2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போது இருந்த விளையாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு இந்திய அரசையும் இந்திய கிரிக்கெட் சபையையும் கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா இன்று வலியுறுத்தியுள்ளார்.
"நான் இனியும் அமைதியாக இருக்க மாட்டேன், இது ஒரு கடுமையான
குற்றச்சாட்டு, அவர் இவ் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.
அவரிடம் இக் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்த ஆதாரங்கள் இருந்திருந்தால்
கடந்த 9 வருடங்களாக ஏன் அமைதியாக இருந்தார்" என்று அரவிந்த டி சில்வா
கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெற்ற
ஆட்டநிர்ணயத்தின் போது தாம் எந்த ஒரு வீரரையும் தொடர்புபடுத்தி
குறிப்பிடவில்லை எனவும் கிரிக்கெட் துறையில் உள்ள அதிகாரிகளையே தாம்
குறிப்பிட்டதாகவும் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த
அலுத்கமகே நேற்று தெரிவித்தார்.
இதே வேளை, இலங்கை அணியின் தெரிவுக்குழுவில் பல சிக்கல்கள்
இருப்பதாகவும், 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியில்
செய்யப்பட்ட 4 மாற்றங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே
தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்துள்ள அப்போதைய தெரிவுக்குழுவின் தலைவராக
இருந்த அரவிந்த டி சில்வா, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், இக்
குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை சர்வதேச கிரிக்கெட் சபையின் முன்
முன்வைக்குமாறு முன்னாள் அமைச்சரைக் கோரியுள்ளார்.
அத்துடன் அணியில் சகலதுறை ஆட்க்காரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் காயம் காரணமாக
இறுதிப் போட்டியில் விளையாட முடியாது போனதால், அணியில் சமநிலையைப் பேண
இலங்கை அணியில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும்
அவர் கூறியுள்ளார்.
0 Comments