இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரின் போது
இலங்கைக்கு ஆபத்து காத்திருக்கின்றது. நாட்டுக்கு எதிராக
பொருளாதார தடைகள் கூட விதிக்கப்ப டலாம். ஆனால் இந்த நெருக்கடி
நேரத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடன் எம்மிடம் கோரிக்கை விடுத்தால்
நாட்டுக்காக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய தேசிய
கட்சி தயாராக இருக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற
உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ
தெரிவித்தார்.
உள்நாட்டில் அரசியல் செய்
வதைப்போன்று அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் அரசியல் செய்ய
முடியாது. சர்வதேசத்துடன் செயற்படுவதற்கு முழுமையாக
இராஜதந்திரம் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபை ஒன்றுக்கு சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்ற
முடியாது. எனவே வட மாகாண சபையின் பிரேரணை நிறைவேற்றம் நாட்டின்
அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது. இதனைக் காரணம் காட்டி
மாகாண சபை கலைக்கக்கூடப்படலாம். ஆனால் பிரச்சினைக்கு தீர்வாக
அமையாது என்றும் விஜேதாச எம்.பி. குறிப்பிட்டார்.
வடக்கை பொறுத்தவரை அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்வதிலோ வீதியை
செப்பனிடுவதிலோ மக்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். அந்த
மக்களுக்கு அபிமானம் மற்றும் கெளரவம் தொடர்பான பிரச்சினை உள்ளது.
அதனை தீர்க்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று
நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து
வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது
பாரிய நெருக்கடி
எமது நாடு இன்று சர்வதேச ரீதியில் பாரிய நெருக்கடியை
எதிர்கொண்டுள்ளது. சர்வதேச ரீதியில் அரசாங்கம் நெருக்கடிகளை
எதிர்கொண்டுள்ள நிலையில் அதன் காரணமாக மக்களும் பாரிய நெருக்கடிகளை
எதிர்கொண்டுள்ளனர். 1983 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் ஐந்து
ஜனாதிபதிகள் யுத்தம் செய்தனர். ஆனால் அக்காலத்தில் வராத யுத்தக்
குற்றச்சாட்டு தற்போது வந்துள்ளது. காரணம் தற்போதைய அரசாங்கம்
சர்வதேச மட்டத்தில் உரிய முறையில் இராஜதந்திர செயற்பாடுகளை
மேற்கொள்ளாமையே இதற்கு காரணமாகும்.
அதிகார நாடுகளே உலகை கட்டுப்படுத்துகின்றன
நான் 2007 ஆம் ஆண்டு இது தொடர்பில் அரசாங்கத்தை எச்சரித்தேன். ஆனால்
நான் கூறியதை அரசாங்கம் கேட்கவில்லை. காரணம் அரசாங்கத்தின்
சர்வதேசத்துடனான அணுகுமுறை போதுமானதாக இல்லை. உலகை ஒருசில
அதிகாரமிக்க நாடுகளே கட்டுப்படுத்துகின்றன. அந்த யதார்த்தத்தை
நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் எமது அரசாங்கம் அமெரிக்கா,
பிரிட்டன் மற்றும் கனடா, இந்தியா போன்ற நாடுகளுடன்
கோபித்துக்கொண்டிருக்கின்றது.
2008 இல் தெரிவுக்குழுவை கோரினேன்
வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வுகாண பாராளுமன்றத்
தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு கடந்த 2008 ஆம் ஆண்டு நான் யோசனை
முன்வைத்தேன். ஆனால் அன்று நான் கூறியதை அரசாங்கம் கேட்கவில்லை. அன்று
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்திருந்தால் அதில் கட்சிகள்
அங்கத்துவம் வகித்திருக்கும். ஆனால் அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு
பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தது. எனினும் அதில் அரசியல்
கட்சிகள் இணைந்துகொள்ளாமல் உள்ளன.
சதி இருந்தது
2009 ஆண்டு முடிக்கப்பட்ட யுத்தத்துக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு
வழங்கினாலும் இலங்கையை சிக்கவைப்பதற்கான சதி முயற்சி ஒன்று
காணப்பட்டது. அதனால்தான் யுத்தம் முடிந்ததும் ஐ.நா. செயலாளர் இலங்கை
வந்து வடக்குக்கு சென்று நிலைமையை பார்த்துவிட்டு இல்ஙகையுடன்
உடன்படிக்கை செய்தார்.
அந்த உடன்படிக்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக செயற்பாடு
ஒன்று முன்னெடுக்கப்படவேண்டும் என்று உடன்பாடு காணப்பட்டது.
அதன்படியே நலலிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அத்துடன்
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்
சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அதில்
கூறப்பட்டிருந்தது.
யுத்த வெற்றிக் களிப்பில் இருந்த அரசாங்கத்துக்கு அந்த
உடன்படிக்கையின் விடயங்கள் புரியவில்லை. இந்நிலையிலேயே ஐ.நா.
செயலாளர் தருஷ்மன் குழுவை நியமித்தார். அதாவது இலங்கை ரோம் சாசனத்தில்
கைச்சாத்திடாததன் காரணமாக இலங்கைக்கு எதிராக நேரடியாக வழக்குத்
தொடர முடியாது என்பதால் பான் கீ மூன் தருஷ்மன் குழுவை நியமித்தார்.
காஸா விவகாரம்
அதேவேளை காஸாவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கவும் பான் கீ
மூன் நிபுணர் குழுவை நியமித்தார். அந்தக் குழுவின் தலைவராக ஐ.நா. வின்
இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி பாலித்த கோஹன நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னணியிலேயே அமெரிக்காவும் பிரிட்டனும் ஜெனிவாவில்
தீர்மானங்களை கொண்டுவருகின்றன. அந்தவகையில் கடந்த வருடம்
இலங்கைக்கு நன்னடத்தை காலமாகவே காணப்பட்டது. இலங்கையின் மனித உரிமை
நிலமையில் முன்னேற்றம் ஏற்படும் என்று உலகம்
பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் எவ்விதமான முன்னேற்றமும்
ஏற்படவில்லை.
எனது சட்டமூலப் பிரேரணை
இதன் பின்னணியிலேயே நீதிபதிகளை பதவி விலக்கும்போது பொதுநலவாய
அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றும் வகையிலான சட்டமூலம் ஒன்றை நான்
பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்தேன். அந்த சட்டமூலம்
விவாதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனை
நிறைவேற்றியிருந்தால் சர்வதேச மட்டத்தில் ஒரு மதிப்பை
பெற்றிருக்கலாம். ஆனால் இதனை நிராகரித்ததன் மூலம் நாட்டில்
சட்டத்தின் ஆட்சிபடுத்தலும் சுயாதீன நீதித்துறையும் இல்லை என்று
சர்வதேசம் எண்ணும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. இவ்வாறான
நிலைமையில் ஜெனிவாவுக்கு சென்று எவ்வாறு நாட்டில்
சுயாதீனநீதித்துறை இருப்பதாக கூற முடியும்?
ஜெனிவா வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
சர்வதேச சட்டங்கள் தெரியாமல் அரசாங்கம்
செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஜெனிவாவுக்கு அமைச்சர்களான
ஜீ.எல். பீரிஸும் மஹிந்த சமரசிங்கவும் வழங்கிய வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஜனாதிபதி செயலாளர்
லலித் வீரதுங்க தலைமையிலான குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளனர்.
யுத்த வெற்றி என்பது அரசாங்கத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. மாறாக
அனைவரும் பங்களிப்பு வழங்கினர். 2006 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு
ஆதரவு வழங்குவது குறித்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன்
உடன்படிக்கை செய்தது. ஆனால் அரசாங்கம் அந்த உடன்படிக்கையை மீறி 17
எம்.பி. க்களை எடுத்தது. அந்தவகையில் நேர்மையான முறையில் நாம்
செய்வதற்கு முயற்சித்த உதவிகளை அரசாங்கம் புறக்கணித்தது.
