சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு
நிலையம் மூடப்பட்டு சில நாட்களுக்குள் 90,000 மெற்றிக்தொன் மசகு
எண்ணெய் கப்பலொன்று திடீரென இங்கு வந்துள்ளமையானது பல்வேறு
சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன
பொது ஊழியர் சங்கத் தலைவர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.
சுத்திகரிப்பு நிலையத்தை நிரந்தரமாக மூடி விடுவதற்கு திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அசோக ரங்வல மேலும் தெரிவிக்கையில்,
மசகு எண்ணெய் ஏற்றிக்கொண்டு கப்பலொன்று வருவதென்றால்
சுத்திகரிப்பு நிலையத்தில் எஞ்சியிருந்த எண்ணெய் மூலம் சில நாட்கள்
நிலையத்தை இயங்கச் செய்திருக்கலாம்.
ஆனால் கப்பல் வருவதை வெளிப்படுத்தாது சுத்திகரிப்பு நிலையம் இழுத்து மூடப்பட்டது. யாரது தேவைக்காக என்பது புரியவில்லை.
அத்தோடு திடீரென 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயுடன் கப்பலொன்று வந்துள்ளமை பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் வரை கப்பல் வருவது ஏன்
மறைக்கப்பட்டது? திடீரென மசகு எண்ணெய் கப்பல் எப்படி வந்தது?
இதற்கான கோரிக்கை எப்போது விடுக்கப்பட்டது.? கப்பல் வருவது
தெரிந்திருந்தால் ஏன் நிலையம் மூடப்பட்டது. இதன் பின்னணியில்
உள்ளவர்கள் யார்? மசகு எண்ணெய் கொண்டு வருவதால் நாட்டுக்கு லாபம்
கிடைக்கிறது.
நேரடியாக சுத்திகரித்த எண்ணெய் கொண்டு வருவதற்கு அதிக செலவாகும். அத்தோடு நாட்டுக்கும் நஷ்டம்.
எனவே, திட்டமிட்டு மசகு எண்ணெய் கொண்டுவருவதை நிறுத்தி
சுத்திகரிப்பு நிலையத்தை மூடி விட்டு சுத்திகரித்த எண்ணெய் கொண்டு
வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் மூலம் கமிஷன் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். அதற்காகவே திட்டமிட்டு
சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிடுவதற்கு நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படுவதாகவும் அசோக ரங்கல தெரிவித்தார்.
0 Comments