Subscribe Us

மரத்தினை நட்டு வளத்தினை பெறுவோம்


[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்  – புத்தளம்]

 வீதி வழியாக சென்றுக் கொண்டிருக்கின்றேன். வெயில் உஷ்ணம் தலையை

பிய்கின்றது. கொஞ்சம் இளைப்பாறும் முகமாக மர நிழலைத் தேடி தஞ்சம் புகுகின்றேன். வெயில் உஷ்ணத்திற்கு இதமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

எனது சிந்தனை மரத்தைப் பற்றி செல்கின்றது. அல்லாஹ்வின் நிஹ்மத்தை எண்ணி மகிழ்கின்றேன், நன்றி தெரிவிக்கின்றேன்.

இது என்னைப் போன்ற எத்தனை எத்தனைப் பேருக்கு நிழல் தருகின்றது. நிழல் மட்டுமா தருகின்றது இல்லை நிலத்தை வளமாக பேண உதவுகின்றது, மழை வீழ்ச்சியை அதிகரிக்கின்றது, கனிவளங்களை அள்ளி இறைக்கின்றது, விறகு, பலகை, தொழில் வாய்ப்பு, பண வருவாய் என இன்னோரன்ன அனுகூலங்களை அனுபவிக்கின்றோம்.

ஒருவர் மரத்தை நாட்டுகின்றார் நாம் பயன் அடைகின்றோம். ஆனால் நாம் எத்தனைப் பேர் மரம் நாட்ட முன்வந்திருக்கின்றோம். இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பச்சை வீட்டுத்திட்டம் என்ற பெயரில் ஏதேனும் அமைப்புக்களும், ஜனாதிபதிக்கு பிறந்த நாள், நிறுவன வருட பூர்த்தி, விசேட நிகழ்ச்சி எனும் போது மரம் நாட்டினால் தான் உண்டு.ஆனாலும் மரம் நட்டுவதோடு சரி. அதனை ஒழுங்காக பராமரிக்காததால், ஒழுங்காக தண்ணீர் ஊற்றாததால் அவைகள் செத்து விடுகின்றன. அந்த திட்டங்கள் பயனற்று போகின்றன. வெறும் கண்துடைப்பு நாடகங்கள் அரங்கேறுகின்றன.
 
ஒரு மரக்கன்றை நடுவதற்கு நேரமில்லை, விருப்பமில்லை. ஆனால் ஒரு மரத்தை வெட்டுவதற்கு நேரம் இருக்கின்றது, விருப்பம் வருகின்றது. ஆக்குவது கடினமாகவும், அழிப்பது இலகுவாகவும் தான் இருக்கும்.

சிறு வயதிலிருந்து ஒவ்வொரு மாணாக்கருக்கும் மரம் வளர்ப்பின் அனுகூலங்களை தெளிவுப்படுத்த வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும். மரம் வளர்ப்பில் பெரியவர்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும்.

வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி என எம்மால் ஆன ஒரு சிறு மரக்கன்றையாவது நட்டுவதனால் எம்மை பார்த்து எமது பிள்ளைகளும், எம்மைப் பார்த்து எமது அயலவர்கள், நண்பர்களும் மரம் நாட்ட தூண்டப்படுவார்கள்.

மரத்தினால் எல்லாவிதமான பலாபலன்களையும் அடைகின்றோம். கடைசியில் அதனை அழித்தும் பயன் பெறுகின்றோம். இப்படியே செய்தால் நம் எதிர்கால சந்ததியினருக்கு எதை விட்டுச் செல்லப்போகின்றோம். வறட்சி, அழகற்ற தோற்றம் தான் கிடைக்கும் பரிசு.

அதிகரித்து வரும் சனப்பெருக்கம், அபிவிருத்தி நடவடிக்கைகள், உற்பத்தி செயற்பாடுகள் என்பனவற்றால் மரங்கள் வெட்டப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன. அபிவிருத்திகள், உற்பத்திகள் நடைப்பெறலாம் ஆனால் அதற்கு பதிலாக, மரம் வெட்டப்படுதலுக்கு ஈடாக மரக்கன்றுகள் நாட்டப்பட வேண்டும்.

ஒரு வீட்டின், ஒரு ஊரின், ஒரு நாட்டின் முன்னேற்றங்கள் , அபிவிருத்திகள் என்பன வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. என்றாலும் வீட்டின், ஊரின், நாட்டின் அழகும், வளமும் கூடவே பேணப்பட வேண்டும்.

உஷ்ண நிலை அதிகரித்துக் காணப்படும் இந்நாட்டில் எல்லா மரங்களும் வெட்டப்பட்ட நிலையில் எங்கே போய் குளிர்மையை தேடுவது என்பது கேள்விக் குறியே.

ஒரு மரம் நாட்டுவதால் பலர் அதன்மூலம் பயனடைகின்றனர். இது ஒரு சதக்கதுல் ஜாரிஆ ஆகவும் அமைகிறது. இன்றிலிருந்து நாம் ஒவ்வொருவரும் ஒரு சிறு மரக்கன்றையாவது நட்டு சதகதுல் ஜாரிஆவில் இணைந்திட்டாலே, வளமான குளிர்மையை பெற்றிடலாமே. வடிவாய் நாமும் வாழ்ந்திடலாமே.
மரம் நடுவோம் – வளர்ப்போம் – அனுகூலங்களை சுவைத்திடுவோம்

Post a Comment

0 Comments