Subscribe Us

header ads

உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் கூஸ்மன் அழகுராணி மனைவிக்காக சமைத்துக்கொண்டிருந்தபோது கைது

உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் என வர்ணிக்கப்படும் மெக்ஸிகோவைச் சேர்ந்த ஜோகின் எல் சபோ  கூஸ்மன்  மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

56 வதான ஜோகின் கூஸ்மன் கடந்த 13 வருடங்களாக கைது செய்யப்படுவதிலிருந்து தப்பி வந்தவர். இதனால் ஏறுத்தாழ ஒரு மர்ம நபராக அவர் கருதப்பட்டார். 

அமெரிக்க கண்டத்தின் பல நாடுகளில் ஹெரோயின், கனபீஸ், கொக்கேய்ன் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஜோகின் கஸ்மன், பலநூறு கோடி டொலர்களை சம்பாதித்தவர்.

கூஸ்மன் தலைமையிலான  போதைப்பொருள் கடத்தல் குழுவுக்குக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையிலான மோதல்களால் மெக்ஸிகோ வீதிகளில் தலையற்ற மனித சடலங்கள் காணப்படுவது வழக்கமாக இருந்தது.

ஜோகின் கூஸ்மன் அடையாளம் காணப்படாமல் இருப்பதற்காக பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மூலம் முகத்தோற்றத்தை மாற்றிக்கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது. மெக்ஸிகோவின் ஊழல் அரசியல்வாதிகள் சிலரின் ஆதரவும் ஜோகின் கூஸ்மனுக்கு இருந்த நிலையில் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவைச் சேர்ந்த படையினர் மேற்கொண்ட தேடுதல்கள் பலனளிக்காமல் இருந்தன.

ஆனால், கடந்த சனிக்கிழமை மெக்கஸிகோவின் சினோலா பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரான கலியாகன் நகரில் அமெரிக்க, மெக்ஸிகோ படையினர் கூஸ்மனை கைது செய்யும் முயற்சியில் வெற்றிபெற்றனர்.

கலியாகன் நகரில் பசுபிக் சமுத்திர கரையோரமுள்ள பிரபல சுற்றுலா தளமொன்றிலுள்ள ஆடம்பர ஹோட்டலொன்றிலிருந்து கூஸ்மின் கைது செய்யப்பட்டார். பல வருடங்களாக அமெரிக்க கண்டத்தை போதைப்பொருள் வர்த்தகத்தால் ஆட்டிப்படைத்த கஸ்மனை ஒரு துப்பாக்கி வேட்டு கூட தீர்க்காமல் அமெரிக்க, மெக்ஸிகோ படையினர்  உயிருடன் கைது செய்யதமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தேடுதலுக்கு ஒரு ஒரு வாரத்க்கு முன்னர் கூஸ்மனின் முன்னாள்  மனைவியான கிறிஸெல்டா லோபஸின் வீட்டில் தேடுதல் நடத்தியபோது ஆயுதங்கள் பலவற்றை படையினர் கண்டுபிடித்தனர். நகரின் வடிகாண் தொகுதியை நோக்கிச் செல்லும் ஒடுங்கிய சுரங்கமொன்றின் மூலம்; அவ்வீட்டிலிருந்து  கூஸ்மன் நூலிழையில் தப்பியதாக படையினர் சந்தேகித்தனர்.

அதன்பின் தொடர்ச்சியாக பல வீடுகளில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தேடுதல் நடவடிக்கை ஏறத்தாழ ஓர் அணுகுண்டுவெடிப்பை போல் இருந்தது. அணுகுண்டு வெடித்தவுடன் காளான் உருவம் படிப்படியாக விசாலமடைவதுபோல் இத்தேடுதல் நடவடிக்கையும் கலியாகன் நகரில் விரிவடைந்தது என படை அதிகாரியான மைக்கல் எஸ். விஜில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது பாரிய செல்வச் செழிப்பை அனுபவிக்க முடியாமல் மலைப்பிராந்தியக் காடுகளில் வாழ்வதில்  கூஸ்மன் சலிப்படைந்தால் கலியாகன், மஸாட்லன் நகரங்களில் வசிப்பதற்கு அவர் தீர்மானித்திருக்கக் கூடும். அது ஒரு மாபெரும் தவறு என மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.  இறுதியாக கஸ்மனின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்கு 5 வாரகாலமாக தேடுதல் நடைபெற்றதாக அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கூஸ்மன் கைது செய்யப்பட்டமை மெக்ஸிகோ ஜனாதிபதி என்ரிக் பேனா நீட்டோவுக்கு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

கூஸ்மன் பற்றி மெக்ஸிகோவில் ஏராளமான கதைகள் உள்ளன.

வறிய குடும்பமொன்றில் பிறந்த கஸ்மன் ஆரம்பத்தில் தோடம்பழ வியாபாரத்தில் தான் ஈடுபட்டாராம். ஆனால் பின்னர் ஆரோக்கிய தோடம்பழங்களுக்குப் பதிலாக உடலை அழிக்கும் கொடிய போதைப்பொருள் வியாபரத்தில் அவர் ஈடுபட்டு பயங்கரப் பேர்வழியாக மாறினார்.

1993 ஆம் ஆண்டு அவரை கொலை செய்வதற்கு மற்றொரு போதைப்பொருள் கடத்தல் குழு முயற்சித்தது. ஆனால், இலக்கு தவறி  மெக்ஸிகோவின்  கர்தினால்களில் ஒருவரான அதி.வண. ஜூவான் ஜீசஸ் ஒகாம்போ அச்சம்பவத்தில் கொல்லப்பட்டார். மெக்ஸிகோவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அச்சம்பவம் இடம்பெற்று சில நாட்களில் குவாத்தமலாவில் கைது செய்யப்பட்ட கூஸ்மன், மெக்ஸிகோவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அதையடுத்து கூஸ்மனுக்கு 20 வருட சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டபோதிலும் 2001 ஆம்ஆண்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றார்.

அதன்பின் கடந்த 13 வருடங்களாக தேடப்பட்ட கஸ்மனின் சொத்து மதிப்பு 100 கோடி அமெரிக்க டொலர் (சுமார் 13,000 கோடி இலங்கை ரூபா) என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டிருந்ததுடன் உலகின் 67 ஆவது மிக சக்திவாய்ந்த நபர் எனவும் குறிப்பிட்டிருந்தது.

படையினரால் செய்யப்பட்டபோது ஹோட்டல் அறையல் தனது மனைவி எம்மா கரோனலுக்காக உணவு சமைத்துக்கொண்டிருந்தாராம் கூஸ்மன். 24 வயதான எம்மா கொரோனல் முன்னாள் அழகுராணியாவார். 2007 ஆம் ஆண்டு அழகுராணி போட்டியொன்றில் பங்குபற்றிய எம்மாக கொரோனலின் அழகில் மயங்கிய ஜோக்கின் கூஸ்மன் அவர் மீது காதல் கொண்டாராம். பின்னர்  எம்மாவை ஜோக்கின் கஸ்ம் திருமணம் செய்தார். அப்போது எம்மா கொரோனல் 18 வயதானவராகவும் ஜோக்கின் கூஸ்மன் 47 வயதானவராகவும் இருந்தமை குறிப்பிடதக்கது.



Post a Comment

0 Comments