பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பதவி விலகுமாறு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அழுத்தங்களை வழங்கி வருகின்ற நிலையில், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் நேற்று மாலை தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்னதாகவே கவிழும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுக ளாகவே பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை என பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு இம்ரான் கானின் மோசமான ஆட்சிமுறையே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன. இந்நிலையில் இம்ரான் கானுக்கு அவரது கட்சி எம்.பி.க்களே எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். சுமார் 22 எம்.பி.க்கள் பிரதமர் இம்ரான் கான் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு 2023 இல் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், தேர்தலை முன் கூட்டியே நடத்த வேண்டும் என்பது இம்ரானின் பிடிஐ கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது. இதுவரை கட்சி, கூட்டணிக் கட்சிகளிடமிருந்து உறுதியான சமிக்ஞைகள் ஏதும் கிடைக்காத நிலையில் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை தக்க வைக்க இம்ரான் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சியைத் தக்கவைத்து 2023 இல் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அவரின் திட்டம்.
0 Comments