Subscribe Us

header ads

கலாநிதி ரீ.பி.ஜாயா ஒரு யுகபுருஷர்; இன்று அன்னாரின் ஜனன நினைவு தினம்

ஜீஷான் அசீர்
 
கலாநிதி துவான் புர்ஹானுத்தீன் ஜாயா என்ற உயரிய நாமம் இந்நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் முத்திரை பதித்த நாமமாகும்.

ஐக்கிய இலங்கையையும் அதன் சுதந்திரப் பெருமையையும் யதார்த்தமாக்க இப் பெருமகனார் மகத்தான பணிகளைப் புரிந்தவர்.

கலாநிதி ஜாயா ஒரு தேசியத் தலைவர். ஆசிரியராக, அதிபராக, அரசியல்வாதியாக, இராஜதந்திரியாக, அமைச்சராக எல்லாம் அவர் பதவிகளை வகித்து சேவைகளை அள்ளி வழங்கினார். அரசியல் துறையில் மட்டுமன்றி கல்வித் துறையிலும் இப்பெரியார் நிறைவான பணிகளை மேற்கொண்டார்.

முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டில் தான் சமூகத்தில் உயர்ச்சி தங்கியுள்ளது என்பதை வலியுறுத்திய அவர், முஸ்லிம்களின் கல்விக் கேந்திர நிலையமாக மருதானை ஸாஹிராக் கல்லூரியை முன்னேற்ற பெரிதும் பாடுபட்டார்.
தர்மராஜா, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகளில் ஆசிரியப் பணியை மேற்கொண்ட கலாநிதி ஜாயா, அரசியல் தலைவர்களான பிலிப் குணவர்தன, ரொபர்ட் குணவர்தன, கலாநிதி எஸ். ஏ. விக்ரமசிங்ஹ, கலாநிதி என். எம். பெரேரா போன்றவர்களுக்கு ஆசானாக விளங்கி சிறந்த மாணாக்கர்களை உருவாக்கினார்.

முஸ்லிம் கல்விக்காக ஸாஹிரா மூலம் பெரும் பங்காற்றினார். ஸாஹிராவின் வளர்ச்சியில் பெரும் ஆர்வம் செலுத்தி பணி செய்தார். ஸாஹிராக் கல்லூரியின் கிளைகளும் நாட்டின் பல்வேறு பாகங்களில் உருவாகின.

1923இல் ஸாஹிராவின் அதிபர் பதவியை ஏற்ற கலாநிதி ஜாயா, ஆறே ஆறு ஆசிரியர்களுடனும் 59 மாணவர்களுடனும் தமது அதிபர் பணியைத் தொடர்ந்தார். ஸாஹிராவை வளர்த்த அவர் அங்கிருந்து வெளியேறிய போது 3500 மாணவர்களும், 150 ஆசிரியர்களும் அங்கு இருந்தனர்.
அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் உதவியோடு ஜாயா சட்ட சபை உறுப்பினரானார்.

1935 இல் சட்ட சபைக்கு தெரிவான ஜாயா, சட்ட சபையில் கல்வி தொடர்பான நிறைவேற்றுக் குழுவில் இடம் பெற்று பாரிய பங்களிப்பை நல்கினார்.
இலங்கையின் முதலாவது அமைச்சரவையில் தொழில், சமூக சேவைகள் அமைச்சரான ஜாயா புதிய தொகுதி நிர்ணய முறையின் கீழ் உருவான பாராளுமன்றத்திலும் அங்கத்தவரானார்.

தேசிய காங்கிரஸ¤டன் சேர்ந்து பணிசெய்த கலாநிதி ஜாயா, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர். ஜேம்ஸ் பீரிஸ் போன்ற பிற மதத் தலைவர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டார்.
சிங்களத் தலைவர்களுடனும் இணைந்து சுதந்திர தேசியக் கோரிக்கை போராட்டத்தில் பங்கேற்றார்.
முஸ்லிம்களுக்கு சட்ட நிரூபணச் சபையில் அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென ஜாயா வலியுறுத்தினார்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான மசோதாவில் ஆணித்தரமாக பேசிய கலாநிதி ஜாயா ‘இக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயங்கத் தேவையில்லை.

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் ஏனைய அரசாங்கங்கள் முஸ்லிம்களின் இந்த நியாயமான கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளன.

ஸ்ரெய்ஸ் ஒப்பந்தம் மூலம் மத்ராஸ் மாநிலத்திலும் வங்காளத்திலும் இச்சலுகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது’ என வலியுறுத்தினார்.
கலாநிதி ஜாயா தமது சமுதாய நலன்களுக்காக மட்டுமன்றி பிற மத விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கினார்.

1950 இல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த ஜாயா பாகிஸ்தானில் இலங்கையின் முதலாவது உயர் ஸ்தானிகராகவும் நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அரசு வழங்கிய பிரஜா உரிமையையும் ஜாயா ஏற்கவில்லை. இவர் ஏழு ஆண்டுகள் உயர் ஸ்தானிகர் பணியைத் திருப்தியாக நிறைவேற்றினார்.
பஞ்சாப் பல்கலைக்கழகம் இப்பெரும் கல்விமானுக்குக் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தமை மற்றுமொரு முக்கிய பதிவாகும்.
மனித உள்ளங்களை நிறைய சம்பாதித்த இத்தலைவருக்குக் கொழும்பில் சொந்த வீடு இருக்கவில்லை. வாழ்க்கை பூராவும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்து எளிமையில் ஏற்றம் கண்டார். மனித நேயராக மங்காப் புகழ் சேர்த்தார்.

இவரைக் கெளரவித்து இலங்கை அரசு விசேட முத்திரையும் வெளியிட்டது. கொம்பனித்தெருவில் இவரின் பெயரில் ஒரு பாடசாலையும் உருவானது. ஒரு வீதிக்கும் இந்த மகானின் பெயர் சூட்டப்பட்டது.

1962 மே 31 ஆம் திகதி புனித மதீனா நகரில் மறைந்த கலாநிதி ஜாயா ‘ஜன்னதுல் பக்கீ’யில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.


இந்த மகத்தான தலைவரின் நினைவுகள் என்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கலாநிதி ஜாயாவின் பணிகளை நாம் நன்றி உணர்வுடன் நினைவு கூருவது அவசியம்.





Post a Comment

0 Comments