Subscribe Us

header ads

பெர்முடா முக்கோணமும் புரியாத புதிர்களும்.ஒரு சுவாரஸ்ய கட்டுரை.

By : RAZANA MANAF

1492ஆம் ஆண்டு அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் கிறிஸ்டோபர் கொலம்பசும் அவர் மாழுமிகளும் மூழ்கிக் கிடந்தார்கள். அந்த மகிழ்ச்சியானது சூரியனைக் கண்ட பனி போல அதிக நாள் நீடிக்காமல்போனது அவர்களின் துரதிஷ்டம் தான்.

நடு சமுத்திரத்தில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த சமயம் கொலம்பசின் திசை காட்டும் கருவி நிலை இல்லாமல் சுழன்றது. கொலம்பஸ் கப்பலின் வெளியே வந்து பார்த்தார். வாநிலை மிக சீராக இருந்தது. இந்நிகழ்வு கொலம்பஸுக்கு குழப்பத்தைக் கொடுத்தது. எதனால் திசை காட்டும் கருவி அப்படிச் சுழல்கிறது எனும் கேள்வி அவரை துளைத்தது.

சில நாட்களுக்கு பின் நெருப்பு பிண்டங்கள் கடலில் குதித்தெழுவதை கொலம்பசின் குழுவினர் கண் கூட கண்டிருக்கிறார்கள். இந்நிகழ்வு அவர்களின் கப்பலில் இருந்து சற்று தூரத்தில் தான் நிகழ்ந்திருக்கிறது. அதன் பின் ஒரு மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்துவிட்டது.

இவை அனைத்தும் கொலம்பஸ் தனது அமெரிக்க கண்ட பயண குறிப்பேட்டில் எழுதி வைத்த தகவல்கள். தாம் வந்திருக்கும் இடம் சாதாரண பூமி இல்லை என்பதை கொலம்பஸ் உணர்ந்தார். அவ்விடம் மர்மம் நிறைந்த நிலம் என்பதை அறிந்தார்கள்.

கொலம்பஸுக்கு பல வினோத பரிட்சயங்களை அளித்த அவ்விடம் இன்னமும் தனது மர்ம முடிச்சுகளை கட்டவிழ்காமல் தான் இருக்கிறது. அமெரிக்காவின் மியாமி, ஜமைக்காவின் பொயெர்டோ மற்றும் பெர்மூடா என இணைபடும் இம்முக்கோண இடத்தின் இரகசிய சித்தாந்தங்கள் இன்னமும் பலரின் ஆரய்ச்சிக்குட்பட்டு தான் கிடக்கிறது. பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவில் பெர்மூடா முக்கோணம் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் மர்மங்களை அறிவார் யாரும் இல்லை.

கொலம்பஸின் பெர்மூடா முக்கோண குறிப்பை வைத்துப் பார்க்கையில் அவர் பெரும் பாக்கியசாலி. ஏன் என்று கேட்கின்றீர்களா ? அதன் பின் அவ்விடத்தை கடல் மார்கமாகவும், ஆகாய மார்கமாகவும் கடந்த பல கப்பல்களும் வானூர்திகளும் தடம் தெரியாமல் மறைந்து போனது.

1880ஆம் ஆண்டு அட்லாண்டா எனப்படும் அமெரிக்க போர்க்கப்பல் மாயமாய் மறைந்த நிகழ்வு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. பெர்மூடா கடலருகே 300 இராணுவ வீரர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த அட்லாண்டா திடீரென எவ்வித தடயமும் இல்லாமல் காணாமற் போனது.

இதனை தொடந்து 1.2லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பெர்மூடா பகுதியில் செல்லும் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும் மாயமாய் மறைந்து போவதை அறிந்தார்கள்.

