சிலருக்கு சாதம் சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் மதிய வேளையில்
சாதத்திற்கு பதிலாக சப்பாத்தி, தோசை, இட்லி என்று செய்து சாப்பிடுவார்கள்.
ஆனால் அப்படி தினமும் அவற்றை செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால்,
கோதுமை ரவை கொண்டு வித்தியாசமான சுவையில் பிரியாணி செய்து சாப்பிடுங்கள்.
இதில் பிரியாணிக்கு சேர்க்கப்படும் அனைத்து பொருட்களையும் சேர்ப்பதால், இது
உண்மையிலேயே பிரியாணி சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும். மேலும் இந்த
ரெசிபியானது மிகவும் ஈஸியானது. சரி, இப்போது அந்த கோதுமை ரவை பிரியாணியை
எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப்
சூடுநீர் - 3 கப்
கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு - 1 கப் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
புதினா - ஒரு கையளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
செய்முறை:
முதலில் கோதுமை ரவையை 1 டீஸ்பூன் நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,
தாளிப்பதற்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து
தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி,
புதினாவை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு, உப்பு சேர்த்து கிளறி,
காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் ஊற்றி, தட்டு கொண்டு மூடி, ஒரு 5 நிமிடம்
காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து, மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
இறுதியில் சுடுநீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க
விட்டு, பின் தீயை குறைவில் வைத்து, வறுத்து வைத்துள்ள ரவையை போட்டு கிளறி,
மூடி வைத்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்கினால், சுவையான
கோதுமை ரவை பிரியாணி ரெடி!!!


0 Comments