Subscribe Us

header ads

4 ஜி தொழில்நுட்பத்தினை விட 1000 மடங்கு வேகமான 5 ஜி : அறிமுகம் செய்து வைப்பதற்கு தயாராகிறது தென் கொரியா

ஒரு காலத்தில் மனிதனின் வேகத்துக்கு இணையாக தொழில்நுட்பத்தினை வளர்த்தெடுப்பதில் பாரிய தடுமாற்றம் நிலவியது. அதுவே கடந்த சில தசாப்தங்களாக தொழில்நுட்பத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அதனை கண்டுபிடித்த மனிதனே தடுமாறும் நிலைமை உருவாகிவிட்டது.

தொடர்பாடல் வசதியினைப் பொறுத்தமட்டில் அதன் வளர்ச்சியானது மட்டற்று சென்று கொண்டிருக்கிறது. கண்டங்கள் கடந்து தற்போது அண்டவெளியையே கடந்து சென்றுவிட்டது.

ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு நாமும் நம்மைப் போன்ற பலரும் ஈடுகொடுத்துள்ளோமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் உண்மை. கணனியை பொறுத்த மட்டில் இன்டெல் பென்டியம் வகையை அனுபவித்த அளவிற்கு ஒப்பிடுகையில் இன்டெல் கோர் அல்லது கோர் டூ டுயோ வகையறா கணனிகளின் அனுபவம் எமக்கு மிக மிக குறைதான். இதனைத் தொடர்ந்து வந்த கோர் ஐ தொடரிலும் இதே நிலைமையே.

இதேபோன்றதொரு உணர்வுதான் கையடக்கத் தொலைபேசி தொடர்பாடலில் எமக்கு ஏற்பட்டுள்ளது. 1 ஜி, 2 ஜி, 3 ஜி. 4 ஜி நாம் பல ஜிக்களை அறிந்துள்ளோம். ஆனால் அதனை உபயோகப்படுத்தி அதன் பயன்பாடுகளை முழுமையாக அனுபவித்திருக்கிறோமா?

நாமும் எம்மைப் போன்ற மேலும் பல நாடுகளும் அதிகமாக 2 ஜி தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. 3 ஜி பயன்பாடே எம்மிடையே சரியாக பயன்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

அதற்குள் 4 ஜி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருப்பினும் இலங்கையை பொறுத்தளவில் 4 ஜியின் பயன்பாடுகள் பரந்தளவில் இதுவரையில் வரவில்லை. இந்நிலையில் உலகளவில் 4 ஜி பாவனையாளர்களை அதிகம் கொண்டுள்ள தென்கொரியாவானது 5 ஜி தொழில்நுட்பத்தினைஅறிமுகப்படுத்துவற்கு இப்போதே தயாராகிவிட்டது.

சுமார் 1950 கோடி ரூபா முதலீட்டில் தென்கொரியா தனது 5 ஜி திட்டத்தினை கடந்த மாதம் ஆரம்பித்துள்ளது. வெற்றிகரமான சோதனைகளைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டளவில் 5 ஜியினை தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்படும்.

தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் வணிக ரீதியாக உலகளவில் பயன்பாட்டுக்கொண்டு வரவும் தென்கொரியா எதிhபார்த்துள்ளது. இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தென் கொரியாவிலுள்ள எஸ்.கே டெலிகொம், கொரியா டெலிகொம் அதேபோல உற்பத்தி நிறுவனங்களான சம்சுங் மற்றும் எல்.ஜி. ஆகியவற்றுடன் தென் கொரிய அரசு இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளது.

10 வருடங்களுக்கு ஒரு முறை பாரிய மாற்றத்திற்குள்ளாகும் ஜி தொழில்நுட்பத்தில் 5 ஜி மிகப் பெரும் மாற்றமாக அமையும். அத்துடன் உலக சந்தையிலும் போட்டிக்கமிக்கதாக அமையும்.

