Subscribe Us

header ads

8-ந்தேதி ஜெர்மனி-பிரேசில் அரை இறுதியில் மோதல்

பெலோ ஹோரிசோன்ட், ஜூலை. 5– உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த 1–ந்தேதியுடன் 2–வது சுற்று ஆட்டங்கள் முடிந்தன.

இதன் முடிவில் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ், நெதர்லாந்து, கொலம்பியா, பெல்ஜியம், கோஸ்டாரிகா ஆகிய நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு நேற்று கால் இறுதி ஆட்டம் தொடங்கியது. நேற்று நடந்த ஆட்டங்களில் ஜெர்மனி 1–0 என்ற கோல் கணக்கில் பிரான்சையும், பிரேசில் 2–1 என்ற கணக்கில் கொலம்பியாவையும் தோற்கடித்தன. வெற்றி பெற்ற இந்த இரண்டு அணிகளும் அரை இறுதியில் சந்திக்கின்றன.

ஜெர்மனி– பிரேசில் அணிகள் மோதும் முதல் அரை இறுதி ஆட்டம் வருகிற 8–ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் அரை இறுதி கால் பந்து ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

3 முறை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி 13–வது தடவையாக அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது. அதுவும் தொடர்ந்து 4–வது முறையாக அரை இறுதியில் (2002, 2006, 2010, 2014) சாதனை படைத்தது.

இதில் 2002–ல் இறுதிப் போட்டி வரை வந்து பிரேசிலிடம் தோற்றது. 2006–ல் இத்தாலியிடமும், 2010–ல் ஸ்பெயினிடமும் அரை இறுதியில் தோற்றது.

5 முறை உலக கோப்பையை வென்ற பிரேசில் அணி 11–வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. பிரேசில் அணி கடைசியாக 2002–ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.

அதன்பிறகு அந்த அணி அரை இறுதியில் நுழைந்தது இல்லை. 2006–ல் பிரான்சிடமும், 2010–ல் நெதர்லாந்திடமும் கால் இறுதியில் தோற்றது.

இந்த இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 12 தடவையும், ஜெர்மனி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது.

தற்போதுள்ள ஜெர்மனி அணி பலம் வாய்ந்ததாக இருப்பதால் பிரேசில் அணி இறுதிப்போட்டியில் நுழைய கடுமையாக போராட வேண்டும்.

Post a Comment

0 Comments