Subscribe Us

பாதாள மன்னன் 'களுசூட்டி' ஆப்பரேஷன்.. (பொலிஸ் சாரதியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சிக்கையிலே பொலிஸாரால் சுடப்பட்டார்)

பாரிய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த களுசூட்டி, பொலிஸ் சாரதியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சிக்கையில், ஏனைய பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெல்லம்பிட்டியை சேர்ந்த களுசூட்டி (24) இரண்டு கொலைகள் மற்றும் இரண்டு கொலை முயற்சிகளுடன் தொடர்புபட்ட வரென பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே அண்மையில் இவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசாரணைகளின்போது, தனது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நண்பரொருவர் கறுவா தோட்டத்தில் இருப்பதாகவும் அவரை அடையாளம் காட்டுவதாகவும் களுசூட்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கமைய நேற்று காலை 5.30 மணியளவில் கறுவாதோட்டத்திலுள்ள நண்பரை அடையாளம் காட்டுவதற்காக ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் களுசூட்டியை பொலிஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதன்போது களுசூட்டி, தனது கைவிலக்கினால், ஜீப் வண்டியை செலுத்தும் சாரதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். குறித்த சாரதி மூச்சுத் திணறி உயிருக்கு போராடியதும் அவரை காப்பாற்றுவதற்காக ஏனைய பொலிஸ் அதிகாரிகள் களுசூட்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தினைத் தொடர்ந்து களுசூட்டியும் பொலிஸ் சாரதியும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது சிகிச்சை பலனின்றி களுசூட்டி உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

Post a Comment

0 Comments