Subscribe Us

header ads

கொழும்புப் பிரகடனம்: காமன்வெல்த் தலைவர்களின் உறுதிமொழிகள்

கொழும்பில் நடந்துமுடிந்துள்ள காமன்வெல்த் அரசு தலைவர்களின் 23வது உச்சிமாநாட்டில் இம்முறை 50 நாடுகள் பங்கெடுத்திருந்தன. 27 நாடுகளின் அரசு தலைவர்கள் நேரடியாக கலந்துகொண்டிருந்தார்கள். இந்த மாநாட்டின் சர்வதேச தலைவர்கள் தமது இலக்குகளாக சில இணக்கப்பாடுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
தமது எல்லா குடிமக்களும் ஜனநாயக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு உரிய சூழலை உறுதிப்படுத்துவதற்கு எல்லா காமன்வெல்த் தலைவர்கள் உறுதியெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயக கலாசார பண்பாடுகளை பேணுவதும் மேம்படுத்துவதும் அரசாங்களின் வேலை மட்டுமன்றி அதில் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூகத்துக்கும் பங்கு இருக்கவேண்டும் என்றும் அரசு தலைவர்கள் உடன்பட்டுள்ளார்கள்.
காமன்வெல்த் நாடுகளின் குடிமக்களை பாதுகாப்பதற்கு rule of law அதாவது சட்டத்தின் மேலான ஆட்சியே இன்றியமையாத விடயம் என்றும் நீதித்துறையை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் பக்கச்சார்பற்ற வகையிலும் பேணுவதற்கும் தலைவர்கள் மீண்டும் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். 


ஊடக மற்றும் மதச் சுதந்திரம்


எல்லோருக்கும் அபிவிருத்தி அடைவதற்கு உள்ள உரிமை உட்பட சிவில், சமூக, அரசியல், கலாசார உரிமைகளை பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் தமக்குள்ள பொறுப்பை அதன்படியே நிலைநாட்டுவதாக இம்முறை காமன்வெல்த் மாநாட்டின் தலைவர்கள் உறுதியெடுத்திருக்கிறார்கள்.
காமன்வெல்த் நாடுகளின் ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும் இலங்கையில் நடந்துமுடிந்துள்ள உச்சிமாநாடு இணக்கம் கண்டிருக்கிறது.
பலவீனமான நிலையில் உள்ள மக்களை மத கடும்போக்குவாதத்திலிருந்து பாதுகாக்கவும் நாடுகளில் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் அரசு தலைவர்கள் உடன்பட்டிருக்கிறார்கள்.
பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் காமன்வெல்த் தலைவர்கள் கண்டிக்கிறார்கள்.
ஆயுத மோதல்களின்போது கோழைத் தனமாக புரியப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உடன்பட்டுள்ள தலைவர்கள், அவ்வாறான பாலியல் கொடூரங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடல் மற்றும் உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி சமூகத்திலும் மோசமான விளைவுகளை கொண்டுவரும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
சிவில் சமூக அமைப்புகளை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் தலைவர்கள் உடன்பட்டுள்ளார்கள். பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக அயராது உழைப்பதையும் அவர்கள் தமது இலக்காக அறிவித்துள்ளார்கள்.
வறுமையை ஒழிப்பது தான் உலகம் இன்று எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய சவால் என்று உணர்ந்திருக்கின்ற காமன்வெல்த் தலைவர்கள், அதற்காக நீடித்து நிலைத்திருக்கக்கூடிய, அனைத்து தரப்பையும் உள்வாங்கிக்கொண்ட சமத்துவமான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கான கொழும்பு பிரகடனத்திலும் இன்று கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments