முஸ்லிம் மக்களை அரசாங்கத்திடமிருந்து அந்நியப்படுத்துவதற்கு ஐக்கிய
தேசியக் கட்சியினர் மிக நுணுக்கமாகச் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என ஆளும்
கட்சியினரை அறிவுறுத்திய ஜனாதிபதி, அமைச்சர்களையும் எம்பிக்களையும்
மோதவிட்டுப் பார்க்கும்நடவடிக்கையை ஐ.தே.க மிக லாவகமாக மேற்கொண்டு
வருவதாகவும் குறிப்பிட்டார்.
என்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து
அவர்கள் மனதை அறிந்து செயற்படுபவன் நான். அதனால் எதிர்வரும் தேர்தல்களில்
எமது வெற்றி உறுதி. நாம் குரோத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள
அதேவேளை அரசியல் பழிவாங்கல் எம்மிடம் கிடையாது எனவும் ஜனாதிபதி அவர்கள்
தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியினருக்கான விசேட
செயலமர்வொன்று பேருவளையில் நடைபெற்றது. அதற்குத் தலைமைதாங்கி
கருத்துக்களைத் தெரிவித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி
இங்கு மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதார கொள்கை ஒவ்வொரு அரசியல்
கட்சிகளுக்கேற்ப மாற்றமடையும் என்பது சகலரும் அறிந்ததே. இதற்கிணங்க ஐக்கிய
தேசியக் கட்சியின் கொள்கை வேறொன்றாக இருந்தது. அக்கட்சி 1977ல் ஆட்சியைக்
கைப்பற்றினாலும் பின்னர் அவர்களின் பொருளாதாரக் கொள்கை வெவ்வேறாக
இருந்ததென்பதை நான் குறிப்பிட்டுச் செல்லவேண்டிய அவசியமில்லை.
எமது கொள்கையில் அதனைவிட மாற்றங்களை நாம் ஏற்படுத்தினோம். 1994ல் இருந்து
எமது ஆட்சி இரண்டு தலைமைகளின் கீழ் எமது கட்சி செயற்பட்டுள்ளது.
1970 களிலும் எமது அரசாங்கம் இருந்தது. இந்த நாட்டின் விவசாயிகளுக்கு
முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தேசிய பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட
வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தோம்.
சீனியின்றி தேநீர் அருந்திய காலமும் மிளகாய் இல்லாமல் ‘சொதி’ சமைத்த
காலமும் அன்றிருந்தது. கப்பலுக்குக் காத்திருந்த காலம் அது. இந்த
கொள்கையிலிருந்து நாம் சற்று முன்னே சென்றோம். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க
நடைமுறைப்படுத்திய அத்திட்டம் சரியானது எனினும் அது மக்களுக்கு பாதிப்பாகவே
இருந்தது. நாம் அந்த தவறை சரி செய்து கொண்டே தற்பொழுது பொருளாதார கொள்கையை
நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சி கிராமங்களில் குழு அமைத்துக் கொண்டு தவறான
பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று நாட்டில் பல்வேறு
கருத்துக்களைப் பரப்பவும் அவர்கள் குழுக்களை அமைத்துள்ளனர். ஒரு விதத்தில்
முஸ்லிம் மக்களை எம்மிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் அவர்கள் மிக
நுணுக்கமாகச் செயற்பட்டனர்.
