கொழும்பு மாநகரில் குழாய் கிணறு மூலம்
பெறப்படும் நீர் அசுத்தமானது. இதனை பயன்படுத்துவதன் காரணமாக பெரதைரொயிட்
காய்ச்சல் பரவுகின்றது என எச்சரிக்கை விடுக்கும் கொழும்பு மாநகர சபையின்
பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் கொழும்பு கோட்டை
தொடக்கம் வெள்ளவத்தை வரையிலான பெரும்பாலான ஹோட்டல்கள் சாப்பாட்டுக்
கடைகளில் குழாய் நீர் பயன்படுத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரில் சுத்தமாகவும், சுகாதார முறையிலும் உணவு வகைகளை
ஹோட்டல்களை தெரிவு செய்து விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வை
கொழும்பு மாநகர சபை கடந்த திங்கட்கிழமை கிங்ஸ்பெரி ஹோட்டலில் ஏற்பாடு
செய்திருந்தது.
இதில் உரையாற்றும் போதே டாக்டர் பிரதீப் காரியவசம் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கொழும்பு நகரிலுள்ள பெரும்பாலான
ஹோட்டல்கள் சாப்பாட்டுக் கடைகளில் குழாய் நீர் பாவனை அதிகமாகவுள்ளது.
இக்குழாய் கிணறுகள் மூலம் அசுத்த நீரே கிடைக்கின்றது. மலசல
கூடங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீரே குழாய் கிணறுகளிலிருந்து
வெளிவருகின்றது.
கொழும்பு, கோட்டை தொடக்கம் வெள்ளவத்தை வரையிலான பகுதிகளில் குழாய் நீர் பயன்படுத்தப்படுகின்றது.
இதனால் பெராதைரொயிட் காய்ச்சல் பரவுகின்றது. இது தொடர்பில் கவனம்
செலுத்தி வருவதோடு அதனை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கைகளை
மேற்கொள்ளவுள்ளோம்.
இத்தோடு கொழும்பு நகரிலுள்ள பெரும்பாலான கடைகளில் ஜஸ்கிறீம், பால்,
யோகட் போன்ற உப உணவுப்பொருட்களை அதற்கு தேவையான குளிர்ச்சி வீதத்தில்
குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படுவதில்லை.
இரவு நேரங்களில் குளிர்சாதனப் பெட்டிகளின் செயற்பாட்டை நிறுத்தி விடுகின்றனர்.
இவ்வாறான உப உணவுப் பொருட்களை உட்கொள்வதாலும் தைரொயிட் காய்ச்சல் பரவுகின்றது.
உணவு வகைகளை சுத்தமாக தயாரிக்காமையாலும் உணவு நச்சுத்தன்மை ஏற்படுகின்றது.
பொதுமக்கள் சுகாதார பிரிவு என்ற ரீதியில் பொது மக்களுக்கு சுத்தமான
சுகாதாரமான உணவு வகைகளை பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்ய வேண்டியது எமது
கடமையாகும்.
எனவே, எமது பிரிவினர் கொழும்பு மாநகரிலுள்ள ஹோட்டல்கள் சாப்பாட்டுக்
கடைகள் உட்பட உணவுப்பார்சல்களை தயாரிப்போர் அனைத்தையும் பரிசோதிக்கும்
நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறு பரீட்சித்துப்பார்த்து சுத்தமான சுகாதார முறையில் உணவு
தயாரிப்பவர்கள் தெரிவு செய்யப்பட்டு வருடா வருடம் விருதுகளும்
சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றது.
இம்முறை 8 ஆவது வருடமாக இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.
நாட்டில் உல்லாசப்பிரயாணத்துறை வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, இங்கு
வருவோருக்கு நம்பிக்கையோடு உண்பதற்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட
உணவுகளை வழங்க வேண்டுமென்றும் டாக்டர் பிரதீப் காரியவசம்
தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், மேயர் முஸம்மில் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ பிரதி மேயர்
டைடஸ்பெரேரா உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் விருதுகளுக்கு தெரிவு
செய்யப்பட்ட ஹோட்டல்கள் உணவு விற்பனை நிலையங்களின் பிரதி நிதிகளும் கலந்து
கொண்டனர்.


0 Comments