Subscribe Us

header ads

திருடனும் தோட்டக் காவலனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்!

முஸ்லிம் மக்களிடையே சந்தேகத்தை
தோற்றுவித்துள்ள களநிலை சூடேற்றம்
------------ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-------


அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் கடந்த மாதம் 15 ஆம் திகதியும் அதனையடுத்த தினத்திலும் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான கலகொடஅத்தே ஞானசார தேரர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். குறித்த சம்பவங்கள் இடம்பெற்ற நாளிலிருந்து அவர் இவை தொடர்பில் தொடர்ச்சியான கருத்துகளைத் தெரிவித்து வந்த போதும் கடந்த வாரத்தில் மட்டும் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் சில அனைவரது கவனத்தையும் வியப்புடன் ஈர்த்துள்ளன.
குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் எம்மைக் கைது செய்யுங்கள், அளுத்கம வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இடம்பெற்ற சம்பவம் துரதிர்ஷடவசமானது, ஆளும்கட்சி அமைச்சர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த வன்முறைகளுக்கு எம்மைக் குற்றஞ் சுமத்துகின்றனர், அளுத்கம சம்பவத்தினால் ஏற்பட்ட பாதக விளைவுகள் எம்மை கைது செய்வதனால் தீருமானால் அதனைச் செய்யுங்கள் என்றெல்லாம் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு மேலாக நடந்த சம்பவங்களை இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினையையாகக் கூறும் அவர், இதனை முழு நாட்டுக்கும் பரப்பி சர்வதேச அளவில் முஸ்லிம்கள் கொண்டு சென்றுவிட்டனர் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்த நாட்டில் இரண்டாவது சிறுபான்மை இனமாக வாழக் கூடிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாராரின் ஆயிரம் கோடி பெறுமதியை எட்டும் சொத்துகள் அழிக்கப்பட்டமை, வீடுகள், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டமை, நான்கு உயிர்கள் பறிக்கப்பட்டமை, 80 க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்படுத்தியமை எல்லாம் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறியதொரு கணக்காகவும் சின்ன விடயமாகவும் தெரிவது வேடிக்கையான விடயமே.
அதேவேளை, இவரது இந்தக் கூற்று பாதிக்கப்பட்ட மக்கள் மீது இன்னொரு மன வேதனைக் கலவரத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராமத்தில் ஏற்பட்ட சிறிய சண்டை இன்று சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. அளுத்கம சம்பவம் ஏற்பட்டதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளே காரணம் என்றும் அவர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் கொடூரத்தையும் விட மிகக் கொடூரமானது. தேரர் கூறுவது போல் இரு தரப்பினர்களுக்கிடையிலான ஒரு சிறு சம்பவம் தான் இதன் பின்னணி என்று வைத்துக் கொண்டால் ஒரு சமூகத்தின் ஒரு பகுதியே அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிய நிலையை உருவாக்கியவர்கள் யார் என்பதனை அவரால் நிச்சயமாக மூடிமறைக்க முடியாது என்பதனையும் கூறியே ஆக வேண்டும்.
தேரர் குறிப்பிடுவது போன்று இரு தரப்பார் பிரச்சினை என்றால் அங்கு சென்று பகிரங்கமாக சிங்களவர்களின் உணர்வுகளை இனவாத ரீதியாக உசுப்பி எழுப்பக் கூடிய உணர்ச்சிமிக்க உரையை ஏன் நிகழ்த்த வேண்டும்? சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அல்லது இரு சமூகத்தின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து குறித்த பிரச்சினையை சமாதானமாக தீர்த்து வைத்திருக்லாம் தானே?
யுத்த களத்தில் “ போருக்கு தயாராகுங்கள்“ என்பதனை வெளியார் புரிந்து கொள்ளாத வகையில் சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்றே அன்றைய கூட்டத்தில் சில விடயங்களை சைகையாக, அனுமதியாக கூறப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்த விடயம். எனவே, இவையெல்லாம் பகிரங்கமாகத் தெரிந்தவையாக உள்ள நிலையில் இதனை இரு குழுக்களின் சிறு பிரச்சினை என்றும் சின்ன விடயம் எனவும் நியாயப்படுத்த முயற்சிப்பது சிறு பிள்ளைத்தனமானது. 12 ஆம் திகதியளவில் இடம்பெற்ற சிறு பிரச்சினைக்கு 15 ஆம் திகதி கூட்டம் போட்டா பதில் கூறி கலவரத்தை ஏற்படுத்த வேண்டும்?
