புதிய விவசாய ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைத் தெரிவித்துள்ளது.
இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் இதற்கான அனுமதி கிடைக்கும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக்க வீரசிங்க கூறியுள்ளார்.
இதற்கமைய அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தவிர பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தவணைக் கொடுப்பனவினை செலுத்தியவர்களும் புதிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைந்துகொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளீர்க்கப்படும்போது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக செலுத்தப்பட்ட தவணைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்படலாம் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 60 க்கும் 63 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா ஓய்வூதியமும் 64 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு ஆயிரத்து 250 ரூபா ஓய்வூதியமும் வழங்கப்படவுள்ளது.
இதனைத் தவிர 71 வயது தொடக்கம் 77 வயது வரையான விவசாயிகளுக்கு மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவாக இரண்டாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.
ஓய்வூதியத் திட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்ட 77 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபாவை ஓய்வூதியமாக வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

0 Comments