Subscribe Us

header ads

கார் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் பனிச்சறுக்கு விபத்தில் படுகாயம்

உலகக் கார் பந்தய சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவரான, ஜெர்மன்
வீரர், மைக்கேல் ஷுமேக்கர், பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டு விபத்தில் தலையில் அடிபட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


கோமா நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ஷூமேக்கருக்கு உடனடியாக நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்று க்ரெனோபிள் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிக்கை ஒன்றில் கூறினர்.               


மைக்கேல் ஷூமேக்கரின் மிக நெருங்கிய நண்பரும், பிரான்ஸின் முன்னோடி விபத்து சிகிச்சை வல்லுநருமான மருத்துவர்,பேராசிரியர் ஜெரார்ட் செய்லானும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.



ஷூமேக்கர், மெரிபெல் என்ற இடத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, பாறை ஒன்றின் மீது விழுந்து தலையில் அடிபட்டது என்று செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் அவர் அப்போது ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.



உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அப்புறப்படுத்தப்பட்டார்.



44 வயதான ஷுமேக்கர் ஏழு முறை பார்முலா-1 கார் சாம்பியன்ஷிப் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.



அவர் 2012ம் ஆண்டில் , இரண்டாவது முறையாக, பார்முலா-1 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.



அவருடைய 19 ஆண்டு கார் பந்தய விளையாட்டு வாழ்க்கையில், ஷூமேக்கர் 91 பந்தய வெற்றிகளை ஈட்டியிருக்கிறார்.

1999ல் பிரிட்டிஷ் கிராண்ட் பிரி மோட்டார் பந்தயப் போட்டிகளின்போது, ஏற்பட்ட விபத்தொன்றில், ஷூமேக்கரின் கால் முறிந்தது.



2006ல் முதலில் ஓய்வு பெற்ற இந்த ஜெர்மன் நாட்டு வீரர், மூன்றாண்டுகளுக்குப் பின்னர், ஸ்பெயினில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில், கழுத்து மற்றும் முதுகுத்தண்டு காயமடைந்து, பின்னர் நலமடைந்து , 2010ல் நடந்த பார்முலா-1 பந்தயத்தில் கலந்து கொண்டார்.                      

Post a Comment

0 Comments