புத்தளத்தில் இருந்து குருநாகல் மற்றும் கற்பிட்டி ஆகிய இரண்டு மார்க்கங்களிலும் சேவையிலீடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குருநாகல் நகரிலிருந்து புத்தளம் ஊடாக கற்பிட்டி நகருக்கான போக்குவரத்திற்காக தற்காலிக பஸ் ஒன்றை வடமேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு சேவையில் ஈடுபடுத்தியிருந்தது.
கடந்த நான்கு நாட்களாக இந்த தனியார் போக்குவரத்து பஸ் சேவை முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அந்த பஸ் சேவையை நிறுத்துமாறு வலியுறுத்தி தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக புத்தளத்தில் இருந்து குருநாகல் மற்றும் கற்பிட்டி மார்க்கங்களில் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடமேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவின் புத்தளம் கிளை பொறுப்பதிகாரி அமீனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
குறிப்பிட்ட இரண்டு மார்க்கங்களிலும் பயணிகளின் வசதிகருதியே தற்காலிக தனியார் பஸ் சேவையொன்று அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
ஆயினும், தற்போது தோன்றியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும்பொருட்டு தனியார் பஸ் பிரதிநிதிகளுக்கும், மாகாண போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக ஆணைக்குழுவின் புத்தளம் கிளை பொறுப்பதிகாரி கூறினார்.

0 Comments