இன்றைய சூழலில் தட்டிகொடுப்பும்
ஊக்கப்படுத்தலும் அருகி வரும் நிலையில் வெறும் பார்வையாளர்களாக மட்டும்
இராது மாபெரும் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்து தட்டிக்கொடுக்கும் சமூகமாக
தன்னை இனங்காட்டியிருக்கிறது புத்தளம் சமூகம்.
பல்வேறு மட்டங்களில் புத்தள மண்ணிற்கு
அடையாளம் பெற்றுதந்தவர்களை வரவேற்கும் ஊர்வலம் 2013-11-20 அன்று புத்தளம்
பிரதான சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பமாகி நகரின் பிரதான வீதிகளின் ஊடாக
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையை வந்தடைந்து.
வீதியின் இருமருங்கும் மக்கள் அலை காரை
(கரையை) அண்மித்து கைகளை வருடியது. பிளாஸ்டிக் பூக்கள் ஒன்று சேர்ந்து
மாலைகளாக கழுத்தில் ஏறி உட்கார்ந்தன. போலிஸ் வண்டி முன்னாள் செல்ல
வாகனங்கள் புடைசூழ செல்ல மகிழ்ச்சி பொங்கி வழிந்தது இரு பக்கமும்.
“மண்ணை மானிடம் அறிய செய்த
மகிழ்ச்சியில்
மனம் நெகிழ
மன்னார் வீதி
மக்கள் மட்டுமல்ல
முழு புத்தளமும்
ஒற்றுமையோடு
ஒன்று சேர்ந்தது
ஊக்கப்படுத்தலுக்காக
உந்துசக்திக்காக”
மகிழ்ச்சியில்
மனம் நெகிழ
மன்னார் வீதி
மக்கள் மட்டுமல்ல
முழு புத்தளமும்
ஒற்றுமையோடு
ஒன்று சேர்ந்தது
ஊக்கப்படுத்தலுக்காக
உந்துசக்திக்காக”
புத்தளத்தின் தலைமை பெரியப்பள்ளி,
நூற்றாண்டு கடந்து பயணிக்கும் காசிமிய்யா அரபுகல்லூரி என்பன வயதிலும் சிறிய
இளசுகளுக்கு மாலை அணிவித்து பரிசில்கள் வழங்கியது மண்ணின் மீதுள்ள
பற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மக்கள் மனதில் பதிவானது. அதனோடு
அடங்கலாக இந்து பரிபாலான சபை பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தது
இனங்களுக்கிடையான சகோதரத்துவம், மண் வாடை என்பனவற்றை மேலோங்கி காட்டியது.
நகர சபைத்தலைவர் பல்வேறுப்பட்ட பணிகளுக்கு
மத்தியிலும் வரவேற்பு நிகழ்வை ஒழுங்குப்படுத்தியிருந்தமை ஊக்கப்படுத்தலின்
அனுகூலங்களை உணர்த்தியது எம்மவர்களுக்கு. புத்தளம் வலயக் கல்விப்
பணிமனையின் தமிழ்ப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.
இஸட்.ஏ.ஸன்ஹீர் அவர்களின் ஊக்கப்படுத்தலும், நெறியாள்கையும் இவ்வூர்வலத்தை
சிறந்த முறையில் முன்னெடுக்க உதவி புரிந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாக
அமைந்தது.
எதிர்காலத்தில் நினைவுகளை மீட்ட நினைவு
சின்னங்கள் வழங்கப்பட்டதும், தம்மை போன்ற இளசுகளுக்கு தமது அனுபவ
கருத்துகளை கூறியதும் தட்டிக்கொடுக்கும் பண்பாக மின்னியதை சபையோரின்
மகிழ்ச்சியும், கைத்தட்டல்களும் வெளிக்காட்டியது.
