Subscribe Us

header ads

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பத்திரிகை அறிக்கை

அப்துல் வஹ்ஹாப் நஸார்தீன் என்பவர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பாளராகவும், தலைமை அலுவலக கணனித்துறை பணியாளராகவும் கடந்த இரண்டு வருடங்களாய் கடமையாற்றி வந்தார். கடந்த 10.05.2014 அன்று பி.ப.2.30 மணியளவில் வங்கியில் பணம் எடுத்துவரச் செல்வதாகக் கூறி அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றவர், சரியாக பி.ப.3.33 மணிக்கு அமைப்பின் துணைத் தலைவரோடு தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு, தான் மருதானை சம்பத் வங்கிக்கு வந்த சமையம், மூன்று நபர்கள் தம்மை போலிஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்தியதோடு, தனது மணிப்பேர்ஸை எடுத்து ஆராய்ந்து விட்டு அதில் அமைப்பின் அங்கத்துவ அடையாள அட்டையை கண்டவுடன் தன்னை மூவரும் இழுத்து வண்டியில் போட்டுக் கொண்டு கடத்தி செல்வதாகவும், தன்னை அழைத்துச் செல்வதை அமைப்புக்கு அறிவிக்க வேண்டும் என்றவுடன் அதற்கு அனுமதியளித்ததாகவும், தற்போது குறித்த வண்டி மருதானை கலர் லைட் அருகில் இருப்பதாகவும் தகவல் தந்தார்.

இதனைத் தொடர்ந்து சரியாக பி.ப.3.41 மணிக்கு துணைத் தலைவரின் கையடக்க தொலைபேசிக்கு 'தன்னை கடத்திச் செல்பவர்களின் கையில் அமைப்பின் மாநாடுகளில் பிடிக்கப்பட்ட புகைப்பட எல்பம் ஒன்று உள்ளதாகவும்' SMS அனுப்பினார். உடனே நாம் அவசர போலிஸ் பிரிவுக்கு தகவல் கொடுத்ததுடன் அவரை தேடும் பணியில் ஈடுபட்டோம்.

இவருடன் தொலைபேசி இணைப்பை நாம் ஏற்படுத்த முனைந்தும் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பி.ப.4.55 மணிக்கு நாம் இணைப்பை ஏற்படுத்த முனைந்த போது அவரது தொலைபேசிக்கு RING போக ஆரம்பித்தது. ஆனால் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து மருதானை போலிஸ் நிலையத்திற்குச் சென்று எமது அமைப்பு சார்பாக குறித்த நபர் கடத்தப்பட்டுள்ளார் என்றும் போலிஸார் அழைத்துச் சென்றதாகவே எமக்கு தகவல் தந்துள்ளார் என்றும் இதை விசாரணைக்கு எடுக்குமாறு வேண்டியும் புகார் செய்தோம்.

புகார் செய்து விட்டு, அவர் ஏதாவது ஒரு போலிஸ் நிலையத்தில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றப்புலணாய்வுப் பிரிவு, என்பவற்றிற்கும் அறிவித்தோம். அத்தோடு, மருதானை, தெமடகொடை, கொடஹேன, மாளிகாவத்தை, புழூஃ மெண்டல், கிரேண்ட்பாஸ் ஆகிய போலிஸ் நிலையங்களுக்குச் சென்று குறிப்பிட்ட நபர் விசாரணைகளுக்காக அழைத்துவரப்பட்டுள்ளாரா என்றும் விசாரித்தோம். கொழும்பின் பல இடங்களிலும் இவரை தேடும் படலத்தை நாம் முடக்கி விட்டபோது இரவு 7.50 மணிக்கு இவரிடமிருந்து எமது அமைப்பின் செயலாளருக்கு அழைப்பு வந்தது. தன்னை கடத்திச் செல்லும் நேரத்தில் தெஹிவலை பாலத்தை கண்ட தாகவும், சுமார் 45 நிமிடங்கள் பயணம் செய்ததாகவும் தற்போது தான் ஓர் இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னை முழு நிர்வாணப்படுத்தி தனது ஆணுறுப்பில் இரத்தம் எடுத்ததாகவும், தனக்கு சித்திரவதை செய்வதாகவும், தனது தாடியை மழித்து விட்டதாகவும், அமைப்பின் பிரதானிகளின் பெயரைச் சொல்லி அவர்கள் குறித்து தன்னிடம் அதட்டி விசாரித்ததாகவும் தகவல் கொடுத்தார்.

இத்தகவல் கிடைத்தவுடன் நாம் உடனடியாக மருதானை போலிஸ் நிலையத்திற்குச் சென்று இது குறித்து அறிவித்தோம். ஜமாஅத் நிர்வாகிகள் போலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் குறித்த நபரிடமிருந்து எமக்கு SMS ஒன்று வந்தது. அதையும் போலிஸ் அதிகாரிகளுக்கு எடுத்துக் காட்டினோம். அறிவிக்கும் போதே 'இவரது தகவல்களில் சில சந்தேகத்திற்கிடமாய் உள்ளன. கடத்தியவர்கள் ஒரு போதும் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். அதே போன்று இவர் மருதானை சம்பத் வங்கிக்கு சென்றதாக கூறுகிறார். ஆனால் அலுவலகத்திற்கு அறுகிலேயே மாளிகாவத்தையில் சம்பத் வங்கி இருக்கும் போது இவர் ஏன் மருதானை சம்பத் வங்கிக்கு செல்ல வேண்டும்?' இவை எமக்கும் சந்தேகமாகவே உள்ளது. என்றாலும் எமது அலுவலகத்தில் கடமை புரியும் ஊழியர் என்ற அடிப்படையில் அவர் குறித்து விசாரிப்பது எமது தார்மீகக் கடமை என்ற ரீதியில் தான் அவர் எமக்குத் தந்த அனைத்து தகவல்களையும் ஒன்றுவிடாது தெரிவித்துள்ளோம் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தோம்.

