பால்மா வாங்கச் சென்ற தமது தந்தையை
தேடுகின்ற, செல் தாக்குதலில் தாயை இழந்த 3 குழந்தைகளுக்கும் நான் என்ன
பதில் கூறுவேன் என காணாமல்போன ஒருவரின் சகோதரி ஆணைக்குழுவின் முன்னிலையில்
நேற்று கதறி அழுததில் கிளிநொச்சி மாவட்ட செயலகமே சோகமயமானது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல்போனோரைக்
கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று நான்காவது நாளாக கிளிநொச்சி
மாவட்ட செயலகத்தில் காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகளை
மேற்கொண்டனர்.
இந்த விசாரணைகளில் கலந்துகொண்ட கிளிநொச்சி கோணாவில் பகுதியில்
தற்பொழுது வசித்து வருகின்ற செல்வேஸ்வரி என்ற பெண் தன்னுடைய
சகோதரரான செல்வக்குமார் என்ற நபர் கடந்த 2009ஆம் ஆண்டு 3ஆம் மாதம்
15ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்தளன் பகுதியில் தன்னுடைய
கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகளையும் எனது பாதுகாப்பில்
விட்டுவிட்டு பால்மா வாங்குவதற்காக சென்றிருந்தார்.
அவர் தற்பொழுதும் வீடு திரும்பி வரவில்லை. இக் குழந்தைகளின் தாய்
கடந்த 2009ஆம் ஆண்டு 3ஆம் மாதம் 10ஆம் திகதி செல் தாக்குல் ஒன்றில்
உயிரிழந்துவிட்டார். இதனால் இக் குழந்தைகள் தற்பொழுது பெற்றோரை
இழந்த நிலையில் எனது பாதுகாப்பில் வசித்து வருகின்றார்கள்.
இக் குழந்தைகள் தம்முடைய தந்தை எங்கே? என தினமும் கேட்கின்ற
பொழுதிலும் என்னால் அவர்களுக்கு எந்தப் பதிலையும் தெரிவிக்க
முடியவில்லை. எனவே பால்மா வாங்கச் சென்ற தம்முடைய தந்தை எங்கே? என்று
கேட்கின்ற குழந்தைகளுக்கு இந்த ஆணைக்குழுவினரே பதில் கூற வேண்டும்
என குறித்த பெண் கதறி அழுதமையால் மாவட்ட செயலகமே நேற்று சோகத்தில்
மூழ்கியது.
இனியும் பதிவுகள் வேண்டாம்
இதேவேளை இனியும் பதிவுகள், விசாரணைகள் வேண்டாம் இதுவே இறுதியானதாக
இருக்கட்டும். எங்களுக்கான முடிவை கூறுங்கள் என நேற்றைய
விசாரணையில் கலந்துகொண்ட காணாமல்போனவர்களின் உறவுகளில் பலர்
ஆணைகுழுவினரிடம் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தனர்.
தந்தையை, தாயை, பிள்ளைகளை, சகோதரர்களை, கணவனை இழந்தவர்கள் என
ஒன்றுகூடிய காணமல்போனவர்களின் உறவினர்கள் தம்மை விசாரணைகள்
என்ற போர்வையில் தொடர்ந்தும் துன்புறுத்த வேண்டாம் எனவும் தமக்கு தமது
காணாமல்போன உறவுகள் தொடர்பான பதிலை கூறவேண்டும் என்ற கோரிக்கையையும்
முன்வைத்தனர்.
154 பேரிடம் கிளிநொச்சியில் முதற்கட்ட விசாரணை
இதேவேளை கிளிநொச்சியில் கடந்த 18ஆம் திகதியிலிருந்து நான்கு
நாட்கள் தொடர்ச்சியாக குறித்த ஆணைக்குழுவினர் மேற்கொண்ட
விசாரணையில் சுமார் 154 பேர் கலந்துகொண்டு தமது உறவுகள் தொடர்பாக
கோரிக்கைகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கமைய கடந்த 18ஆம் திகதி ஸ்கந்தபுரம் இல.1 அ.த.க.பாடசாலையில்
நடைபெற்ற விசாரணைகளின் போது அக்கராயன் பகுதியைச் சேர்ந்த 20 பேரும்
ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த 15 பேரும் கனகபுரத்தைச் சேர்ந்த
ஒருவருமாக 36 பேர் காணாமல்போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு
கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதேபோல் கடந்த 19ஆம் திகதி ஆனைவிழுந்தான் ஐயனார்புரம்
வித்தியாலயத்தில் நடைபெற்ற விசாரணைகளின் போது ஆணைக்குழுவின்
முன்னிலையில் வன்னேரிக்குளத்தைச் சேர்ந்த 37பேரும்
ஆனைவிழுந்தானைச் சேர்ந்த 15 பேருமாக 52 பேர் காணாமல்போன தமது
உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியுள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற
ஆணைக்குழுவின் அமர்வில் பொன்நகர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரும்
பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 7 பேரும் மலையாளபுரத்தில்
வசிக்கின்ற 28பேருமாக 41 பேர் காணாமல்போன தமது உறவுகளை
மீட்டுத்தருமாறு கோரியுள்ளனர்.
நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த
அமர்வில் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் சாட்சியங்களைப் பதிவு
செய்துள்ளனர்.
ஆணைக்குழுவின் விசாரணைகளில் நம்பிக்கையில்லை
கிளிநொச்சியில் காணாமல்போனோர்
தொடர்பாக உறவினர்களிடம் ஆணைக்குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளில்
தமக்குத் திருப்தி இல்லை எனவும் தமது உறவுகள் காணாமல்போன
நாளிலிருந்து இதுபோன்று பல விசாரணைகளுக்கு தாங்கள்
பதிலளித்ததாகவும் பலரிடம் தாம் தமது உறவுகள் தொடர்பில் பதிவு
செய்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனால் தமக்கு தற்பொழுது அவசரம் அவசரமாக நடைபெறுகின்ற குறித்த விசாரணைகளில் நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்தனர்.
9 கிராமசேவையாளர் பிரிவுகளில் மட்டுமே விசாரணை
கிளிநொச்சி மாவட்டத்தின் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்ற ஆணைக்குழுவினர் முதற்கட்டமாக கடந்த 4
நாட்களாக இம் மாவட்டத்திற்குட்பட்ட ஸ்கந்தபுரம்,
அக்கராயன்குளம், கனகபுரம், வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்,
பொன்நகர், பாரதிபுரம், மலையாளபுரம் ஆகிய 9 கிராமசேவையாளர்
பிரிவுகளில் அவசரம் அவசரமாக நடத்துகின்ற குறித்த விசாரணைகளில்
நம்பிக்கையில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


0 Comments