நான் முஸ்லிம் மக்களைச் சந்திக்கச் சென்றேன். வீடுகள் உடைக்கப்பட்டதாகக்
கூறிய அவர்கள் அவ்வாறு செயற்பட்டவர்கள் இந்தக் கிராமத்து ஆட்கள் அல்ல
என்பதையும் வெளியிலிருந்து வந்தவர்களே இவற்றைச் செய்தனர் என்றும்
தெரிவித்தனர். இச்சம்பவம் நடைபெற்றபோது இங்கு வந்து அதனை
ஒழுங்குசெய்தவர்கள் யார் என்பதைப் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம்
கிராம மக்களுடன் இருந்தால் எம்மால் இதனை இனங்கண்டுகொள்ள முடியும். நாம்
அறியாத பகுதியொன்று உள்ளது. அதனூடாகவே அவர்கள் செயற்படுகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறும் பொய்களுக்கு பக்கத்தில் கூட என்னால் நிக்க
முடியாது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பொய் சொல்வார் அவர். வீதிகளை
நிர்மாணிக்கும்போது அதற்கு எதிராக பொய் கூறுவார். ஒரு கிலோமீற்றர்
வீதியமைக்க இவ்வளவு பொய்யாகியதா என்றும் அவர் குறிப்பிடுவார். மஹிந்தோதய
ஆய்வுகூடத் திட்டத்தோடு கல்வித்துறை முன்னேற்றம் அடைவதைக் கண்ட அவர் அதற்கு
நாம் பணம் அறவிடுவதாகக் கூறினார். சர்வதேச நாணய நிதியம் சம்பந்தமாக பொய்
கூறினார். நாம் கல்வியை வீழ்ச்சியுறச் செய்வதாகப் பொய் கூறினார். அதற்கு
நாம் பதில் கூறிய பின்னர் இரு வாரங்களுக்குப் பின் மஹிந்தோதய
ஆய்வுகூடத்திற்கு அனுமதிக்கப்படும் ஒரு மாணவனிடம் 50 ஆயிரம் ரூபா வீதம்
பணம் அறவிடுகிறோம் என்றார். இதுபோன்று ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு பொய்யைக்
கூறி வருகின்றார்.
அண்மையில் நிலவிய வதந்தியால் எமது அமைச்சர்கள், எம்பிக்கள் பலரும்
குழப்பமடைந்தனர். சில பிரச்சினைகள் தொடர்பாக ஆங்காங்கே பேசிவந்தனர்.
அமைச்சர்கள் அவர்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றர். அதனை ஐ.தே.கவினர் மிக
நுணுக்கமாகச் செயற்படுத்துகின்றனர். எனவே நாம் பேசுவது தொடர்பில் மிக
அவதானமாக இருப்பது மிக முக்கியம்.
“என்மீது எனக்கு நம்பிக்கையுண்டு. நான் மக்களின் கருத்துக்கு செவிசாய்த்து
அவர்களின் உணர்வுகளை அறிந்துகொண்டவன். இதனால் குறிப்பிட்ட காலத்தில்
குறித்த தேர்தலைப் பெற்றுக்கொடுக்க நான் நடவடிக்கை எடுப்பேன். அதன்
வெற்றியை உங்களுக் குப் பெற்றுக்கொடுப்பேன்” என்பதை சகலரும் நினைவில்
வைத்துக்கொள் ளுங்கள். அதற்கான ஒத்துழைப்பை வழங்குங்கள்.
என்னோடு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுத்த
அனைவரோடும் இந்தக் கூட்டமைப்பைக் குலைக்காமல் முன்னேற்றிச்செல்ல என்னாலும்
என் அமைச்சர்களாலும் முடியும். நாம் இந்தக் கெளரவத்தைப் பாதுகாத்துக்கொண்டு
முன்செல்ல வேண்டும்.
‘மார்க்ஸ்’ போட்டுக்கொள்ள ஏதாவது பேசிவிட்டு கடைசியில் எமக்காகப் பேச
எவரும் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நான் மிக
நேர்மையாகப் பேசுபவன். சொல்ல வேண்டியதை உரிய நேரத்தில் சொல்பவன்.
நாம் புதிய பயணம் செய்வோம். நவம்பரிலோ ஜனவரியிலோ தேர்தல் எப்போது
நடந்தாலும் தேர்தலுக்காக இந்த வருடத்தில் நீங்கள் தயாராகுங்கள். உங்கள்
பகுதி அபிவிருத்திக்காக நாம் பெருமளவு நிதியைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்
என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


0 Comments