கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியை
நிந்தவூர் பிரதேசத்தில் இடைமறித்து ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்கள் மீது
பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதையடுத்து பொதுமக்கள் பொலிஸார்
மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளனர். இதனால் இப் பகுதியில் தற்போது பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு
படையினருக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலையை
அடுத்து நேற்றைய தினம் அப் பகுதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக பாடசாலைகள், அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள்,
வங்கிகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன்
போக்குவரத்தும் தடைப்பட்டது. கடந்த இரு வார காலமாக நிந்தவூர்
பிரதேசத்தில் இரவு வேளைகளில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில்
ஈடுபட்டதுடன் அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக
சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் சிலரை நேற்று முன்தினம் இரவு கடற்கரையில் வைத்து பொது மக்கள் மடக்கிப் பிடித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு தரப்பினர்
குறித்த மர்ம நபர்களை அங்கிருந்து மீட்டுச் சென்றதுடன் வானை நோக்கி
துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர். இதனையடுத்து
பிரதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன் மக்கள்
அல்லோலகல்லோலப்பட்டனர்.
இச் சம்பவத்தைக் கண்டித்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக
சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு
கோரியுமே பொது மக்கள் நேற்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டித்தனர்.
இந்நிலையில் இன்று காலை கல்முனை - அக்கரைப்பற்று வீதியை மறைத்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பொலிஸார் கண்ணீர் புகை மேற்கொண்டுள்ளதோடு
பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட மூன்று பேரையும் கை தும் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது குறித்தப் பகுதியில் 500ற்கும்
அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments