தமது தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டக் குழு அண்மையில் இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் இயாத் மதனி மற்றும் அவ்வமைப்பின் முஸ்லிம் சிறுபான்மை விவகாரங்களுக்கான பிரிவின் பிரதிநிதிகளை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் சந்தித்துக் கலந்துரையாடியதன் நோக்கம் அவர்களுக்கு இங்கு நடந்த அண்மைக் காலச் சம்பவங்களின் கள நிலைவரங்களின் யதார்த்தத்தை விளக்கி முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு என்பன தொடர்பாக அரசாங்கத்தின் உத்தரவாதத்தை பெறுவதற்கான இராஜதந்திர ரீதியான அழுத்தத்தையும் பிரயோகிப்பதற்கேயாகும் என கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அமைச்சரினதும் மு.கா. உயர்மட்டக் குழுவினதும் சவூதி விஜயத்தின் போது பலம் வாய்ந்த இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடிய விவகாரம் பற்றி சில செய்தி ஊடகங்கள் பிரஸ்தாபித்திருந்தன.
அவ்வாறான செய்திகள் வெளியாகியதையடுத்து தங்களது கலந்துரையாடலில் எந்த விதமான மறைமுகத் தன்மையும் இல்லை என தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலேயே தாம் கட்சியின் குழுவிற்கு தலைமை தாங்கியதாகவும் கூறினார். அமைச்சர் என்ற முறையில் தாம் அக் கலந்துரையாடலில் ஈடுபடவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுடன் நல்லுறவைப் பேணி வருகின்றது. இலங்கை அரசாங்கத்துடனும் அது சிநேகபூர்வமான நல்லெண்ணத் தொடர்புகளை கொண்டுள்ளது. அந்த அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகள் ஜெனிவாவில் கூட இலங்கை அரசாங்கத்திற்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்திருந்தன.
ஆனால் சென்ற ஜெனிவா மாநாட்டின் போது ஜோர்தான் குவைத் ஆகிய நாடுகள் இலங்கைக்குச் சார்பாக வாக்களிக்காமல் தவிர்த்துக்கொண்டதன் காரணங்கள் பற்றி போதிய தெளிவு இல்லை. முஸ்லிம்களுக்கு எதிராக இங்கு மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அல்லது மேற்கு நாடுகளின் அழுத்தம் என்பன அதற்கான காரணமாக இருக்கலாம்.
இஸ்லாமிய நாடுகள் அமைப்பில் சிறுபான்மையினராக வசிக்கும் முஸ்லிம்களைப் பற்றிய பிரிவு ஒன்று செயல்படுவதோடு பல்வேறு நாடுகளில் இஸ்லாமியர்கள் மீதான பீதி மனப்பான்மையின் விளைவாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை கண்காணிக்கும் தனியான மையம் ஒன்றும் உள்ளது. அந்தப் பிரிவுகள் உலகளாவிய ரீதியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இஸ்லாமிய நாடுகள் அமைப்பு ரஷ்யா சீனா போன்ற நாடுகளின் அரசாங்கங்களின் மீதும் இராஜதந்திர ரீதியாக தனது அழுத்தத்தை உரிய முறையில் பிரயோகித்து வருகின்றது.
மியன்மார் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு விசேட தூதுவர் ஒருவரை இவ்வமைப்பு நியமித்துள்ளது. முன்னாள் மலேசிய இராஜதந்திரியொருவர் அவ்வாறு விசேட தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கும் அவ்வாறான விசேட தூதுவர் ஒருவரை நியமிப்பது பற்றி அவ்வமைப்பு பரிசீலித்து வருகின்றது. அத்துடன் அதன் செயலாளர் நாயகம் இயாத் மதனி இலங்கைக்கான நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொள்ளவும் எண்ணியுள்ளார்.
அத்துடன் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அங்கு நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ள சமய நல்லிணக்க மாநாட்டிற்கு இலங்கையிலிருந்தும் சகல சமயங்களையும் சேர்ந்த பிரதி நிதிகளை அழைப்பதற்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு உத்தேசித்துள்ளது.
சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்து இவ்வமைப்பின் கவனம் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை சாசனத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ள நாடுகள் அந்த சாசனத்திற்கு மாற்றமாக செயல்பட முடியாது.
எடுத்துக்காட்டாக காஸாவில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடுத்துள்ள மிலேச்சத்தனமான தாக்குதல்களை இன்னும் தொடர விட்டால் நாட்டையே முற்றாக அழித்தொழித்து நாசமாக்கி விடுவார்கள்.
ஆகையால் முஸ்லிம்கள் மீதான பீதி மனப்பான்மையின் விளைவாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அநியாயங்களுக்கு முடிவு காண்பதிலும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களுடன் நல்லிணக்கத்துடன் பேசி வெவ்வேறு சமயங்களை பின்பற்றுவோர்களுக்கிடையில் புரிந்துணர்வை வளர்ப்பதிலும் இஸ்லாமிய நாடுகள் அமைப்பு கூடுதல் கவனஞ் செலுத்தி வருகின்றது.
ஞானசாரதேரர் மியன்மாருக்குச் சென்று அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதும் பார தூரமான விடயமொன்றாகும் என்றார்.


0 Comments