Subscribe Us

header ads

விந்தை மனிதர்கள்.. அரசியல்வாதி கணவர் கோடீஸ்வரர். மனைவி தினமும் இருநூறு ரூபாய்க்கு காய்கறிகளை விற்பனை செய்து பிழைக்கிறார். (But கணவர் ஹாப்பி)

இந்தியா:

கடந்த மூன்று முறை எம்.எல்.ஏவாக பதவி வகித்து, தற்போது அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கக் கட்சியின் சார்பாக லோக்சபா வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள கோடீஸ்வரர் ஒருவரின் மனைவி தினமும் இருநூறு ரூபாய்க்கு காய்கறிகளை விற்பனை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார் என்றால் கேட்பதற்கு நிச்சயமாக ஆச்சர்யமாகத் தான் இருக்கும்.

ஏனெனில் நமது அரசியல்வாதிகள் அப்படி. சிலர் அதிகாரப்பூர்வமாக குறைந்த சம்பளமும், மறைமுகமாக அதிக கிம்பளமும் பெற்று அரசியலில் நுழைந்த குறைந்த காலத்திலேயே கோடீஸ்வரர்களாவது வழக்கம். ஆனால், இவர்களில் இருந்து பெரிதும் வேறுபட்டுள்ளார் ஜார்கண்ட் எம்.எல்.ஏ ஒருவரின் மனைவி.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்க கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோக்நாத் மகதோ. இவரது சொத்து மதிப்பு ரூ 2 கோடி என அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இவரது மனைவி முலானி தேவி இன்றும் பார்காவோனில் உள்ள சந்தையில் காய்கறி விற்று வருகிறார்.

ஏற்கெனவே இத்தொகுதியில் லோக்நாத் மகதோ 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்திருந்த போதும், அந்த செல்வாக்கைப் பயன்படுத்த விரும்பாமல் முலானிதேவி, ஒரு நாளைக்கு காய்கறி விற்பதன் மூலம் குறைந்தது 200 ரூபாய் சம்பாதிக்கிறேன் என்கிறார்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் வீட்டுச் செலவைப் பார்த்து கொண்டு மீதமுள்ள பணத்தை சேமிக்கவும் செய்கிறாராம் முலானி.

மேலும், தனது இரண்டு மகன்களுமே சுயதொழில் செய்வதாக கூறும் இவர், விவசாய கூலித் தொழிலாளர்களை வைத்து, தனது விவசாய நிலத்தில் உருளை கிழங்கு மற்றும் காலிபிளவர் பயிரிட்டு அவற்றை சந்தையில் விற்று வருகிறார்.

லோக்நாத் மகதோவிடம் அவரது மனைவி பற்றிக் கேட்கப்பட்டபோது, ‘என் மனைவி தன்னை கிராமத்து பெண்ணாகவே நினைத்து, விவசாய நிலத்தையும் மாடுகளையும் பராமரித்து வருகிறார். வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு, காய்கறிகளையும் விற்று வருகிறார்.

அவருக்கு அரசியலில் ஆர்வமில்லை. அவரது சேமிப்பு, மழைக் காலத்தில் உதவுவது போல, நான் தேர்தலில் போட்டியிடுவதற்கும் பயன்படுகிறது' என பெருமையாக கூறுகிறார்.

Post a Comment

0 Comments