நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
காலி – ஹினிதும பகுதியில் ஒருவரும், கொழும்பு – தலங்கம பகுதியில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மாத்தறையில் நீரில் அல்லுண்டு செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரிபத்கொடை
நகரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணிகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக, 7,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்படுவதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி
தெரிவித்தார்.
இதேவேளை, 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா,
பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி
சுட்டிக்காட்டினார்.
மேலும் சீரற்ற வானிலை காரணமாக களு கங்கை, களனி
கங்கை, நில்வளா கங்கை மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம்
உயர்வடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த
ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு
நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள
பகுதிகளுக்கு தேவையான நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கு 10 குழுக்கள்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால்
நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த 122
பேர் காப்பாற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய
தெரிவித்தார்.
இதேவேளை, அவசர நிலைமைகளில் சேவைகளை வழங்குவதற்கு 2
ஹெலிகெப்டர்கள் கட்டுகுருந்த விமானப்படை முகாமில் தயார்நிலையில்
வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் வின் கொமாண்டர் கிஹான்
செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பணிகளுக்காக சுமார் 500
இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர்
பிரிகேடியர் ருவன் வனிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெள்ளம்
மற்றும் மண்சரிவினால் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு
15 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ
அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெள்ளப் பெருக்கினால் கொழும்பு அவிசாவளை பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
கொழும்பு
– அவிசாவளை பிரதான வீதியின் புவக்பிட்டி, ரங்வல பகுதிகளும் வெள்ளத்தில்
மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான
அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதனால் கொழும்பு – அவிசாவளை, கொழும்பு –
இரத்தினபுரி மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக
பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, இரத்தினபுரி
மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் மாற்று
வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்துவருவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
கொழும்பு
மாவட்டத்தை அண்மித்த பகுதிகளிலும் மழை பெய்துவருவதாகவும், மழை பெய்யும்
பகுதிகளை நியூஸ்பெஸ்ட் குழுவினர் ஹெலிகொப்டரில் நேரடியாக சென்று பார்வையிட
உள்ளதாகவும் எமது அலுவலக செய்தியாளர் கூறினார்.
சீரற்ற வானிலையால் மலையகத்தின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை
மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் மக்களின் இயல்வு
வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்ந்தும் காணப்படக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. newsfirst.lk


0 Comments