மேலும், இவரது தொலைபேசி அலைகள் கிரேண்ட்பாஸ் டவரில் சமிக்ஞை தென்பட்டுள்ளதாக எமக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையும் அதிகாரிகளுக்கு அறிவித்தோம். இதையடுத்து, அதிகாரிகள் அவர் குறித்து தேடுதலில் ஈடுபடுவதாகவும், எங்களுக்கும் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு தகவல் தருமாறும் போலீஸ் அதிகாரிகள் வேண்டிக் கொண்டனர்.

மீண்டும் இரவு 12.06 மணிக்கு எங்களை தொடர்பு கொண்டு காலையில் தன்னை விடுவிப்பதாக கடத்தற்காரர்கள் கூறியதாகவும் கூறினார். அப்போது நாங்கள் எப்படியாவது தப்பிக்க வழி அமைத்துக் கொள்ளுமாறு கூறினோம். இத்தகவலையும் போலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்தோம்.

சரியாக இரவு 4.16 மணிக்கு குறித்த நபரிடமிருந்து செயலாளருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. தற்போது ஓரிடத்தில் தன்னை கடத்தல் கும்பல் விட்டுச் சென்றதாக தெரிவித்தார். எந்த இடத்தில் தான் இருப்பதாக தெரியவில்லையென்றும் சொன்னார். உடனே அவ்விடத்தை விட்டு பிரதான வீதியொன்றுக்கு வந்து, முச்சக்கர வணிடியில் ஏறி அலுவலகத்திற்கு வந்து சேருமாறு நாம் தகவல் கொடுத்தோம். சரியாக அதிகாலை 4.33 மணிக்கு குறித்த நபர் எமது அலுவலகத்தை வந்தடைந்தார்.

அவர் வந்தவுடன், என்ன நடந்தது என்பதை மறைக்காது கூறுமாறு நாம் வேண்டியதற்கு, ஆரம்பத்தில் தந்த தகவல்களையே மீண்டும் கூறினார். தன்னை நிர்வாணப்படுத்தி, பெண்களை தன்னோடு இணைத்து புகைப்படங்கள் எடுத்ததாக புதிய தகவல் ஒன்றினையும் தெரிவித்தார்.  உடனடியாக இதை போலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்தோம். இறுதியாக, எமது அதிகாலை தொழுகையை நிறைவேற்றிய பின் சரியாக 5.30 மணிக்கு குறித்த நபரை மருதானை போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தோம். அதிகாரிகளின் விசாரணையை அடுத்தே இவர் தனது குடும்ப பிரச்சினைக்காக ஆடிய போலியான நாடகமே இது என்பது அம்பலமானது. இவரது செயலுக்காக 'இனங்களுக்கிடையில் கலவரத்தை ஏற்படுத்த முனைந்தார்' என்ற அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எமக்கு அறிவித்த போது, 'ஒரு தனி நபர் செய்த தவறுக்காக சமூகத்தையே பாதிக்கும் விதமான வழக்கைத் தொடராமல் , குறித்த நபருக்கு அதிகபட்ச தண்டணையை வழங்கும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது' என்ற எமது வேண்டுகோளையும் அதிகாரிகள் முன் நாம் முன்வைத்தோம். 

இது தான் நஸார் தீன் விடயத்தில் நடந்த உண்மை சம்பவம். யாருக்காக நாம் புகார் செய்தோமோ, யாரை காப்பாற்றுவதற்காக இறுதி வரை முனைப்புக் காட்டினோமோ, யாருக்காக காவல் துறையின்  களத்தில் இறங்கி செயற்பட்டனரோ அந்த குறித்த நபர், நாம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை நாசமாக்கியதுடன், காவல் துறையினரையும் ஏமாற்றியதுடன், போலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் எமது அமைப்பினரையும் தலைகுனிய வைத்து விட்டார். உடனடியாக இவரை ஜமாஅத் பிரச்சாரகர் பொறுப்பிலிருந்தும் அலுவலக பொறுப்பிலிருந்தும் விலக்கி விட்டோம். இது போன்ற சுயநலவாதிகளை நாம் அங்கீகரிப்பது கிடையாது என்பதுடன் தவறு செய்யும் பட்சத்தில் யாராக இருந்தாலும் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நாம் எப்போதும் தயக்கம் காட்ட மாட்டோம் என்பதையும் இங்கு அறிவித்துக் கொள்கிறோம்.

இவரது ஏமாற்று நாடகத்திற்கும் எமது அமைப்புக்கும் எள்முனையளவு கூட சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிப்பதோடு,இவரது நாடகத்தால் போலிஸ் துறை மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் ஏற்பட்ட இழப்புகளுக்காக எமது ஆழ்ந்த மனவருத்தத்தை தெரிவிப்பதோடு, இவர் செய்த செயல் ஒட்டுமொத்த நாட்டையே பாதிக்கக் கூடிய பாரதூரமான குற்றம் என்பதால் அதிகபட்ச தண்டணையை இவருக்கு பெற்றுக் கொடுக்குமாறும் வினயமாய் உயர் அதிகாரிகளை வேண்டிக்கொள்கின்றோம்.

இப்படிக்கு,
ஆர். அப்துர் ராஸிக்
பொதுச் செயலாளர்

Post a Comment

0 Comments