Subscribe Us

header ads

ஜக்ஸ் கலிஸின் இறுதி டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு வெற்றி

தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றிபெற்றுள்ளது. ஜக்ஸ் கலிஸின் இறுதி டெஸ்ட் போட்டியாக இந்தப் போட்டி அமைந்திருந்தது.
 
டேர்பனில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பாக முரளி விஜய் 97 ஓட்டங்களையும், செற்றேஸ்வர் புஜாரா 70 ஓட்டங்களையும், அஜின்கியா ரஹானே ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும், விராத் கோலி 46 ஓட்டங்களையும் பெற அவ்வணி 334 ஓட்டங்களைப் பெற்றது.
 
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக டேல் ஸ்ரெய்ன் 6 விக்கெட்டுக்களையும், மோர்னி மோர்க்கல் 3 விக்கெட்டுக்களையும், ஜே.பி.டுமினி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
தென்னாபிரிக்க அணி சார்பாக ஜக்ஸ் கலிஸ் 115 ஓட்டங்களையும், ஏபி.டி.வில்லியர்ஸ் 115 ஓட்டங்களையும், அல்விரோ பீற்றர்சன் 62 ஓட்டங்களையும், றொபின் பீற்றர்சன் 61 ஓட்டங்களையும், கிறேம் ஸ்மித் 47 ஓட்டங்களையும், டேல் ஸ்ரெய்ன் 44 ஓட்டங்களையும், ஃபப் டு பிளெஸிஸ் 43 ஓட்டங்களையும் பெற அவ்வணி 500 ஓட்டங்களைப் பெற்றது.
 
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக இரவீந்திர ஜடேஜா 6 விக்கெட்டுக்களையும், சகீர் கான் 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஷமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பாக அஜின்கியா ரஹானேயின் 96 ஓட்டங்கள், செற்றேஸ்வர் புஜாராவின் 32 ஓட்டங்களைத் தவிர, ஏனைய வீரர்கள் பிரகாசிக்கத் தவற, அவ்வணி 223 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக றொபின் பீற்றர்சன் 4 விக்கெட்டுக்களையும், டேல் ஸ்ரெய்ன், மோர்னி மோர்க்கல் இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
 
58 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சார்பாக அல்விரோ பீற்றர்சன் 31 ஓட்டங்களையும், கிறேம் ஸ்மித் 27 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற, அவ்வணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கினை அடைந்தது.
 
இப்போட்டியின் நாயகனாக டேல் ஸ்ரெய்னும், இத்தொடரின் நாயகனாக ஏபி.டி.வில்லியர்ஸும் தெரிவாகினர்.
 

2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை தென்னாபிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments