எமது
பிரதேசத்தில் வாழும் விஷேட ஆற்றல்மிக்கவர்கள், எமது சமூகத்திற்கு
பிரத்தியேகமான சேவைகளை வழங்கிவரும் தனித்துவமானவர்கள் எனக்குறிப்பிட்டுச்
சொல்லக் கூடியவர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகும்.
இம்முயற்சி, பிறர் புகழ்பாடும் நோக்கமல்லாது அல்லாஹ் வழங்கிய ஆற்றல்களையும்
அருட்கொடைகளையும் பயன்படுத்தி சமூகப்பணி புரிபவர்களை முன்னுதாரணமாக
காட்டி, எம்மில் பலரையும் இச்சமூகப் பணிக்காகத் தூண்டுவதாகும். இந்த
வகையில் மண்ணின் மைந்தர்கள் பகுதியில் இம்முறை இளம் சமூக ஆர்வலர் ஒருவரை
உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றோம்.
————————————————————————————————————————————————————————-
புத்தளத்திற்கு
தேசிய சர்வதேச மட்டத்தில் அறிமுகத்தையும் புகழையும்
தேடித்தந்துக்கொண்டிருப்பவர் சதாம் சாஜஹான். இவர் பற்றி பல வியத்தகு
தகவல்கள் இருந்த போதிலும் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன். இவருடைய இச்செயற்பாட்டிற்கு அவருடைய பெற்றோர்கள் முழு ஒத்துழைப்புக்களையும் உற்சாகத்தையும் வழங்கிவருகின்றமை ஏனைய பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாகும்.
இலங்கையில் பொதுநலவாய மாநாடு
நடைபெறவிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது புத்தளம் மண்ணின் மைந்தர்களும்
இதில் தங்களாலான பங்களிப்புகளை செய்துவருவதை புத்தளம் ஓன்லைன் மூலம்
அறிந்துவருகின்றோம்.
இவ்வகையில் புத்தளத்தைச் சேர்ந்த சதாம் ஷாஜஹான்
என்பவரை அறிமுகம் செய்கின்றோம். இவர் 1991.02.20 ம் திகதி புத்தளத்தில்
ஷாஜஹான் (சாரா டெக்ஸ்) மும்தாஜ் ஆசிரியை தம்பதியினருக்கு இரண்டாம்
பிள்ளையாக பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை 1996 ம் ஆண்டு புத்தளம் பாத்திமா
மகளிர் கல்லூரியில் தரம் 2 வரை பூர்த்திசெய்துவிட்ட அவர், 1999 ம் ஆண்டு
தரம் 5 வரை புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பிரிவில் கற்றுக்கொண்டார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்ற சதாம் புத்தளம் மாவட்டத்தில் முதல் மாணவனாக தெரிவாகினார்.
இதனால் கொழும்பிலுள்ள டி.ஸ். சேனநாயக்கா கல்லூரியில் தரம் 6 தொடக்கம் கற்பதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிட்டியது.
இது அவரது வாழ்க்கையில்
திருப்பத்தை ஏற்படுத்தியது என்று கூறும் அவர் க.பொ.த.சாதாரண வகுப்பு வரை
அங்கு கல்வி கற்றார். இதன் போது பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில்
பல திறமைகளையும் வெளிப்படுத்திய சதாம் டி.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் உள்ள
25 கழகங்களில் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டார். குறிப்பாக சர்வதேச
செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச கிரிக்கட் கவுன்சில் போன்ற கழகங்களில் தன்னை
அங்கத்தவராக இணைத்துக்கொண்டு பல சமூகநல செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
டி.எஸ். சேனநாயக்கா கல்லூயில் 150 க்கும் மேற்பட்ட பாடசாலைக் கழகங்கள் உள்ளன.
எனினும்; க.பொ.த உ.த பரீட்சையை புத்தளத்தில் கற்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. தனது
தந்தைக்கு கட்டுப்பட்டு புத்தளத்தின் இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில்
2008 – 2010 கல்வியாண்டில் உயர் தர கணிதப் பிரிவில் கற்றுக் கொண்டார்.
புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பிரிவில் அவர் தரம் 4 ல் கற்கும் போது மாணவத் தலைவர் பொறுப்பும் தரம் 5 ல் கற்கும் போது
சிரேஷ்ட மாணவத் தலைவர் பொறுப்பும் சதாமுக்கு வழங்கப்பட்டதால் தலைமைத்துவ
ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கான முதல் சந்தர்ப்பம் அவருக்கு கிட்டியது.
அவருக்கு
வழங்கப்பட்ட மாணவத் தலைவர் பொறுப்புக்கள் மூலம் ஆளுமையை வளர்த்துக் கொண்ட
சதாம் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென அந்த பிஞ்சு காலத்திலிருந்தே
அவரது மனதை உறுத்திக்கொண்டிருந்தது.
தனது
க.பொ.உயர்தரத்தை பூர்த்திசெய்துகொண்ட சதாம் கொழும்பு பல்கலைக்கழகத்தில்
வெளிவாரியாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பக் கல்வியையும், மாலபே சினெக்
கல்லூரியில் இயந்திர மற்றும் இலத்திரனியல் பொறியியல் கற்கை நெறியையும்
பூர்த்திசெய்துள்ளார். எனினும் தனது இக்கற்கை நெறிக்காக அவர் சமர்ப்பித்த “சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரத்தை சிக்கனப்படுத்தல்”
என்ற ஆய்வு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும் தான் செய்த ஆய்வு சரியானது என
100 வீதம் நம்பிய அவர், தான் செய்த ஆய்வு சரியானதா அல்லது பிழையானதா எனும்
தேடலில் இறங்கினார். இதற்கு இணைய உலகம் மிகவும் உதவியது.தனது ஆய்வை மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பித்து வெற்றியும் கண்டார்.
