அவ்ரத்: பெண் தலை முதல் பாதம் வரை மறைப்பது போல் தான் ஆண் முழங்கால் தொடைகளை மறைப்பதுவும், முக்கால்சட்டைகளுக்கு குறைந்த ஆடைகளை (ஆண்கள்) கண்டிப்பாக தவிர்ப்போம்!
அவ்ரத் வரைமுறைகள் இரு பாலாருக்கும்
உரியவை, யுவதிகள் ஹிஜாபுக்காக போராட வாலிபர்கள் ஜட்டி ஜங்கிகளுடன் அலையலாமா?
முஸ்லிம்களைப் பொறுத்தவரை நடை உடை பாவனைகளுக்கான வரைமுறைகள் இருக்கின்றன, அதனடிப்படையில் தான் எமது கலாசார பாரம்பரிய மரபுகள் கட்டி எழுப்பப் பட்டுள்ளன.
அந்த வகையில் ஆண்கள் பெண்களுக்கான ஆடைகளைப் பொறுத்தவரை "அவ்ரத்" கட்டாயம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து எமக்கு தெளிவாக சொல்லித் தரப்பட்டிருக்கிறது.
பெண்களைப் பொறுத்தவரை முகம் கரங்களை மறைத்தல் கட்டாயமா இல்லையா என்பதனைத்தவிர பொதுவாக அவர்களது அவ்ரத் எதுவென்று பொதுவாக அறியப்பட்டுள்ளது.
அதேபோல் தான் ஆண்களது அவ்ரத்தைப் பொறுத்தவரையிலும் வயிற்றின் தொப்புள் முதல் முழங்கால் வரை கட்டாயமாக மறைக்கப்பட்ட வேண்டும் என்பதுவே பொதுவான கருத்தாகும்.
என்றாலும் மேலங்கி கீழங்கி என இறைதூதர் ஸல் அவர்கள் நபித் தோழர்கள், அவர்களது வழித்தோன்றல்கள் என தொன்று தொட்டு கண்ணியமான முஸ்லிம் ஆடை மரபுகள் தலைமுறை தலைமுறைகளாக பேணப்பட்டு வந்துள்ளன.
ஆண் பெண் ஆடை மரபுகளைப் பொறுத்தவரை கட்டாயமாக மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் தவிர்த்து ஆடைகளின் வடிவமைப்பு நிறம் என்பவற்றை அரபு கலாசார வடிவமைப்புகளில் கட்டாயம் கொண்டிருக்க வேண்டியதில்லை அவை உலகின் பல பாகங்களிலும் உள்ள சுவாத்தியங்களுக்கு தொழில்துறவுகளுக்கு ஏற்ப விஞ்ஞான சுகாதார ரீதியில் மாறுபட இடமிருக்கிறது.
அத்தோடு பெண்கள் அணிகின்ற ஆடை வடிவங்களில் ஆண்களோ, ஆண்களது ஆடை வடிவங்களில் பெண்களோ வேடமிடுவது அல்லது பிற சமய கலாசார மரபுகளை ஒத்த ஆடைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் தளர்வான ஜிப்பா குர்த்தா சிர்வால் அபாயா ஜில்பாப் தவிர்த்த ஆடைகளை தவிர்த்து இறுக்கமான டிரவுசர், ஷர்ட் ஆங்கிலேயர் ஆடைகளை அணிவதைக்கூட முன்னோர்கள் விரும்பவில்லை அது அவர்களது காலப்பிரிவில் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்ட பேணுதல்களுடன் கூடிய ஆடைக் கலாசாரமாக இருந்தது.
ஆடைகளைப் பொறுத்தவரை பாலுறுப்புக்கள் பாலுணர்வைத் தூண்டுகிற அங்க அவயவங்களை தளர்வான ஆடைகளால் மறைப்பது மனித நாகரீகத்துடன் பேணப்பட்டு வந்த நடைமுறையாகும், அதனையே இஸ்லாம் தெளிவாக வரையறை செய்துள்ளது.
என்றாலும் நவீன ஆடை வடிவமைப்புக்கள் பொதுவாகவே பாலுணர்வை இச்சைகளைத் தூண்டுகிற கவர்ச்சிகரமான விதங்களில் தான் வடிவமைக்கப்படுகின்றன.
அதற்காகவே வடிவமைப்புகளுக்கான பெஷன், மொடலிங் துறைகள் அறிமுகமாக்கப்பட்டுள்ளன, மேலதிகமாக ஆணழகன் அழகுராணி போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வருகின்றது.
தற்போதைய ஆடை வடிவமைப்புகளில் இருபாலார் ஈர்ப்புகளுக்கு அப்பால் மூன்றாவது பாலின ஓரின ஈர்ப்புக்களும் கவனத்தில் கொள்ளப்படுவது பகிரங்க இரகசியமாகும்.
கற்புநெறி அவ்ரத் சார் கட்டுக் கோப்புக்கள் பெண்களுக்கு மட்டும் உரியவை அல்ல, மாறாக ஆண்களுக்கும் பொதுவானவை.
பெண்களின் ஆடை வடிவமைப்புகள் இச்சைகளைத் தூண்டும் வண்ணம் அரைகுறையாக காலாகாலமாக இருந்து வந்தாலும் நவீன உலகில் ஆண்களது ஆடை வடிவமைப்புக்களும் இச்சைகளைத் தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
ஸ்லிம் பிட், லோ வைஸ்ட், டைட் பிட், டைட் ஷோர்ட்ஸ் என அங்க அவயவங்களை அளந்து காட்டுகிற இறுக்கமான உள்ளாடைகள் தெரிகிற கீழிறங்கிய மற்றும் கிழிந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப் படுகின்றன.
அதற்கு மேலதிகமாக தளர்வான த்ரீ குவாட்டர்கள் தற்பொழுது இருக்கமான அரைக் காற்சட்டைகளாக மாறிவருவதனையும் நாம் காணுகிறோம்.
அரபு நாடுகளில் அணிகிறார்கள், மன்னர்கள் அணிகிறார்கள், தலைவர்கள் அணிகிறார்கள், சவூதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன என்பதெல்லாம் எமக்கு மார்க்கம் ஆகாது!
அண்மைக்காலமாக சுற்றுலாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் என முஸ்லிம் இளைஞர்கள் ஆடைக் கலாசார கட்டுடைப்புகளில் ஆர்வம் காட்டிவருவதனைக் காண முடிகிறது, படங்களை எடுத்து பெருமையாக அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆடைக் கலாசாரம் தனிமனித சுதந்திரத்திற்கு அப்பால் ஒரு சமூகத்தின் கண்ணியம் காக்கும் தனித்துவமான அடையாளமாக இருந்திருக்கிறது, ஏனைய சன்மார்க்க கட்டுக் கோப்புகளை பேணுவதற்கான அரணாகவும் கருதப்படுகிறது என்பதனால் எமது சமூக கலாசார பாரம்பரியங்களை கட்டுடைக்காது பரஸ்பர புரிந்துணர்வுடன் கட்டிக் காப்பது எமது கூட்டுப் பொறுப்பாகும்!
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
0 Comments