ஆப்கானிஸ்தானில் 20 வயது நிரம்பிய தனது மனைவியின் மூக்கை சமையலறைக் கத்தியால் துண்டித்துவிட்டு தப்பித்த கணவனை போலீசார் தேடி வருவதாக செய்திகள் தெரிவித்துள்ளன. மூக்கு அறுபட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னாலும் இந்த ஆண்மகன் தனது மனைவியைத் துன்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவரது விரல் நகங்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும், மற்றொருமுறை ஒரு வாரத்திற்கு உணவு, தண்ணீர் இல்லாமல் இந்தப் பெண் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றும் தைகன்டி மகளிர் விவகாரத்தலைவர் சக்கியா ரிசாய் பிபிசி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் இடம் பெற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்படாத போதிலும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு வாதத்தின் விளைவாகவே கணவன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளான் என்று தைகன்டி மாகாண குற்றப்பிரிவு தலைவர் முகமது அலி அடய் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடுமைகள் ஆப்கானிஸ்தானில் குறைவு என்றபோதிலும் தற்போது இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதாகவே மனித உரிமைக் கழகம் குறிப்பிடுகின்றது.
2012-ம் வருடத்தைவிட சென்ற ஆண்டு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 25 சதவிகிதம் அதிகரித்திருந்ததாகவே இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சென்ற வருடம் போதை பழக்கத்திற்கு அடிமையான ஒரு கணவனால் துன்புறுத்தப்பட்ட மனைவி பிபிசிக்கு அளித்த பேட்டியின் விபரமும் இந்த செய்தியில் இடம் பெற்றுள்ளது. இப்போது வெளிவந்துள்ள சம்பவம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதையே உணர்த்துவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
0 Comments