Subscribe Us

புத்தளம் பெரியபள்ளியின் முடிவை மக்கள் ஏற்றுக்கொண்டனர்

Hisham Hussain - TPT






கடந்த தினங்களில் தென் மாகாணத்தின் அளுத்கம, பேருவல ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற இனவாத சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாக, புத்தளம் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கலந்துரையாடும் கூட்டம், 2014.06.18 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் (இஷாத் தொழுகையின் பின்) முஹைதீன் ஜும்மா (பெரியபள்ளி)வாசலில் நடைபெற்றது.

புத்தளத்தைச் சேர்ந்த வாலிபர்க் குழுவொன்று மக்களை ஒன்றுகூட்டும் முயற்சியை மேற்கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியும் என்பதைக் கலந்துரையாட வேண்டும் என்றும் அதனைத் தனியொரு குழுவாகவொ அல்லது தனித்தனிக் குழுக்களாகவோ செயற்படாமல் பெரியபள்ளியின் தலைமையின் கீழ் இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவ் வாலிபர்கள் கேட்டுக்கொண்டனர்.
பெரியபள்ளியின் நிருவாக சபைத் தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில், ஜம்மிய்யதுல் உலமா சபை புத்தளம் மாவட்டக் கிளையின் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு சமூகமளித்த பலர், தத்தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். அவர்களும் பெரியபள்ளியின் தலைமைத்துவத்தின் கீழ் இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

மக்களின் கருத்துக்களுக்கு விளக்கமளித்த உலமா சபைத் தலைவர் அப்துல்லாஹ் ஆலிம், பெரியபள்ளியின் முடிவை எதிர்பார்த்து வருகை தந்த மக்களின் தலைமைத்துவக் கட்டுப்பாட்டு உணர்வை சிலாகித்து பாராட்டினார். மேலும் பெரியபள்ளி, ஜம்மிய்யதுல் உலமா, நகர சபை ஆகியவற்றின் தலைமைகள் ஏனைய சமய தலைவர்கள், பொலிஸ், பாதுகாப்புப் பிரிவினருடனும் தொடராக மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களின் முன்னெடுப்புக்களை விளக்கினார். அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனைகள் வழிகாட்டல்களுக்கு ஏற்ப நடந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
உணர்ச்சிப் பெருக்கும் கொந்தளிக்கும் கவலையும் நிறைந்த மனநிலையிலும் கூட, தமது கருத்துக்களை நாகரீமாக முன்வைத்த பண்பும் சமூக; சமயத் தலைமைத்துவத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பண்பாடும் புத்தளம் மக்களின் சிந்தனை முதிர்ச்சியைக் காட்டியது எனக் கூறலாம்.
படங்கள் : நன்றி : TPT

Post a Comment

0 Comments