உலகின் பல பாகங்களிலும் புல்லட் ரயிலின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சீனாவின்டம் மணிக்கு 500 முதல் 600 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும்ம் ரயில்கள் உள்ளன. அதுபோல இணையத்தின் வேகத்தினை அதிகரிக்கச் செய்தால் அது புதிய வாய்ப்புகளை எமக்கு வழங்கும் என தென் கொரிய விஞ்ஞான அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

5 ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தினை பரீட்சித்துப் பார்த்த்தில் ஒரே செக்கனின் முழுத் திரைப்படமொன்றினை தரவிறக்கும் அதி வேகத் திறமை கொண்டதென கண்டறியப்பட்டுள்ளது. அதாவது செக்கனுக்கு 800 எம்.பி.யினை தரவிறக்கம் செய்ய முடியும். இது 4 ஜியின் வேகத்தினை விட சுமார் 1000 மடங்கு அதிகமானது. இந்த வேகமே 5 ஜியின் சிறப்பம்சமாக உள்ளது.

கடந்த வருட நடுப்பகுதியில் 5 ஜியினை சோதனை செய்து சம்சுங் நிறுவனமும் தகவல் வெளியிட்டிருந்து.

இந்த 5 ஜி தொழில்நுட்பமானது பரீட்சித்துப் பார்கையில் இதன் வேகம் செக்கனுக்கு ஜிகா பைட் வேகம் கொண்டது என ஆதாரபூர்வமாக அறிய முடிந்ததாக சம்சுங் நிறுவனம் கூறியது.

இது தொடர்பில் அந்நிறுவனம் மேலும் கூறுகையில், 'இப்புதிய 5ஆம் தலைமுறை தொழில்நுட்பமான 5 ஜி இப்போது வணிக ரீதியான சந்தையில் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்த முடியாது.

சாதாரணமாக இந்த 5 ஜி தொழில்நுட்பத்தின் இணைய வேகமானது 4 ஜி போன்று பல நூறு மடங்கு அதிகமானது. எனவே வாடிக்கையாளர்களுக்கு 3டீ கேம்ஸ், உயர் ரக துல்லிய விடீயோக்கள் உள்ளிட்ட பாரிய தரவு பரிமாற்ற சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மேலும் இக்கம்பில்லா தொழில்நுட்பத்தின் மூலம் கூடிய தூரத்திற்கு விரைவான தரவுப் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம்' என தென் கொரியாவை மையமாகக்கொண்ட உலகின் முக்கிய இலத்திரனியல் நிறுவனமான சம்சுங் தெரிவித்திருந்தது.

உலகின் அதிகளவான 4 ஜி வாடிக்கையாளர்களைக்கொண்ட நாடு தென் கொரியாவாகும். தற்போது அங்கு 20 மில்லியனுக்கும் அதிகமான 4 ஜி வாடிக்கையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் தென் கொரியா 5 ஜியில் ஆர்வம் காட்டலாம்.

ஆனால் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற முக்கிய நாடுகளின் முக்கிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு 4 ஜி மட்டுமன்றி 3 ஜியைக் கூட சரியான முறையில் அனுபவிக்க முடிவதில்லை. இதற்குள் 5 ஜியா என அதிர்ச்சியும் அதிருப்பதியையும் தெரிவிக்கவும் செய்கிறார்கள்.

நிச்சயம் 5 ஜி தாக்கம் செலுத்தும் என தொழில்நுட்ப வளர்ச்சியில் நம்பிக்கைகொண்டு இப்போதே தென் கொரியாவுக்கு போட்டியாக சில நாடுகள் 5 ஜி மேம்பாட்டில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக சீனாவின் ஹுவாவே நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்வற்கான முனைப்பில் உள்ளது. இதனால் வரும் நாட்களில் 5 ஜி வளர்ச்சியினால் அது தொடர்பான உற்பத்தி சாதனங்கள் சந்தையில் அதிக தாக்கம் செலுத்தும். எனவே மொபைல் போன் சந்தையைப் போன்று உலகளவில் தொலைத்தொடர்பு சந்தையிலும் ஆதிக்கம் செலுத்த தென் கொரியா எதிர்பார்த்துள்ளது.


Post a Comment

0 Comments