உள்நாட்டைப் போன்று சர்வதேசத்துடன் முடியாது
உள்நாட்டில் அரசியல் செய்வதைப்போன்று அரசாங்கம் சர்வதேச
சமூகத்துடன் அரசியல் செய்ய முடியாது. சர்வதேசத்துடன்
செயற்படுவதற்கு முழுமையாக இராஜதந்திரம் அவசியமாகும். இதன்
யதார்த்தம் அரசாங்கத்துக்கு இன்னும் புரியவில்லை. அதனால்தான்
அரசாங்கம் இருட்டில் தடுமாறிக்கொண்டிருக்கின்றது.
தமிழ்த் தரப்புடன் நேரடியாக பேசவேண்டும்
நாட்டின் பிரச்சினையை 2.5 மில்லியன் தமிழ் மக்களுடன் பேசித்
தீர்த்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை.
பிரச்சினைக்கு தமிழ்த் தரப்புடன் பேசியே தீர்வுகாணவேண்டும்.
அரசாங்கம் அதனை செய்யவில்லை. நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த
நல்லிணக்கம் இன்னும் அடையப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் மட்டுமே
மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
இராஜதந்திரம் இல்லை
அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு ஜெனிவாவில் பாரிய
நெருக்கடி உள்ளது. என்ன நடக்கும் என்று உறுதியாக கூற முடியாது. ஆனால்
பொருளாதாரத் தடைக் கூட வரும் அபாயம் உள்ளது. சர்வதேசத்துடன்
இராஜதந்திர ரீதியில் செயற்படாமையே இதற்கு காரணமாகும்.
வடக்கில் பிரச்சினை தீரவில்லை
வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியதுடன் அரசாங்கம் பிரச்சினை
முடிந்துவிட்டதாக கருதுகின்றது. ஆனால் தற்போது பிரச்சினை
தீவிரமடைந்துவிட்டது. வடக்கு தம்முடன் இருப்பதாக காட்டுவதற்கு
அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் நாட்டின் ஏனைய மாகாண சபைகள்
போன்றுகூட செயற்படுவதற்கு வடக்கு மாகாண சபைக்கு சுதந்திரம் இல்லை.
அந்தவகையில் வடக்கில் இன்று பிரச்சினை தீவிரமடைந்துவிட்டது.
அதனால் வட மாகாண சபை விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றும் அளவுக்கு
நிலைமை சென்றுவிட்டது.
சட்டவிரோதமானது
கேள்வி வடக்கு மாகாண சபையில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை
நிறைவேற்றப்பட்டுள்ளமை அரசாங்கத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?
பதில் மாகாண சபை ஒன்றுக்கு இவ்வாறு சர்வதேச விசாரணை கோரி பிரேரணை
நிறைவேற்ற முடியாது. இது நாட்டின் அரசியலமைப்புக்கு முற்றிலும்
விரோதமானது. 13 ஆம் திருத்தச் சட்டத்தில் இது தொடர்பில் ஏற்பாடுகள்
எதுவும் கூறப்படவில்லை. எனவே இது அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட
விடயமாகும். . இந்த விடயத்தைக் காரணம் காட்டி மாகாண சபை
கலைக்கக்கூடப்படலாம். ஆனால் இது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது
கேள்வி இதனால் அரசாங்கத்துக்கு என்ன பாதிப்பு?
பதில் சட்ட ரீதியில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் சர்வதேச மட்டத்தில் தற்போதைய நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அரசியல் நோக்கம்
கேள்வி வட மாகாண முதலமைச்சர் சட்டம் தெரிந்தவர். இந்தப் பிரேரணை
அரசியலமைப்புக்கு முரணானது என்றால் அவர் ஏன் இதனை செய்யவேண்டும்?