1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பகல் வேலையில் பெர்மூடா கடல் பகுதியை ரோந்து வந்த 5 விமானங்களின் ராடார் தொடர்பு திடீரென துண்டிப்புக் கண்டது. இந்நிகழ்வின் விசாரனையின் போது படை கேப்டன் ‘பிரச்சனை ஏற்பட்டுவிட்டது’ எனக் கடைசியாக கூறியுள்ளார். அதன் பின் அவ்விமானங்களின் நிலை அறிவார் யாரும் இல்லை.இந்த 5விமானங்களையும் கண்டுபிடிக்கும் பொருட்டு Martin PBM-3 Mariner எனும் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. அவ்விமானமும் தனது 30 படைவீரர்களோடு காணாமல் போனது.

இம்மர்மங்கள் தொடர்பாக 1973ஆம் ஆண்டு UFO எனப்படும் பறக்கும் தட்டுகளின் ஆய்வாளர் ஒருவர் வெளியிட்ட தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென மறைந்து போகும் இவ்வகை சம்பவங்களுக்கும் வேற்றுக் கிரக வாசிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், வேற்றுக் கிரக வாசிகள் பெர்மூடா முக்கோண பகுதியை தங்களின் பூமி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இத்தகவல் உலக மக்களின் கடும் விமர்சனத்திற்குள்ளானது குறிபிட தக்கது.

பெர்மூடா முக்கோணப் பகுதியின் மர்ம முடிச்சுகள் பல விதமான வர்ணனைகளோடு உலக மக்களின் பார்வைக்குள்ளானது. அவ்விடத்தை பூமியின் சிறந்த புவியீர்ப்பு பகுதி எனக் கூறினார்கள், கடலடியில் ஏற்படக் கூடிய அதிர்வுகளின் தாக்கம் நிறைந்த பகுதி எனவும், அமெரிக்க இராணுவம் அவ்விடத்தை தனது அணுவாயுத சோதனை பகுதியாக பயன்படுத்தியதில் இப்பாதிப்புகள் ஏற்படுகிறது எனவும் கருத்துக் கொண்டுள்ளார்கள்.

இதை தவிர்த்து, வேற்றுக் கிரக வாசிகளின் பூமி ஆராய்ச்சி தளம், கடற் கன்னிகளின் நகரப் பகுதியெனவும் கூறுவது மக்களிடையே இப்பகுதி தொடர்பாக அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. மக்களின் கவனத்தை ஈர்க்கவும், பீதியை கிளப்பவும் ஏற்படுத்தப்பட்ட புரட்டு எனக் கருதினார்கள்.

பெர்மூடா முக்கோணத்தை பற்றிய பல கருத்துக் கணிப்புகள் இருந்தாலும், இன்றளவில் எந்தத் தகவலும் திருப்திகரமாக அமையவில்லை. கொலம்பஸின் குறிப்பேடு 500 ஆண்டுகளை கடந்தாகிவிட்டது. ஆராய்ச்சிகள் முழுமையடைய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதால் பெர்மூடா முக்கோணம் இருமாப்புடன் தனது மர்மத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அண்மைய தகவலாக தேசிய பூகோலவியலின் கூற்றின் படி பெர்மூடா பகுதியில் எந்த அபாயமும் இல்லை என்றும் மேற்சொன்னவை புரட்டு என்றும் குறிபிடுகிறார்கள். கடலில் மறையும் கப்பல்களை சுற்றினும் ஒரு தகதகப்பை போன்ற ஆவியை பரவவிட்டு கண்களுக்கு புலப்படாமல் செய்யும் நூதனம் தான் அது என்கிறார்கள். இது அமெரிக்க இராணுவத்தினர் கையாண்ட முறை.

அப்படி என்றால் கொலம்பஸ் தனது குறிப்பேட்டில் குறித்ததும் பொய்யான தகவலா ? அல்லது அவர் குறிப்பிட்டதாக சொல்லப்படும் பெர்முடா முக்கோணம் பொய்யா ? இதில் எது உண்மை பொய் என்பதை கண்டறிய உங்களில் யாராவது பெர்மூடாவைச் சுற்றிப் பார்க்க தயாரா ?

இன்றும் கூட பெர்முடா முக்கோண வலயத்தின் மீது விமானங்களோ அல்லது கப்பல்களோ செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.. மாயமாகி போகின்றவற்றை எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதனால்.

Post a Comment

0 Comments