2012 ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரியோ நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் “புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான இளைஞர் மாநாட்டில்”
கலந்துகொள்ளவருமாறு அழைப்புவந்தது. எனினும் இதற்கான முழு செலவையும்
மாநாட்டுக்கு செல்கின்றவர்களே பொறுப்பேற்றாக வேண்டும். இதற்காக 500,000.00
இலங்கை ரூபாய்கள் தேவைப்பட்டது. இதற்காக இளைஞர் விவகார அமைச்சு உட்பட
புத்தளத்தின் அதிகார மிக்கவர்கள் போன்றவர்களிடம் இதற்கான அனுசரனையை
வழங்குமாறு கோரப்பட்டபோதும் எவருமே இதற்கு செவிசாய்க்கவில்லை. எனினும் தனது
தந்தை முழு செலவையும்
பொறுப்பேற்று அங்கு அனுப்பிவைத்தாக கூறுகின்றார் சதாம்.
இருவாரங்கள் நடைபெற்ற இம்மாநாடு
பல புதிய அனுபவங்களையும் புதிய தொடர்புகளையும் ஏற்படுத்தியது. இதன்போது
அங்கு வருகைத்தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் விவகாரங்களுக்கு
பொறுப்பான அதிகாரியிடம் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இதன் பயனாக இலங்கை சர்வதேச இளைஞர் மன்றம் (IYCSL) இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டு அதன் தலைவராக சதாம் செயற்படுகின்றார்.
இதற்குமுன் 2007 ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட உலகக்கிண்ண கிரிக்கட்
சுற்றுப்போட்டியில் அனுசரணையாளர்களுக்கு உதவியாளராக செயற்படும்
சந்தர்ப்பம் சதாமுக்கு கிடைத்தது. இது சர்வதேச அறிமுகத்தை அவருக்கு
முதன்முதலில் பெற்றுக்கொடுத்தது.
அதன் பின் இலங்கையில் நடைபெற்ற 20 க்கு 20 கிரிக்கட் சுற்றுப்போட்டியில் Volunteer team leader ஆக செயற்பட வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து இலங்கையில் இடம்பெற்ற Nation trust Bank முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் போது முதலுதவி அலுவலராக செயற்படும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.
இவ்வாறான சமூக ஈடுபாடுள்ள சதாம் இந்தோனேசியாவில் நடைபெற்ற Global Youth Forum மாநாட்டில் கொழும்பிலிருந்து வீடியோ வழியாக கலந்து கொண்டார்.
மலேசியாவிலுள்ள ஐ.நா.விற்கும்
இலங்கை IYCSL க்கும் இடையில் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்திற்கான
புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் சதாம் மேற்கொண்டுள்ளார்.
அநாதைகளுக்கு கற்பித்தல் போன்ற சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இவர் அமெரிக்காவின் IDEAS for Us உடன் இணைந்து சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுக்கும் செயற்பாடுகளிலும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றார்.
உலக இளைஞர் காங்கிரஸின் இலங்கையின் முதலாவது தூதுவராகவும் இவர் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக
பல பொது சேவைகள் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட சதாம் டி.ஸ்.சேனநாயக்கா
கல்லூரியில் தன்னோடு சாதாரண தரம் கற்ற 10 சகமாணவர்களையும் இணைத்துக்கொண்டு
தலா 4500.00 ரூபா வீதம் ஒன்று சேர்த்து Stock Market ல் 45,000.00 ரூபாயை முதலீடு செய்தனர். இதில் கிடைத்த இலாபத்தைக்கொண்டு முடியுமான சமூகநலத்திட்டங்களை மேற்கொண்டார்.
தமிழ்,
சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம்பெற்றுள்ள சதாமுக்கு
ஹிந்தி மொழியை ஓரளவு பேசவும் முடியும். தற்போது அறபு மொழியை கொழும்பில்
கற்றும் வருகின்றார்.
புத்தளம் சீமெந்து கூட்டுத்தாபனத்திலும் புத்தளம் காற்றாடி மின் ஆலையிலும் துறைசார்ந்த பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.
இவ்வாறான சமூக புனரமைப்பு
செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், IYCSL ஊடாக இச்செயற்பாடுகளில்
ஈடுபடுவோருக்கு அனுசரனையும் வழங்கிவருகின்றார்.
தற்கால சிறுவர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளை இளைஞர்கள் எவ்வாறு கையாள்வது என்ற தலைப்பிலான செயற்பட்டறை
2013 நவம்பர் 02 ம் திகதி கொழும்பில் இவரது தலைமையில் நடைபெற்றதும்
குறிப்பிடத்தக்கது.
மேற்கூறப்பட்டுள்ள
வியத்தகு செயற்பாடுகளில் தனது 22 வயதிலேயே சதாம் சாதித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் எமது புத்தளம் சமூகத்திற்கும் முழு மனித
சமூகத்திற்கும் பல சேவைகளை செய்ய வேண்டுமென அல்லாஹ்விடம்
பிரார்த்திக்கின்றோம்.











0 Comments