
அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். இர்பான் (நளீமி) தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளை ஆங்கில மொழிமூலம் மாணவி எம்.என்.எப்.
நுஸ்லாவும் தமிழில் ஆசிரியை எம்.எச்.எச். ஆயிஷதுஸ் சஹ்ராவும் தொகுத்து வழங்கினர். அஸர் தொழுகைக்காக 15 நிமிட இடைவேளை வழங்கியமை முஸ்லிம்களினால்
நடத்தப்படும் பல நிகழ்ச்சிகளில் காண்பதற்கு அரிதான நிகழ்வாகும்.
நன்றி: The Puttalam Times






0 Comments