Subscribe Us

header ads

அளுத்கம விவகாரம்; சீனாவத்த முஸ்லிம் கிராமத்தின் சேத விபரம் வெளியீடு

அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட சீனாவத்த முஸ்லிம் கிராமத்தின் சேத விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சீனாவத்த ஜும்ஆ பள்ளிவாசலினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த பள்ளிவாசலினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அளுத்கம நகரிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் கிராமம் சீனாவத்தயாகும். இந்த கிராமத்திலுள்ள ஒரேயொரு பள்ளிவாசலான சீனாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசலாகும்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த பள்ளிவாசல் கடந்த 2013ஆம் ஆண்டு ஜுலை 6ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. இந்த கிராமத்தில் 238 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 206 குடும்பங்களுக்கு மாத்திரமே வீடுகள் உள்ளன.

அத்துடன் 430 ஆண்களும் 461 பெண்களும் 295 சிறுவர்களும் 70 குழந்தைகளும் என 1256 பேர் இந்த கிராமத்தில் உள்ளனர். இதற்கு மேலதிகமாக 19 சில்லறை வர்த்தக நிலையங்களும் நான்கு வேலைத்தளங்களும் உள்ளன. இவ்வாறான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த கிராமத்திலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 15 வீடுகள் முற்றாகவும் 37 வீடுகள் அரைவாசியும் 30 சிறியளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆறு கடைகள் முழுமையாகவும் மூன்று கடைகள் பகுதியளவிலும் ஒரு வேலைத்தளமும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக மூன்று வேன்கள், மூன்று கார்கள், மூன்று முச்சக்கர வண்டிகள், ஐந்து மோட்டார் பைசிக்கிள்கள், ஆறு துவிச்சக்கர வண்டிகள் ஆகியனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமத்திலுள்ள 202 குடும்பங்களைச் சேர்ந்த 963 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இனவாத கும்பலினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது இடம்பெயர்ந்து சீனாவத்த பள்ளிவாசலில் தங்கியிருந்தனர். எனினும் தற்போது இவர்கள்; வீடு திரும்பியுள்ளனர். எவ்வாறாயினும் இவர்களில் சுமார் 100 குடும்பத்தவர்கள் அச்சத்தின் காரணமாக இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை தர்கா நகரிலுள்ள பள்ளிவாசல்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றோம். இந்த செயற்பாட்டிற்கு உதவ யாரும் தயார் என்றால் தர்கா நகர் பள்ளிவாசல் சம்மேளனத்தை தொடர்புகொள்ளவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments