இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவர் ஹட்சன் சமரசிங்கவே தனது கணவரைக் கொலை செய்ததாக அமரர் பிரேமகீர்த்தி டி அல்விஸின் மனைவி நிர்மலா டி அல்விஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரபல பாடலாசிரியர், எழுத்தாளர், ஒளிப்பரப்பாளர் என பல்வேறு துறைகளில் ஜொலித்து மிர்ந்த பிரேமகீர்த்தி டி அல்விஸின் 25ம் ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொழும்பு ஏழு டொரிங்டனில் அமைந்துள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான வீதி பிரேமகீர்த்தி டி அல்விஸ் வீதி என பெயரிடப்பட்டது.
தமது கணவரை யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து நிர்மலா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக புத்தகமொன்றை எழுதியிருந்தார். இந்த புத்தகத்தை நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதியிடம், நிர்மலா வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலையாளி தங்களது மடியிலேயே இருக்கின்றார் என ஜனாதிபதியிடம் நிர்மலா தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பிரேமகீர்த்தியை ஜே.வி.பி கொலை செய்யவில்லை எனவும், இந்தக் கொலை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையாகும் என நிர்மலா தெரிவித்துள்ளார்.
தமக்கு எதுவும் தேவையில்லை எனவும் பிரேமகீர்த்தி கொலைக்கு நீதி வழங்கப்பட்டாலே போதும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரேமகீர்த்தி கொலையுடன் எங்களை குற்றம் சுமத்திய அரசாங்கத்திற்கு சிறந்த பதிலடி கிடைத்துள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமது கட்சிக்கு எதிராக சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த சேறு பூசும் முயற்சி அரசாங்கத்திற்கே திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரேமகீர்த்தி நினைவு நிகழ்வுகளில் ஜே.வி.பி.யின் வன்முறைகள் தொடர்பில் கண்காட்சியொன்று நடத்தப்பட்டிருந்தது. கட்சியை இழிவுபடுத்தும் நோக்கிலேயே இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டதாகவும், இந்தக் கண்காட்சியின் போது பிரேமகீர்த்தியின் மனைவி, ஹட்சன் சமரசிங்க மீது குற்றம் சுமத்தியிருந்தார். இதேவேளை, இன்றைய தினம் காலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹட்சன் சமரசிங்க, பிரேமகீர்த்தியின் மனைவியை கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக நேரடியாகவே குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, ஹட்சன் சமரசிங்க பிரேமகீர்த்தியின் மனைவி, நிர்மலாவை கடும் சொற்களினால் தூற்றியதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

0 Comments