இத்தாலியில் உள்ள துஸ்கானி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பார்பரா பலான்ஜோனி (39). இவர் ராணுவ டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கொசாவா நாட்டில் நடைபெறும் உள்நாட்டு போரை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ படையினருடன் இத்தாலி ராணுவ வீரர்களும் முகாம் அமைத்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பார்பரா பலான்ஜோனியும் கொசாவா முகாமில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து பார்பரா கூறுகையில், முகாமை சுற்றி ஏராளமான பூனைகள் கைவிடப்பட்டு திரிகின்றன. இவை முகாமில் உள்ள வீரர்களுடன் செல்லமாக பழகுகின்றன. அகதா என்ற பெயரிடப்பட்ட கருவுற்ற பெண் பூனை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டது. அது குட்டிகளை ஈனும் நிலையில் இருந்ததால், அதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் இறந்துவிடும்.
எனவே அதனை பாதுகாத்து சிகிச்சை அளித்தேன் என்றார். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரியவந்ததும் அவர்மீது ராணுவ ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இத்தாலி நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனையடுத்து ராணுவ விதிமுறைகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் என இத்தாலி சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற பிப்ரவரி 7ம் தேதி இந்த வழக்கு இத்தாலியில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments