Subscribe Us

அவுஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றி

அவுஸ்திரேலிய அணியுடனான 7  ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 57 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இச்சுற்றுப்போட்டியிலும் 3:2 விகிதத்தில்  இந்திய அணி வென்றது.

 பெங்களூருவில் நடைபெற்ற  7 ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ஓட்டங்களைக் குவித்தது.

 இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா 158 பந்துகளில் 16 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகள் உட்பட 209 ஓட்டங்களைக் குவித்தார். 16 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அவர் புதிய சாதனையையும் படைத்தார்.

மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் 57 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பெற்றார். வீரட் கோஹ்லி ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா 28 ஓட்டங்களுடனும் யுவராஜ் சிங் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

எனினும் அணித்தலைவர்  எம்.எஸ்.டோனி 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகள் உட்பட  62 ஓட்டங்களைக் குவித்து அணியை மேலும் பலப்படுத்தினார். இப்போட்டியில் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 101 ஓட்டங்களைக் குவித்தது.

 அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஷேவியர் டொஹர்த்தி 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி  45.1 ஓவர்களில் 326 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஜேம்ஸ் போல்க்னர் 73 பந்துகளில்  6 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகள் உட்பட 116 ஓட்டங்களைக் குவித்தார்.

 முதல்தர அல்லது சர்வதேச போட்டிகளில் போல்கனர் பெற்ற முதல் சதம் இதுவாகும். ஏனினும் இப்போட்டியில் தனது அணியின் தோல்வியை அவரால் தவிர்க்க முடியவில்லை.

 அவுஸ்திரேலிய அணியில் வேறு எவரும் அரைச்சதத்தையும் பெறவில்லை. ஷேன் வொட்ஸன் 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள், பௌண்டரிகள் உட்பட 49 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டமிழந்தார்.

 இந்திய பந்துவீச்சாளர்களில் மொஹமட் சமி 52 ஓட்டங்களுக்கு  3 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் ரோஹித் சர்மா தெரிவானார்.



Post a Comment

0 Comments