இலங்கையில் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள மின்னணு முறையிலான தேசிய
அடையாள அட்டையில், முஸ்லிம் ஆண்கள் அணியும் தொப்பியும் பெண்கள் அணியும்
பர்தாவும் கொண்ட புகைப்படங்கள் இருக்கமாட்டாது என்று வெளியாகியுள்ள
அறிவிப்புக்கு முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் அடையாளத்துக்கு அவ்வாறான தடை
இருக்குமானால், முஸ்லிம்கள் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று
அரசாங்கத்தின் துணை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.
ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.
தொப்பியோ அல்லது பர்தாவோ முகத்தை மறைப்பது அல்ல என்றும் ஓராண்டுக்கு
முன்னர் ஏற்கனவே இதுபோன்ற பிரச்சனை எழுந்தபோது, பாதுகாப்பு அமைச்சின்
செயலாளருடன் பேசி தீர்வு காணப்பட்டது போல் இதற்கும் தங்களால் தீர்வு காண
முடியும் என்றும் அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் நம்பிக்கை
வெளியிட்டுள்ளார்.
'இந்தப் பிரச்சினை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஏனைய மதங்களுக்கும் உள்ளது.
குறிப்பாக, கத்தோலிக்க அருட்சகோதரிகளுக்கு கூட ஏற்படலாம் என்பதால் இதற்கு
சகல தரப்பினரும் இணைந்து தீர்வுகாண வேண்டியதன் அவசியம்' பற்றியும் அவர்
சுட்டிக்காட்டினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் (மின்னணு) தேசிய அடையாள
அட்டையில் காணப்படும் புகைப்படத்தில் எந்தவொரு மதத்தையோ சமூகத்தின்
கலாச்சாரத்தையோ பிரதிபலிக்கும் வகையிலான எந்தவொரு அடையாளமும் இருக்க
மாட்டாது என ஆட்பதிவு தினைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர். எம். எஸ்.
சரத்குமார தெரிவித்திருந்தார்.
நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சென்றிருந்த ஆட்பதிவு
திணைக்களத்தின் ஆணையாளர், அடுத்த ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் இந்த
இலத்திரனியல் அடையாள அட்டை நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
'கலாசாரத்திற்கும் தேசிய அடையாள அட்டைக்கும் தொடர்பு இல்லை.முகத்தை வைத்து
அடையாளம் காணும்போது தொப்பி அல்லது ஏனையவற்றை தலையில் அணிவதால் ஆட்களை
அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக சோதனைகளின் போது
இப்படியான கஷ்டங்கள் ஏற்படுகின்றன என்றார் ஆட்பதிவுகள் ஆணையாளர்.
சட்டத்தை அமுல்படுத்துவதே தனது கடமை என்றும் அதில் மாற்றங்களோ அல்லது
திருத்தங்களோ செய்வதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.


0 Comments