பதில் முதலமைச்சர் சட்டம் தெரிந்தவராக இருப்பினும் அனைத்து அரசியல்
விடயங்களுக்கு உட்பட்டது என்பதனை மறந்துவிடக்கூடாது.
நேரடி பேச்சு அவசியம்
கேள்வி பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் கூட்டமைப்புடன் நேரடியாக
பேச்சுநடத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றீர்களா?
பதில் உள்நாட்டில் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் தமிழ்த் தரப்புடன்
பேச்சு நடத்தியே தீரவேண்டும். அந்தவகையில் கூட்டமைப்புடன்
பேச்சுநடத்தவேண்டும். சர்வதேசம் உதவிகளை வழங்கலாம். ஆனால்
தமிழ்த் தரப்புடன் பேசினால் மட்டுமே தீர்வைப் பெறலாம்.
ஆதரவு வழங்க நாம் தயார்
கேள்வி ஜெனிவாவில் பொருளாதார தடைகள் வரும் அபாயம் உள்ளதாக
கூறுகின்றீர்கள். அப்படியானால் அவ்வாறு நிலைமை வந்தால்
அரசாங்கத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்குமா?
பதில் அரசாங்கம் நேர்மையான முறையில் எமது ஆதரவைக் கோரினால் இந்த
விடயத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க நாங்கள் தயாராக
இருக்கின்றோம். ஆனால் எமது உதவிகளை அரசாங்கம் புறக்கணிக்கின்றது.
நேர்மைான முறையில் கேட்டால் நாம் நாட்டுக்காக ஆதரவு வழங்குவோம்.
கேள்வி அவ்வாறு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினால் அதனால் தமிழ் மக்கள் தமக்கு அநீதி ஏற்படுவதாக கருதுவார்களா?
பதில் தமிழ் மக்கள் அவ்வாறு எண்ணுவதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால்
பொருளாதார தடைகள் என்பது தென்பகுதி மக்களை மட்டும் பாதிக்கும்
விடயமல்ல. வட பகுதியையும் பாதிக்கும். எனவே நாட்டின் அனைத்து மக்களின்
நன்மைக்காகவே நாங்கள் இந்த இடத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க
தயாராக இருப்பதாக கூறுகின்றோம்.
வடக்கில் அபிவிருத்தி பிரச்சினையை தீர்க்காது
வடக்கை பொறுத்தவரை அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்வதிலோ வீதியை
செப்பனிடுவதிலோ மக்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். அந்த மக்களுக்கு
அபிமானம் மற்றும் கெளரவம் தொடர்பான பிரச்சினை உள்ளது. அதனை
தீர்க்கவேண்டும். அதனை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். வடக்குக்கு
அபிவிருத்தி என்பது பிரச்சினைக்கு தீர்வல்ல என்பதனை நாம்
புரிந்துகொள்ளவேண்டும்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் அவசியம்
கேள்வி இலங்கை தொடர்பில் அமெரிக்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் ?
பதில் யுத்தக் குற்ற விடயம் குறித்த அமெரிக்க பிரதிநிதி ஒருவர் அண்மையில்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். தற்போது அமெரிக்காவின் உயர்மட்ட
பிரதிநிதி ஒருவர் வருகிறார். இவர்கள் இங்கு வந்து தமது நடவடிக்கைகளுக்குத்
தேவையான தகவல்களையே திரட்டு கின்றனர். அந்தவகையில் இலங் கைக்கு எதிரான
நடவடிக்கை ஒன்றை ஜெனி வாவில் எடுப்பதற்கான சாத்தியம் காண ப்படுகின்றது.
இந்த நிலையில் இவற்றிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்துக்கு ஐக்கிய தேசிய
கட்சி ஆதரவு வழங்கலாம். ஆனால் அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களை
நிறுவவேண்டும். 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும்.


0 Comments