இலங்கையில் நடைபெற்று முடிந்த
இருபத்திமூன்றாவது பொதுநலவாய மாநாட்டின் போது ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற
பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் பல்வேறு அமைப்புகள் ஊடாக புத்தளத்தை
பிரநிதித்துவப்படுத்தி புத்தளம் மண்ணிற்கும் புத்தளம் மக்களுக்கும் தேசிய
அளவிலும் சர்வதேச மட்டங்களில் அடையாளத்தையும் பெருமையையும் பெற்றுத்தந்த
இளைஞர் யுவதிகள் இந்த நிகழ்வின் போது கெளரவப்படுத்தியதன் ஊடாக
எதிர்காலத்தில் தமது பணிகளை திறம்பட செய்ய ஊண்டுகோளாக அமையும் என்பதில்
சந்தேகமில்லை எனலாம். இவர்களுக்கு அப்பால் இவர்களை போன்ற இளைஞர் யுவதிகள்
வெறுமனே அடிமட்டத்தில் இருக்காது இது போன்று பல்வேறு மட்டங்களிலும் வளர ஒரு
வழிகாட்டலாகவும் அமையும்.
அதனோடு சேர்த்து இலங்கை உதைப்பந்தாட்ட
சம்மேளனத்தில்(FIFA) பொருளாளராக தெரிவாகியுள்ள, தேசிய மட்டத்தில்
புத்தளத்தின் பெயரை உச்சரித்த நடுத்தரவயது மனிதர் கெளரவப்படுத்தப்பட்டதன்
ஊடாக சிறந்த வழிகாட்டல் ஒன்று வழங்கப்பட்டது. தமது அன்றாட வாழ்க்கைக்கு
அப்பால் ஏனைய துறைகளில், சமூக சேவையில் ஈடுப்பட உதவி செய்யும்.
2013 ஆண்டு 5ம்தர புலமைப் பரிசில்
பரிட்சையில் சித்திபெற்று புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புத்தளம்
மணல்குன்று அல்-அஷ்ரக் மகா வித்தியாலய மாணவி பஸ்லா பிர்தவ்ஸ்
கெளரவப்படுத்தப்பட்டதன் மூலம் சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு காரணமாக அமையாது
என்றாற்போல் கூறப்பட்டது. படிப்பே எமக்கு ஒரு பொக்கிஷம். இளம் சிறுசுகள்
உல்லாசமாக தமது சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்தது நாளை நாமும் இவ்வாறு
வாழ்த்தப்படுவோம் என்று ஒரு குறிக்கோளை உண்டாக்கியது.
குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் புத்தள
மண்ணிற்கு பெருமை தேடித்தந்த இளைஞர் யுவதிகள், நடுத்தரவயது மனிதர், சிறுமி
ஆகியோர் ஒருசேர இவ்வாறு ஊக்கப்படுத்தும் விதமான செயற்பாடு பல்வேறு
மட்டங்களில் சிறப்பானதொரு பயணமாக அமையக்கூடும். இளைஞர் யுவதிகள்,
நடுத்தரவயது மனிதர்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் என பல்வேறு
பிரிவினருக்கும் உற்சாகத்தையும் உந்துசக்தியையும் நிச்சயம் வழங்கி
இருக்கும்.
தட்டிகொடுப்பும் உற்சாகப்படுத்தலும்
ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் அவசியமாகிறது. அதுவே இன்னும் இன்னும்
சாதிப்பதற்கு உதவிபுரிகிறது. சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு
வழிகாட்டுகிறது. சமூக தொண்டாற்றும், தட்டிக்கொடுக்கும் உள்ளங்கள்
அனைவருக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் துணைபுரிவானாக.
மெல்ல ஏறிவரும் படிக்கட்டுகளுக்கு, ஏற
நினைக்கும் படிக்கட்டுகளுக்கு இவ்வாறன தட்டிக்கொடுப்புகள் சிகரத்தை அடைய
உதவி செய்யும் என்பது திண்ணம்.



0 Comments