புத்தள களப்பு தொடங்கி இன்று கல்பிட்டி
வரை உல்லாசத்துறைபிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் வெளிநாட்டு
மக்களிலிருந்து உள்நாட்டு மக்கள் என அனைவரும் இயற்கை எழில் பிரதேசங்களை
மற்றும் செயற்கை வடிவமைப்புக்களை பார்வையிட வந்து போகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் கல்பிட்டி வீதியில்
ஆலங்குடா பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சவுக்குத் தோட்டம் மக்கள்
மத்தியில் மிக பிரபல்யம் பெற்று திகழ்கிறது. ஒரு நாளைக்கு சராசரி
நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வந்து போகின்றனர்.
அதிலும் குறிப்பாக விடுமுறை தினங்களில்
மக்கள் வெள்ளம் போல திரண்டு வருகின்றனர். சந்தோஷமாக, குதுகலமாக தமது
விடுமுறையை களித்துச் செல்கின்றனர்.
இன வேறுபாடின்றி சிறுவர் முதல்
வயோதிபர்கள், ஆண்கள், பெண்கள் என என்னை நாடி வந்து பொழுதை களிப்பது எனக்கு
ஒருபுறம் பெருமையாக இருந்தாலும் மறுபுறம் ஏன் வருகிறார்கள் என்று நினைக்க
தோணுகிறது.
என்னை
நாடி குடும்பங்கள் சகிதம், வாலிபர் குழுக்கள் சகிதம் வருகிறார்கள்.
காலையில் வரும் குடும்பங்கள் சில சந்தோஷமாக கூட்டாக சமைத்து சாப்பிடுவர்.
சிறுவர் சிறுமிகள் குதுகலமாக ஓடித் திரிவர்.
மாலையில் வரும் குடும்பங்கள் சில கடலோர
காற்று வாங்கி கொண்டு என்னை இரசிப்பர். என்னோடு சேர்ந்து புகைப்படம்
எடுத்து மனமகிழ்வர். இவர்களோடு சேர்ந்து நானும் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
நாள் போவதே தெரியாது.
என்னை தேடி தூர பிரதேசங்களில் இருந்து
வரும் உங்களை நான் மகிழ்விக்கிறேன். உங்கள் குதுகலத்தில் நானும் பங்காளியாக
இருக்கிறேன் எனும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, மிக
திருப்தி கொள்கிறேன்.
இருந்தாலும் மனதை புண்படுத்தக் கூடிய,
மனம் சஞ்சலப்பட கூடிய சில விடயங்களும் இருக்கத்தான் செய்கிறது.
குடும்பங்கள், இளைஞர் யுவதிகள் என்னை நாடி வந்து இன்பமாக, சந்தோஷமாக
இருக்கிறார்கள். அதேநேரம் அவர்கள் கொண்டு வரும் பொருட்கள், கழிவுகள்
போன்றவற்றை கண்ட கண்ட இடங்களில் போட்டு அசுத்தப்படுத்துகின்றனர்.
எனது இயற்கை அழகை சீர்குலைகின்றனர். எனது
வளங்களை நாசப்படுத்துகின்றனர், பாழ்படுத்துகின்றனர். இது மட்டுமா..இல்லை
இன்னும் இருக்கிறது.
களப்போரத்தில் ஆண்,பெண் கலப்பு சமூக
கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கின்றது. கடலோர காற்று வாங்கியபடி
கைபிடித்து திரிவது, எனது மரக்கீழ் இருந்தவாறான கொஞ்சல்கள் என்று
நீள்கிறது. பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கிறது. வாருங்கள் போங்கள் ஆனால்
அனாச்சாரங்களுக்கு வழிவகுக்காதீர்கள் என்றே கூறுகின்றேன்.
இளைஞர் படை பட்டாளங்களே விடுமுறையை
கழிக்க, வாலிப வயது அட்டகாசங்களை நிகழ்த்த என்னை தேடி வந்து பரிதாப நிலையை
உருவாக்குகின்றீர்கள், என்னை கண் கலங்க செய்கிறீர்கள். நீச்சல் தெரியாது
கடல் ஓரங்களில் சந்தோஷமாக குளியலில், அலை சந்தோஷமடைந்து அள்ளி செல்லும்
சம்பவங்களும் என்னில் இடம் பெற்றுள்ளது.
எந்நேரமும்
கடல் மாதா அமைதியாக இருப்பாளா..இல்லை, சில போது எமது அட்டகாசங்களை ரசிக்க
கூடும். நாம் தான் அமைதியாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அண்மையில் கல்பிட்டி பிரதேச சபையால்
இவ்வாறாக சமூக சீரழிவுகள், உயிராபத்துக்கள் தொடர்பில் பள்ளிவாயல் ஊடாக
அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நான் மீண்டும் சொல்கிறேன். என்னை தேடி
வந்து விடுமுறையை களித்து நீங்கள் திருப்தி அடையும் போது, என்னையும்
திருப்தி அடைய செய்யுங்கள், எனக்கு கேட்ட பெயர் ஏற்படுத்தி தராதீர்கள்.
சவுக்குத்தோட்டம் – குடும்பங்கள் – இளைஞர் யுவதிகள் – சவுக்கடி..








0 Comments