பலர் நாள்தோறும் உணவில் மீனை இணைத்துக் கொள்கின்றனர். ஆனால் மீனவ சமூகத்தின் அவலத்தை எவரும் வெளி உலகுக்கு கொண்டு வருவதில்லை. இது மீனவ சமூகத்தின் குற்றச்சாட்டு.
இன்று எம்மோடு இணைத்துக் கொள்பவர் ஒரு வித்தியாசமான வகையில் மீனவத் தொழிலை மேற்கொள்ளும் மீன வர். இவர் தனது மீனவத் தொழிலை கடலிலோ அல்லது குளத்திலோ மேற்கொள்பவர் அல்ல. இவர் கொழும்பு–2 கொம்பனித்தெரு பகுதியில் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தையை ஊடுருவி செல்லும் ஏரியிலேயே கடந்த முப்பது வருடங்களா தனது மீனவ தொழிலை மேற்கொண்டு வருகின்றார்.
தெமட்டகொடையைச் சேர்ந்த 42 வயதான எம். இம்தியாஸ் யூசுப் எனும் இம் மீனவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார். இம்தியாஸ் யூசுப்பின் மீனவத் தொழில் மிகவும் விசித்திரமானது. இம்தியாஸ் மீன்பிடிக்கும் ஏரியானது கொழும்பு நகரின் பல பிரதேசங்களுக்குள்ளும் நுழைந்து பின்னர் பழைய நாடாளுமன்றத்தோடு இணைந்த பிரதேசத்தையும் கடந்து இறுதியாக காலிமுகத்திடல் கடலுக்குள் சங்கமிக்கின்றது. இது போர்த்துக்கீசர் காலத்துக்கு முன் மன்னர்களின் ஆட்சிக்காலத்து ஏரி என வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.
இவ் ஏரியே போர்த்துக்கீசரின் ஆட்சியில் ஒல்லாந்தர் கோட்டையைக் கைப்பற்ற இயலாத வகையில் போர்த்துக்கீசரின் பெரும் காவல் அரணாகவும் திகழ்ந்தது. இந்த ஏரி ''பேர ஏரி" என அன்றும் இன்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த ஏரியில் இம்தியாஸ் வலை வீசி மீன்பிடிப்பதை சேர். சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை பாலத்தின் மீதிருந்த மக்கள் கூட்டமாய் கூடி ரசிப்பார்கள். மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாது இவர் இவ் ஏரியல் மீன்பிடி தொழிலை மேற்கொள்கிறார். இவருடன் இணைந்து மேலும் எட்டுக்கும் மேற்பட்டோர் இந்த ஏரியில் தங்கள் தொழிலை நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.
“நான் போயா தினத்தை தவிர்ந்த ஏனைய நாட்களில் மீன்களை பிடித்து வருகின்றேன். நானும் எனது நண்பர்களும் வலை வீசி நுட்பமாக மீன்பிடிப்பதை மக்கள் ஆவலாய் பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்ப்பார்கள். வெளிநாட்டைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளின் பார்வையிலும் நாங்கள் விழுந்துவிடுவோம். எங்களை அவர்கள் விநோதமாக பார்ப்பார்கள். படம் பிடிப்பார்கள். வீடியோ கெமரா மூலம் வீடியோ பதிவை மேற்கொள்வார்கள். முப்பது வருடமாக இந்த ஏரியே என்னை வாழ வைக்கின்றது” என்கிறார் இம்தியாஸ் யூஸுப்.
“எனது அனைத்து ஆவணங்களிலும் தொழில் மீனவர் என்றே பதிந்துள்ளேன். எனக்கு ஏனைய எவ்வித தொழிலும் தெரியாது. தினமும் குறைந்தது பத்து கிலோ மீன்களையே பிடிக்க இயலும். சில நாட்களில் இதுவும் கிடைக்காது போய்விடும். இத்தொழிலின் மூலமாக கிடைக்கும் வருவாயின் மூலமாகவே எனது குடும்பத்தை வாழ வைக்கின்றேன்.
பாலத்திலிருந்து மக்கள் எங்களை விநோதமாக பார்வையிடுவார்கள். இந்த ஏரியில் மீன் பிடித்து சீவியம் மேற்கொள்ளும் நாங்கள் பல்வேறு இன்னல்களையும் இத் தொழிலில் தொட்டுப் பார்த்துள்ளோம். இவ் ஏரியைச் சுற்றிவர வங்கிகள், அரச நிறுவனங்கள், இராணுவ முகாம் என அனைத்தும் இணைந்து இருப்பதால் சில நாட்களில் பாதுகாப்பு காரணத்திற்காக படையினரால் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அன்றைய தினம் எங்களுக்கு கறுப்புத் தினமாக மாறிவிடும்.
யுத்த காலத்தில் பெரும் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கொழும்பில் எங்காவது குண்டு வெடித்தாலோ அல்லது வேறு சம்பவங்கள் அக்காலத்தில் இடம்பெற்றால் எங்கள் தொழிலும் பாதிக்கப்படும்” என்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்த காலத்தில் இப்பகுதி அதி பாதுகாப்பு வலையமாக இருந்தது. இதனால்
இடையிடையே பாதுகாப்பு காரணத்திற்காக மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டது. யுத்தம் இறுதிகட்டத்தை எட்டிய தருணத்தில் 2009 ஆம் ஆண்டில் இவ் ஏரியில் மீன்பிடித்தமைக்காக கொம்பனித் தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஒரு நாள் பொலிஸ் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டேன்.
மறுநாள் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 5000 ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டேன். பிடிக்கப்பட்ட மீன்கள் உயிரோடு வைக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் மீண்டும் அம்மீன்கள் ஏரியில் விடப்பட்டன.
மழை அதிகமாக பெய்யும் காலத்தில் ஏரியில் பாசி படிந்து நீர் பச்சை நிறமாக
மாறிவிடும். இது மீனவர்களான எங்களுக்கு பெரும் தொல்லையாகும். பாசி
படர்ந்திருப்பதினால் வலையை நீரில் போட இயலாது. நாங்களே இப்பாசியை பெரும் சிரமத்தோடு அகற்றுவோம். அத்தோடு ஜப்பான் பஜ்ஜிரி எனப்படும் நீர்த்தாவரமும் மழையோடு வளர்ந்து ஏரியை முற்றாக மறைத்துவிடும். இத்தாவரம் போர்த்துக்கீசரால் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நீர் தாவரம், ஒல்லாந்தரிடமிருந்து கோட்டைப் பகுதியைக் காப்பாற்ற ஏரியில் வளர்க்கப்பட்ட தாவரமாகும். இதையும் நாங்களே சுத்தம் செய்வோம். வெளிநாட்டு அரச தலைவர்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து இவ் வீதியால் பயணிக்கையில் பாதுகாப்புக் காரணத்திற்காக எங்களுக்கு பாதுகாப்புப் பிரிவினரால் தடை விதிக்கப்படும். அவ் வாகனங்கள் இவ் வீதியை கடந்த பின்னர் மீண்டும் தொழிலில் இறங்க அனுமதிக்கப்படுவோம்.
நாங்கள் வலை வீசியே மீன்களைப் பிடிப்போம். வலையில் சிறிய மீன்களும், குஞ்சுகளும் அகப்பட்டுக் கொள்ளும். அவைகளை ஏரி தண்ணீரில் விட்டு விடுவோம். இது எங்களின் மீனவ தொழிலின் தர்மமாகும். பெரிய மீன்களை வலையிலிருந்து எடுத்து ஏரி நீரில்ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வலை கூட்டுக்குள் போட்டு வைத்து விடுவோம். நீரில் நான்கு தடிகளை நாட்டி வலையினால் இக்கூடு அமைக்கப்படும். இக்கூட்டுக்குள்ளேயே பெரிய மீன்களை சேகரித்து அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் வெளியே எடுத்து கூடைகளில் வைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்வோம். இன்று உயிரோடு உடல் சூட்டோடு இருக்கும் மீன்களையே நுகர்வோர் விரும்புகின்றனர்” என்கிறார் இம்தியாஸ்.
“காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பிடிக்கப்படும் மீன்களை நான் தெமட்டகொடைப் பிரதேசத்தில் விற்பனை செய்வேன். இரவு10 மணி முதல் மறுநாள் விடிய 2 மணிவரை பிடிக்கப்படும் மீன்களை விடியற்காலையில் பேலியாகொடை மீன் சந்தையில் விற்பனை செய்வேன். சில நேரங்களில் சில ஹோட்டல் உரிமையாளர்கள் ஏரியில் வைத்தே அதிகாலையில் கொள்முதல் செய்வர். இவ் ஏரியில் இரவு வேளையிலேயே நிறைய மீன்கள் வலையில் சிக்குப்படும். இந்த ஏரியில் “பட்டோ” எனக் கூறப்படும் மீன் இனமே காணப்படுகின்றது. இம்மீனுக்கு நல்லதோர் சந்தை வாய்ப்பு உள்ளது.
1980 களில் இவ் ஏரி தண்ணீரை குடித் தோம். இவ் ஏரியில் குளித்தோம். இன்று இவ் ஏறியின் சுற்றாடல் மாசடைந்து விட் டது. ஏரியின் அனைத்து பகுதிகளிலும் நிறு வனங்கள் எழும்பிவிட்டன. இந் நிறுவன கழிவு நீர் இந்த ஏரியிலேயே விடப் படுகிறது” என்றார் இம்தியாஸ் கவலை யோடு.







0 Comments