ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக சிங்கப்பூர் டாஓ பாயோ உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற ஆறு நாடுகளுக்கு இடையிலான நேஷன்ஸ் கிண்ண வலைபந்தாட்ட வல்லவர் லீக் போட்டியில் 67 : 37 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றியீட்டியது.
இப் போட்டியின் முதல் ஐந்து நிமிடங்களில் பின்னடைவைக் கண்ட இலங்கை அணி அதன் பின்னர் திறமையாக விளையாடி கோல்களைப் பெற்றவண்ணம் இருந்தது.
மத்திய களத்தில் விளையாடிய கண்டி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி கயாஞ்சலி அமரவன்ச அதீத திறமையை வெளிப்படுத்தி பலரது பாராட்டுதல்களைப் பெற்றார். இவரைவிட இலங்கையின் முன்னாள் அணித் தலைவி தர்ஜினி சிவலிங்கம், அணித் தலைவி மரீஷா பெர்னாண்டோ, உதவி அணித் தலைவி செமினி அல்விஸ், விசாகா வித்தியாலய மாணவியான கயானி திசாநாயக்க ஆகியோர் மிகத் திறமையாக விளையாடினர்.
இப்போட்டியின் முதலாவது 15 நிமிடங்களில் ஐக்கிய அமெரிக்காவிடம் சிறு அளவிலான சவாலை எதிர்கொண்ட இலங்கை 14 : 10 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது 15 நிமிட நேரத்தில் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இலங்கை 21 : 10 என முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் மூன்றாவது 15 நிமிடங்களில் அமெரிக்காவின் ஓரளவு சவாலுக்கு மத்தியில் 15 : 10 என மீண்டும் இலங்கை முன்னிலையில் இருந்தது. கடைசி 15 நிமிடங்களில் அதி சிறந்த வியூகங்களுடன் விளையாடி ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி கோல் நிலையை 17 : 7 என ஆக்கி ஒட்டுமொத்த ஆட்ட நேர முடிவில் 67: 37 என்ற கோல்கள்; அடிப்படையில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியானது தங்களுக்கு உற்சாகத்தையும் தைரியத்தையும் ஊட்டியுள்ளதாக அணித் தலைவி மரீஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.
பப்புவான நியூ கினி அணிக்கு எதிரான போட்டியில் இழைத்த சில தவறுகளைத் திருத்திக்கொண்டு அமெரிக்காவுக்கு எதிரான போட்டியை எதிர்கொண்டதாகவும் அது இறுதியில் பலனளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெறவுள்ள சிங்கப்பூருக்கு எதிரான போட்டியிலும் வெற்றிபெறுவதற்கு கடுமையாகமுயற்சிக்கவுள்ளதாக மரீஷா பெர்னாண்டோ கூறினார்.
இது இவ்வாறிருக்க, 'அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றபோதிலும் இலங்கை வீராங்கனைகள் அளவுக்கு மீறிய ஆர்வம்கொண்டவர்களாக காணப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் தவறுகளை இழைக்கின்றனர். சற்று நிதானம் கலந்த வேகத்துடன் விளையாடினால் வெற்றிகள் நிச்சயம்' என பயிற்றுநர் சொமித்தா டி அல்விஸ் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு எதிரான இன்றைய போட்டி சற்று சிரமமாக அமையும் என்கின்றபோதிலும் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறும் வகையில் வீராங்கனைகளைத் தயார்படுத்தவுள்ளதாக பயிற்றுநர் கூறினார்.
0 Comments