ஆனால், இவற்றில் சுவாரஸ்யமிக்கவை என்னவென்றால் வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பொலிஸும் நாட்டிற்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுவதுதான். இவை இரண்டும் இந்த வருடத்துக்கான சிறந்த நகைச்சுவையாகத் தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியானவைகளாகவே உள்ளன. நரம்பில்லாத நாக்கினால் மனிதன் வரம்பில்லாமல் பேசி விடுவான் என்பதற்கு நல்ல சான்றுகள்தான் இவை.
இதேவேளை, அளுத்கம, பேருவளை பிரதேசத்தின் புனரமைப்பு பணிகளை அரசாங்கம் அவசர, அவசரமாகச் செய்து வருகிறது. யுத்தத்தினால் அல்லது இனக் கலவரத்தினாலோ பாதிக்கப்பட்ட எந்தப் பகுதியும் இவ்வாறு துரித கதியில் எந்த அரசாங்கத்தினாலும் புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் இந்த இரு பிரதேசங்களின் துரிதமான புனரமைப்பு பணிகளை அரசு முன்னெடுத்து வருவதுடன் நஷ்ட ஈடுகளை வழங்கவும் தயாராகி வருகிறது. முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கம் காட்டும் இந்த அக்கறையானது சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பதனையே நினைவுபடுத்துகிறது.
யுத்த மற்றும் இனக்கலவர அழிவுகளின் சுவடுகளை விட்டு வைப்பது தங்களுக்கு ஆபத்தானது என்பதனை அரசாங்கம் கடந்த கால அனுபவத்தினூடாக தெரிந்து வைத்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேரில் சென்று யுத்த காலத்தின் யுத்த சூனியப் பிரதேசத்தை பார்வையிட்டார். இதன்போது யுத்த சூனிய வலயம் – 2 அமைக்கப்பட்டிருந்த புதுமாத்தளன் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் யுத்த காலத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் ரெப் சென்று பார்வையிட்டு குறித்த் செய்தியை அங்கிருந்தபடியே டுவிட்டரில் டுவிட் செய்யப்பட்டதால் அரசாங்கம் சர்வதேச ரீதியாக சங்கடமான நிலை ஒன்றுக்குத் தள்ளப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலைமை தெற்கிலும் ஏற்படக் கூடாதென்பதற்காகவே மக்கள் நலன் என்று தன் நலனை காத்துக் கொள்ள அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேசிய சூறா சபையானது ஜனாதிபதி செயலகத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் அளுத்கமை பேருவளை பிரதேசங்களில் பொலிஸ் விசாரணைகள் முடிவடையும் வரையில் புனர் நிர்மாணப் பணிகளில் தாமதம் ஏற்படுத்துமாறு கேட்கப்பட்டிருந்தது. அவசர புனர்மைப்பு பணிகளால் பொலிஸ் விசாரணைகளுக்கான தடயங்கள் அழிந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே, புனர் நிர்மாணப் பணிகளை தாமதப்படுத்துமாறு அக்கடிதம் மூலம் கேட்கப்பட்டிருந்தது.
இது ஒரு புறமிருக்க, சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரின் ஜனாஸாக்களை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் தற்போது எழுந்துள்ளன. இது தொடர்பில் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கொன்றின் அடிப்படையில் குறித்த பகுதிகளின் புனரமைப்பு பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பிரதேசங்களிலும் கலவரம் நடந்து முடிந்து விட்டாலும் கள நிலைமைகள் தொடர்ச்சியாக சூடாகவும் பிரச்சினைகள் மிக்கதாகவுமே உள்ளன. அனைத்து தரப்பினாலும் சரியான முறையில் ஆரம்பத்திலேயே நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டிருந்தால் இன்று இவ்வாறு கட்டடங்களைப் புனரமைத்து கட்டியெழுப்பும் தேவையே ஏற்பட்டிருக்காது. சர்வதேசத்தின் அதிருப்தியும் இந்தளவு தலைக்கு மேல் போயிருக்காது.
கலவரம் முடிந்துள்ள நிலையில் அது தொடர்பில் சிலரால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் நியாயப்படுத்தல்களும் தம்பக்க நிலைப்பாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மனவேதனைப் படுத்துவதாகவே அமைந்துள்ளன. இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் கூட இன ஐக்கியத்தை சவாலுக்கு உட்படுத்தும் என்பதே உண்மை. இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி தடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது.
திருடனும் தோட்டக் காவலனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம் அல்லவா?
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 06-07-2014

Post a Comment

0 Comments