Subscribe Us

header ads

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண ஜெயலலிதாவே தடை! - அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய மத்திய அரசாங்கம் தயாராக உள்ள
போதும் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவே இதற்கு தடையாக இருந்து அரசியல் செய்து வருகிறார். இந்தப் பிரச்சினையில் விட்டுக் கொடுப்பதற்கு நாம் தயாராக இல்லை, எமது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத் தில் நேற்று இடம்பெற்ற மீன்பிடி அமைச்சு தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது:

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி வழங்காமல் தடுத்து வைக்கும் செயற்பாடு தொடர்ந்து கடுமையாக முன்னெடுக்கப்படும் எனவும் எமது வளங்களை சூறையாடி வடபகுதி மீனவர்களுக்கு பாதிப்பு எற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தீர்வுகாணப்படும் எனவும் அமைச்சர் கூறினார். இலங்கை தமிழ் மக்களின் மனித உரிமை குறித்துப் பேசும் தமிழ்நாடு, வடபகுதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகிறது.இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் மீன் பிடிப்பது மட்டுமன்றி கடல் வளத்தையும் நாசப்படுத்தி வருகின்றனர். இதனால் வருடாந்தம் 95 பில்லியன் ரூபாவரை எமக்கு இழக்க நேரிடுகிறது.
இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் எமக்கு எதுவித பிரச்சினையும் கிடையாது. இது மீன்பிடி தொடர்பான பிரச்சினையன்றி அரசியல் பிரச்சினையாகும். தங்களுக்கு மீன்பிடிக்க அனுமதியில்லாத போதும் இந்திய மீனவர்கள் தடையின்றி வடக்கு கடலில் மீன்பிடிப்பதாக வடபகுதி மீனவர்கள் அங்கலாய்கின்றனர். எமது வளங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க முடியாது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இந்த பிரச்சினை தொடர்பில் அவருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. மீண்டும் கருணாநிதி முதலமைச்சரானால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டமுடியும் என நம்புகிறோம். எமது கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு படகுகளில் அநேகமானவை அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை. எனவே ஜெயலலிதாவோ இந்த அரசியல்வாதிகளோ இந்தப் பிரச்சினையை தீர்க்க தயாராக இல்லை.

இந்தியாவுக்கு குறிப்பிட்ட காலங்கள் எமது கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கும் யோசனையொன்றை த. தே. கூ. பாராளுமன்ற எம்.பி. ஒருவர் முன்வைத்தார். எமக்கு சொந்தமான எந்த வளத்தையும் குறைக்கவோ ஒதுக்கவோ நாம் ஒருபோதும் தயாராக இல்லை. பல வருடங்களின் பின்னர் வட பகுதி மக்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு தடங்கல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண பல்வேறு தரப்புடன் பேச்சு நடத்தப்பட்டது. இணக்கப்பாட்டு அடிப்படையில் இரு நாட்டு மீனவர்களும் முன்னர் விடுவிக்கப்பட்டனர். இந்தியாவில் கைதாகும் எமது மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாது விடுவிக்கப்பட்டனர். ஆனால் ஜெயலலிதா அங்கு கைதாகும் எமது மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கிறார்.
இந்த பிரச்சினையில் நாம் விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லை. எமது கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்களின் படகுகளை திருப்பி வழங்காமல் தடுத்து வைத்து வருகின்றோம். இதுவரை 53 படகுகளும் 82 மீனவர்களும் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எமது துறைமுகங்கள் நிரம்பினாலும் தொடர்ந்து இந்திய படகுகளை தடுத்து வைக்க திட்டமிட்டுள்ளோம்.எவ்வளவுதான் தடுத்தாலும் எமது மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்கு சட்டவிரோதமாக செல்கின்றனர். சிலர் இந்திய கடற்பரப்பிற்கு செல்லாத நிலையிலும் பிடிபடுகின்றனர். அடுத்த வருடம் முதல் படகு கண்காணிப்பு முறைமை அறிமுகப்படுத்தப்படும். வேறு நாட்டு கடல் எல்லையை நெருங்கியவுடன் படகில் முன்னெச்சரிக்கை அலாரம் அடிக்கும். இதனை மீறி வேறு நாட்டு எல்லைக்கு செல்லும் மீனவர்கள் தண்டிக்கப்படுவர்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது 1 1/2 இலட்சம் ரூபா தண்டமோ தவறினால் 2 வருட சிறைத் தண்டனையோ விதிக்கப்படும். இது தவிர அதிக மீன்கள் உள்ள இடங்கள் குறித்து வீ. எம். எஸ். முறையினூடாக மீனவர்களுக்கு தகவல் வழங்கப்படும். இதனூடாக ஒரு மாதத்தில் பிடிக்கும் மீன்களை 3, 4 நாட்களில் பிடிக்க முடியும். காலநிலை எதிர்வுகூறல்களையும் முன்கூட்டி துல்லியமாக வழங்க உள்ளோம்.உலகில் எப்பகுதியில் இருந்தாலும் எமது நாட்டு படகுகள் நேரடியாக கண்காணிக்கப்படும். என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments