Subscribe Us

இணைய பயன்பாட்டில் சிறந்த நாடு ஸ்வீடன்

 (Mishal Ahmed)

இணையத்தைப் பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா? world wide web foundation நடத்திய ஆய்வின்படி இந்தப் பெருமையை ஸ்வீடன் தட்டிச்சென்றுள்ளது. ஸ்வீடனின் பக்கத்து நாடான நோர்வே இரண்டாவது இடத்தில் உள்ளது.

இணையம் மற்றும் சமூக ஊடகம், மக்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளவும், போராடவும், அநியாயங்களைத் தட்டிக்கேட்கவும் பயன்பட்டு வருவது ஊக்கம் தரும் விஷயம் என்று இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்ட அமைப்பின் நிறுவனர் டிம் பெர்னர்ஸ் லீ தெரிவித்துள்ளார்.

இணையப் பயன்பாடு தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் இணையவாசிகளின் எண்ணிக்கை, இணையத்தின் வேகம், இணைய தணிக்கை போன்ற அம்சங்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மாறாக டிம் பெர்னர்ஸ் லீயின் world wide web foundation வளர்ச்சி மற்றும் மனித உரிமை ஆகியவற்றை மேம்படுத்துவதில் இணையத்தின் பங்கை கணக்கில் கொள்ளும் வகையில் ஆய்வு நடத்தி வலை அட்டவணையை (Web Index) வெளியிட்டு வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு இந்த அறிக்கை முதலில் வெளியிடப்பட்டது. அப்போது மொத்தம் 61 நாடுகள் பரிசிலிக்கப்பட்டு வெளியிடப்பட்ட பட்டியலில் ஸ்காண்டினேவிய தேசமான ஸ்வீடன் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு மேலும் 20 நாடுகளோடு விரிவாக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையிலான பட்டியலிலும் ஸ்வீடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
எல்லோருக்கும் இணைய வசதி, கருத்து சுதந்திரம் ,தணிக்கையின்மை, பயனுள்ள தகவல்கள் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஸ்வீடன் சும்மா ஒன்றும் முதலிடத்தை பெற்றுவிடவில்லை. அந்நாட்டில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் அதிவேக இணைய வசதி சாத்தியமாகியுள்ளது. எல்லோருக்கும் இணைய வசதியை அளிக்கும் வகையில் 2000 ம் ஆண்டு வாக்கில் கொண்டு வரப்பட்ட அனைவருக்குமான தகவல் சமூகம் சட்டத்தின் மூலம் ஸ்வீடன் இதை சாத்தியமாக்கி இருப்பதாக லீ பாராட்டியுள்ளார்.

அதே நேரத்தில் இணைய தணிக்கை ஜனநாயகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் என்றும் இது தொடர்பாக துணிச்சலான நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments