Subscribe Us

கல்முனை மேயருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ஹக்கீம்


கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

சிராஸ் மீராசாஹீப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை மீறியுள்ளார். இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இதனையும் மீறி அவர் கல்முனை மேயராக செயற்படுவாராயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மேயர் பதியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு சிராஸ் மீராசாஹிப்பிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அத்துடன் இந்த இராஜினாமாவிற்கான காலக்கெடு நேற்று வியாழக்கிழமை காணப்பட்டது. எனினும் இதுவரை சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவில்லை.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹீப் செயற்பட முடியாது. இதற்கான அங்கீகாரத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கமாட்டாது. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். 

அத்துடன் கட்சியின் தார்மிக பொறுப்பை மீறிய அநாகரிகமான முறையில் அவர் செயற்பட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக கட்சிக்குள்ளும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய இரண்டு ஊர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் கட்சியின் தலைமைக்கு வழங்கிய உறுதிமொழியை மீறும் வகையில் கடந்த ஒரு வார காலமாக தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனை ஒருபோதும் கட்சி அனுமதிக்காது. எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக எந்தவொரு அரசியல் அந்தஸ்தும் சிராஸிற்கு வழங்கப்படமாட்டாது" என்றார்.

Post a Comment

0 Comments