சவூதி
அறேபியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கு
அந்நாட்டு அரசினால் வழங்கப்பட்ட விஷேட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் முடிவடைகின்றது.
இந்நிலையில்
, பொது மன்னிப்புக்கு உட்பட்ட சுமார் பத்தாயிரம் இலங்கையரும் நாடு
திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை
வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு
மே மாதம் 4 ஆம் திகதி முதல் இன்று ( நவம்பர் 3 ஆம் திகதி) வரை இந்த பொது
மன்னிப்புக் காலம் அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே
சுமார் 16,000 இலங்கையர்கள் சவூதி அறேபியாவில் சட்ட விரோதமாகத்
தங்கிருப்பதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதுவராலய தகவல்கள் மூலம்
அறியமுடிந்ததாய் பிபிஸி தெரிவித்துள்ளது.
இலங்கை
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் துணைப் பொது முகாமையாளரும்
ஊடகப் பேச்சாளருமான மங்கள ரந்தெனிய , பொது மன்னிப்பு வழங்கப்பட்ட
காலத்துக்குள் அதனைப் பெறத் தகுதியுடைய சுமார் 10, 000 பேரும்
நாட்டுக்குத் திருப்பி அழைக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்.
மேலும் , பெண்கள் உட்பட ஏனைய 6,000 பேரைப் பொறுத்தவரையில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்தாலும் சவூதி அறேபிய அரசாங்கத்தின் பொது மன்னிப்பு வரையறைக்குள் அவர்கள் உட்படாதவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது
விசா இன்றித் தங்கியிருந்தமை, கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்யாமை
போன்ற அந்த நாட்டு சட்ட திட்டங்களை இவர்கள் மீறியதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியானவர்களை
நாட்டுக்குத் திருப்பி அழைப்பதற்கான முயற்சிகள் சவூதியில் உள்ள இலங்கைத்
தூதுவராலயத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் ,அவர்களை நாட்டுக்கு
அழைப்பது தொடர்பில் பிரச்சினையாகவே உள்ளது என்றும் , ஆயினும் இதற்கான
முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் மங்கள ரந்தெனிய
பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்.
பொது
மன்னிப்புக் காலத்துக்குள் வெளியேற வேண்டுமென்ற அறிவிப்பு வெளியானதும் ,
தாங்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதாக நாடு திரும்பியவர்களில் ஒருவரான
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானைச் சேர்ந்த சின்னராசா சிவநிதி
தெரிவித்தார்.
முகவர்கள் ஊடாகத் தொழில் பெற்று அந்த
நாட்டுக்கு சட்ட ரீதியாகச் சென்றும் , தொழிலிலும் சம்பளத்திலும்
ஏமாற்றப்பட்டதன் காரணமாகவே சட்ட விரோதமாகத் தங்கியிருந்து வேறு இடங்களில்
தொழில் புரிய நேரிட்டதாக அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.
காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மத் சஜீத்,
பொது மன்னிப்புக் காலம் முடிவடைவதற்கு அண்மித்த நாட்களில் அந்நாட்டுக்
காவல் துறையினரின் சோதனைகளும் கெடுபிடிகளும் அதிகரித்திருந்தது
என்கின்றார்.
நாடு
திரும்புவதைத் துரிதப்படுத்துவதற்காகவும் அதற்கான வேலைகளை இலகுவாகச்
செய்வதற்கும் மேலதிக செலவாக 1500 சவூதி ரியால் தனக்குத் தேவைப்பட்டதாகவும்
அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
உள்நாட்டில்
தங்களால் தொழில் பெற முடியாத நிலையே தொடர்ந்தும் இருப்பதால் மீண்டும்
வேறொரு நாட்டிற்கு தொழில் நிமித்தம் செல்வதையே அவர்களில் பலரும்
விரும்புகின்றார்கள்.
பொது
மன்னிப்புக் காலத்திற்குள் வெளியேறத் தவறி, தொடர்ந்தும் சட்ட விரோதமாகத்
தங்கியிருப்பவர்களுக்கு எதிராக தமது நாட்டு குடிவரவுச் சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே சவூதி அறேபியா அறிவித்துள்ளது.
அதாவது
, சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்களுக்கு 2 வருடச் சிறைத்தண்டனை அல்லது
சுமார் 10,000 சவூதி ரியால் தண்டம் விதிக்க நேரிடும் என அந்நாட்டுச்
சட்டம் கூறகின்றது. (தகவல் : BBC )

0 Comments